அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றோ செல்வத்தை தேய்க்கும் படை என்றார் வள்ளுவர்.
படை என்றவுடன் ஆயுதம் ஏந்தியவர்களே நம் நினைவுக்கு வருவதுண்டு.
ஆனால் வள்ளுவர் செல்வத்தை தேய்க்கும் ஒரு பெரும் படை எது? என்பதை இந்த உலகுக்கு காட்டி நிற்கிறார்.
அந்தப் பெரும் படைதான் எளியவர் அழுகின்ற கண்ணீர் என்பது வள்ளுவரின் முடிவு. ஆற்ற முடியாமல் அழுகின்ற கண்ணீர் செல்வத்தைத் தேய்க்கும் என்றால், யாருடைய செல்வம் என்ற கேள்வி எழும்.
இங்குதான் அந்த அழுகைக்கு யார் யார் கார ணமோ யார் யார் பின்னணியோ அவர்கள் அனை வரதும் செல்வம் தேயும் என்று பொருள்படும். இலங்கை அரசு தமிழர்களை வதைத்து அவர்களை துன்பப்படுத்தி ஆட்சி செய்ய நினைக்கிறது. ஆனால் அந்த நினைப்பு ஒருபோதும் நிறைவேறப் போவதில்லை.
ஏனெனில் வதைபட்டவர்கள் விடுகின்ற கண்ணீ ரானது இருக்கக் கூடிய செல்வங்களை அழித்து விடும்.
அசோகவனத்தில் இருந்த சீதை அழுத கண்ணீர் இராவணனின் அனைத்துச் செல்வங்களையும் அழித்து, ஈற்றில் அவனையும் அழித்தது.
எனவே நல்லாட்சி என்பது மக்களைக் காப்பாற்றுவது; மக்கள் விடுகின்ற கண்ணீரை துடைப்பது; மக்கள் படுகின்ற கஷ்டங்களை நீக்குவது இதைச் செய்யாத அரசை நல்லாட்சி என்று கூறுவது பெரும் பாவம்.
ஆக, நல்லாட்சியின் அழகு மக்களின் துன்பத்தைத் தீர்ப்பது என்ற வகையில் தமிழ் மக்களைப் பொறுத்தவரை தாம் வாழ்ந்த நிலத்தில் மீளவும் குடியிருப்பதற்காக அவர்கள் படுகின்றபாடு கொஞ்சமல்ல.
தமிழர்கள் என்பதால் அவர்களின் வாழ்விடங் களை கபளீகரம் செய்து அங்கு படையினரைக் குடியிருத்தி எந்த நேரமும் தமிழர்களை தாக்கத் தயாராக இருங்கள் என்பதுபோல நடந்து கொள்வது அரசுக்கு அழகன்று.
ஆகவே தமிழ் மக்களின் வாழ்விடங்களை உட னடியாக கையளிப்பது அரசின் கடமை. இதைச் செய்வதில் ஜனாதிபதி மைத்திரியின் அரசு கவனம் செலுத்துவது பாராட்டுக்குரியதாயினும் அதன் வேகம் போதுமானதன்று.
போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தங்களின் வாழ்விடங்களில் குடியிருப்பதன் மூலம் தங்களின் சீவனோபாயத்துக்கான தொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடு படுவர்.
சொந்தக் காணியைக் கைவிட்டு இரவல் காணியில் தற்காலிக கொட்டிலில் குடியிருக்கும் ஒரு குடு ம்பத்தின் மனநிலை எப்படியிருக்கும் என்பதை அறிந்து கொள்வது அரசின் கடமையாகும்.
இதைவிடுத்து நாங்கள் ஆள்பவர்கள். நீங்கள் தமிழர்கள். ஆகவே, நாங்கள் அனுமதித்தால்தான் நீங்கள் உங்கள் சொந்த மண்ணில் குடியிருக்க முடியும் என்றால் இது எந்த வகையில் நீதியாகும் என்பதை இனபேதம் கடந்து உணர்ந்து கொள்வது காலத்தின் உடனடித் தேவையாகும்.
நேற்றைய தினம் வலி வடக்கில் 700 ஏக்கர் நிலத்தை உத்தியோகபூர்வமாக விடுவிப்பு செய்து மக்களிடம் கையளித்த ஜனாதிபதி மைத்திரிக்கு தமிழ் மக்கள் நன்றி கூறிக்கொள்ளும் அதேநேரம்,
தமிழர் தாயகத்தில் இருக்கக்கூடிய அத்தனை ஆக்கிரமிப்பு நிலங்களையும் விடுவிப்பு செய்து அவற்றை மக்களிடம் கையளிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதைச் செய்வதன் மூலம் பல்வேறு துன்பங்களில் ஒன்றுக்கு முடிவு கட்டியதாக இருக்கும்.