மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க கொழும்பில் நடந்த கம்பன் விழா வில் இலங்கை ஒரு இனத்துக்குரிய நாடல்ல. அது பல்லின மக்களுக்கும் உரியது என்று தெளிவுபடக் கூறியமை அரசியல் புலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யதார்த்தத்தை உரைத்ததனாலேயே அந்தப் பரபரப்பு ஏற்படக் காரணம் எனலாம். பொதுவில் இலங்கை பெளத்த சிங்கள நாடு என்பதே நீண்டகாலப் பேச்சாக இருந்தது.
அந்தப் பேச்சில் பெரும் பங்கு வகித்த மக்கள் விடு தலை முன்னணி (ஜே. வி.பி) இன்று தனது நிலைப் பாட்டை மாற்றிக் கொண்டு இலங்கை சிங்களவர்களுக்கு மட்டும் உரிய நாடல்ல. இது சிங்கள தமிழ், முஸ்லிம் மக்களுக்கும் உரிய நாடென்று பகிரங்கமாக அறிவித்துள்ளது.
அதிலும் தமிழ் மக்களின் இலக்கிய விழா ஒன்றில் கலந்து கொண்ட போது ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க மேற்போந்தவாறு தெரிவித்தமை ஒரு முக்கியமான விடயம் என்பதை ஏற்றுத்தான் ஆக வேண்டும்.
இது குறித்து நேற்றைய தினம் இவ்விடத்தில் பிரஸ்தாபித்திருந்தோம். அநுரகுமார திஸாநாயக்கவின் கருத்தை வரவேற்ற தேசிய சுகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சரும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோ கணேசன் அவர்கள், அதிகாரப் பரவலாக்கலிலும் ஜே.வி.பி காத்திரமான வகிபங்கைக் கொண்டிருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளதுடன் அதிகாரப் பகிர்வு தொடர்பான தனது அதிகாரபூர்வமான நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.
அமைச்சர் மனோ கணேசனின் கருத்து ஏற்புடையது என்பதிலும் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
அதேவேளை ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க அதிகாரப் பகிர்வு என்பதைத் தாண்டி இலங்கை சிங்கள மக்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல என்று கூறியமை ஒரு பெரும் மாற்றம் என்பதை எவரும் மறுத்துவிட முடியாது.
அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஜே.வி.பியின் நிலைப்பாடு வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பது உண்மையா யினும் அநுரகுமார திஸாநாயக்காவின் உரை அதிகாரப் பகிர்வு என்பதையும் தாண்டி ஒரு நீண்டகால மரபை உடைத்து இலங்கையை சிங்கள மக்கள் தனித்து தமக்கான நாடாக உரிமை கோரமுடியாது என் பதை தெளிவுபடுத்தியுள்ளார்.
இத்தெளிவானது இன்றைய சூழ்நிலையில் கட்டாயமானதாகும். இலங்கை சிங்களவர்களுக்கு மட்டும் உரிய நாடு அல்ல என்பதை தமிழர்கள் சொல்வதைவிட சிங்களவர்கள் சொல்வது மிகவும் முக்கியமானது. அந்த முக்கியமான விடயத்தை தற்துணிவோடு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க கூறியுள்ளார்.
எனவே இப்போது நாம் கேட்பது எல்லாம் அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஜே.வி.பியின் நிலைப்பாடு என்ன? என்று கேள்வி எழுப்பும் அமைச்சர் மனோ கணேசன் அவர்கள் தமிழ் மக்களிடம் ஓர் உண்மையை முதலில் கூற வேண்டும்.
அதாவது தேர்தலுக்கு முன் அமைச்சுப் பதவி கிடைப்பதற்கு முன் தமிழ் மக்கள் தொடர்பில் கொண்டிருந்த கொள்கைகள், கோட்பாடுகள் இன்னமும் தங்களிடம் அப்படியே உள்ளதா? அல்லது அமைச்சுப் பதவி கிடைப் பதற்கு முன் ஒரு கதை அமைச்சுப் பதவி கிடைத்த பின் இன்னொரு கதை என்பதாக நிலைமை மாறியுள்ளதா?
இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் தன்னை மீள்வாசிப்புக்கு உட்படுத்துவாராயின் அண்மைக் காலங்களில் அமைச்சர் மனோ கணேசனில் ஏற்பட் டிருந்த மாற்றங்களை தமிழ் மக்கள் நன்கு உணர்ந் துள்ளது போல அவரும் உணர்ந்து கொள்வார்.
ஆக, தெளிவான கருத்துக்களை முன்வைக்கும் அநுரகுமார திஸாநாயக்கவிடம் அதிகாரப் பகிர்வு குறித்து ஜே.விபியின் நிலைப்பாடு என்ன என்று கேட்பதற்கு முன்னர் நாங்கள் எப்போதும் கொண்ட கொள்கையில் உறுதியாக உள்ளோமா? என்பதை நிதானமாக உறுதி செய்து கொள்வதே நல்லது.
அந்த வகையில் அமைச்சர் மனோ கணேசன் தான் வகிக்கக்கூடிய அமைச்சுப் பதவியை ஆதாரமாகக் கொண்டு தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டியவ ற்றை கிடைக்கச் செய்வதில் நல்லாட்சிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அந்த அழுத்தம் அர்த்தமற்றுப் போகுமாயின் அமைச்சுப் பதவியை தூக்கி எறியவும் தயாராவது அவசியம். இது சாத்தியமானால்தான் அநுரகுமார திஸாநாயக்காவிடம் மனோ கணேசன் எழுப்பிய கேள்வி நியாயப்படும்.