வேலியைப் பிரித்து ஆசிரியர்களின் விடுதிக் கதவைத் தட்டிய இராணுவம்!
‘முழங்காவில் மகாவித்தியாலயத்தில் வேலியைப் பிரித்துக் கொண்டு இராணுவத்தினர் உள்நுழைந்து ஆசிரியர்கள் தங்கியிருக்கின்ற விடுதியின் கதவைத் தட்டியுள்ளனர். விடுதியில் தங்கியிருந்த ஆசிரியர்கள் கூக்குரலிட்டுக் கத்திய நிலையில், ஊர்மக்கள் வந்தபோது இராணுவத்தினர் தப்பிச் சென்றுள்ளனர்’ என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்
யாழ்ப்பாணம் கட்டப்பிராயில் உள்ள அவரது வீட்டில் நேற்று (18-02-2016) நடைபெற்ற ஊடகவியியலாளர் சந்திப்பில் சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்ததாவது,
“முழங்காவில் மாகா வித்தியாலயலயம் என்பது தற்போது தேசிய பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்டிருக்கின்றது. அதற்கு அருகிலேயே சிறுவர் பாடசாலையும் இருக்கின்றது. இதன் அருகில் உள்ள பத்து ஏக்கர் காணியை இராணுவம் பிடித்து வைத்திருக்கின்றது.
இந்தக் காணியை முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் பாவித்தார்கள் என்ற காரணத்தைக் காட்டியே இராணுவம் வைத்திருக்கின்ற போதும் அந்தக் காணியானது தனிநபருக்குச் சொந்தமான காணியாகும். அந்தக் காணிக்குள் தற்போது இராணுவம் விவசாயம் செய்கின்றது.
இந்தநிலையில் இந்த மகாவித்தியாலயத்தில் ஆண்,பெண் ஆசிரியர்களுக்காக தங்குமிட விடுதிகள் இரண்டு இருக்கின்றது. இந்த விடுதியில் யாழிலிருந்து செல்கின்ற ஆசிரியர்கள் தங்கியிருந்து படிப்பிக்கின்றனர்.
இந்நிலையில் கடந்த மூன்று தினங்களிற்கு முன்பு அந்த வேலியைப் பிரித்துக் கொண்டு இராணுவத்தினர் உள்நுழைந்து ஆசிரியர்கள் தங்கியிருக்கின்ற விடுதியின் கதவைத் தட்டியுள்ளனர். இதன் போது அங்கிருந்த ஆசிரியர்கள் கூக்குரலிட்டுக் கத்தியுள்ளனர். இதன் பின்னர் வெளியாட்கள் வந்ததையடுத்து இராணுவத்தினர் தப்பிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து அந்தப் பிரதேசத்திற்குப் பொறுப்பான இராணுவ அதிகாரிக்கு அறிவிக்கப்பட்டு அவர்களும் சம்பவ இடத்திற்கு வந்து சென்றனர். இதன் போது குறித்த வேலியை அடைத்துத் தருவதாகவும் குறித்த இராணுவத்தினரை இடமாற்றம் செய்வதாகவும் கூறியுள்ளனர்.
இவ்வாறு இராணுவம் சொல்லிவிட்டுச் சென்றிருக்கின்ற போதும் அந்த வேலி இன்றுவரை அடைக்கப்படவில்லை. இராணுவத்தினரும் மாற்றப்பட்டனரோ தெரியாது. இவ்வாறு தான் நிலைமைகள் இருக்கின்றன.
இந்தப் பாடசாலைக்கு மேலதிகமாக காணிகள் தேவை. அதே நேரம் இந்தக் காணியானது பொதுமக்களுக்குச் சொந்தமான காணியாக இருக்கின்றது.
ஆகவே இராணுவம் தொடர்ச்சியாக இங்கிருப்பதன் காரணமாக பாடசாலையில் ஆசிரியர்கள் படிப்பதற்குப் பிரச்சினை, ஆசிரியர்கள் தங்கியிருப்பது பிரச்சினை, ஆசிரியர்களுடைய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான நிலை இவை எல்லாமே வந்திருக்கின்றது. இதனாலேயே நாம் தொடர்ச்சியாக சொல்கின்றோம்
இவ்வாறான பிரதேசஙகளில் இராணுவம் தேவையில்லை. மேலதிகமாக இருக்கின்ற இராணுவத்தை மீள எடுங்கள். இராணுவம் எங்கு இருக்கலாம் என்றால் தேசிய பாதுகாப்பு என்று கருதினால் அவ்வாறான பாதுகாப்பிற்கு குந்தகம் என்று அறிகின்ற இடங்கள் எங்கெங்கோ அங்கெல்லாம் இராணுவத்தை வைத்திருங்கள்.
இதனை விடுத்து பாடசாலைக்கு நடுவிலும் பொது மக்களின் வீடுகளுக்கு அருகிலும் பொது மக்களின் விவசாய நிலங்களிலும் இராணுவம் இருப்பதென்பது நிச்சமாக தமிழ் மக்களுக்குப் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தும். அதாவது அச்சுறுத்தல், கலாச்சார, நடமாட முடியாத பிரச்சினைகள் ஏற்படும்.
இராணுவ ஆக்கிரமிப்பு என்பது குறைக்கப்பட வேண்டுமே தவிர அதிகரிக்கப்பட முடியாது. இதே போன்று பிரச்சனைகள் முல்லைத்தீவின் கேப்பாப்புலவிலும் நடைபெற்றது. அங்கும் இராணுவம் வீட்டிற்குள் புகுந்திருக்கின்றது.
அது மட்டுமல்லாமல் இன்னும் பல இடங்களில் பல சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன. ஆனால் இன்னமும் கூட அரசாங்கம் இவர்களை வெளியேற்றுவதில் எந்தவித காத்திரமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்போது குறிப்பாக வலிகாமம் வடக்கைப் பற்றி மாத்திரம் தான் பேசப்படுகின்றது. அதாவது வலி வடக்கில் பொது மக்களின் காணிகளில் இருந்த இராணுவம் வெளியேற வேண்டுமென்பது சரி. ஆனால் அது வலிகாமம் வடக்கில் இருந்து மாத்திரமல்ல யாழ் குடாநாடு உட்பட வடக்கு மாகாணத்திலிருந்தே வெளியேற்றப்பட வேண்டுமென்ற தேவையை இராணுவத்தினரின் ஒவ்வொரு நாள் செயற்பாடுகளும் காட்டிக்கொண்டிருக்கின்றன.
ஆகவே இந்த அரசாங்கம் அதாவது நல்லாட்சி என்று சொல்லக் கூடிய இந்த அரசாங்கம் மக்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதாக சொல்கின்ற அரசாங்கமானது முதலாவதாக மக்களுக்கு பாதகாப்பை வழங்கும் வகையில் இந்த இராணுவத்தை இங்கிருந்த எடுக்காவிட்டால் கல்வி, பொருளாதாரம்,விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளும் பாதிக்கப்படும்.
இவ்வாறான சூழ்நிலை தொடராமல் சாதாரண சூழ்நிலை ஏற்படுத்தப்பட வேண்டுமாயின் உடனடியாகவே இராணுவத்தை வெளியேற்ற வேண்டுமென்பது தவிர்க்க முடியாததொரு விடயம்.”