குறைபாடான 13ஆவது திருத்தச் சட்டத்தை எமக்குப் பெற்றுத் தந்த இந்திய அரசாங்கம் இம்முறை குறைபாடற்ற சமஷ்டித் தீர்வு ஒன்றை பெற்றுத்தர வேண்டும். இது இந்தியாவாற்தான் முடியும் என்று வடமாகாணசபை முதலமைச்சர் திரு.சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை அரசியல் அமைப்புத் திட்ட உருவாக்கத்திற்கான மக்களின் கருத்துக்களை கேட்டறியும் ஆணைக்குழுவின் தலைவர் வழக்கறிஞர் லால் விஜயநாயக்க பின்வருமாறு கூறியமை மிகுந்த கவனத்திற்குரியது.வடக்கு-கிழக்கு பகுதியில் வசிக்கும் மக்களின் பிரச்சனைக்கு பிரதேச மட்டத்தில் வைத்து தீர்க்கக்கூடிய வகையிலான தீர்வு வேண்டும் என்று வடக்கு-கிழக்கு பிரதேச மக்கள் கோருகின்றனர்.
தங்கள் பிரச்சனைகளுக்கு உள்ளுர் பிரதேச அளவில் தீர்வு காணக்கூடிய வகையிலான அதிகாரப் பரவலாக்கலை அப்பகுதி மக்கள் கோருகின்றனர் என்று 28-2-2016 அன்று அவர் தெரிவித்துள்ளார். இது யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்ற வகையிலான ஓர் அரசியல் தீர்வுக்கான முன்னறிவித்தலாக அமைந்துள்ளது.
அதாவது வடமாகாண முதலமைச்சர் திரு,விக்னேஷ்வரன் கூறிய மேற்படி கோரிக்கைக்கு எதிர்மாறாக ஆப்பு வைக்கும் தன்மையில் அமைந்துள்ளது.
சிங்களத் தலைவர்களும், சிங்கள இராஜதந்திரிகளும், சிங்கள அதிகாரிகளும், சிங்கள வழக்கறிஞர்களும், சிங்கள நீதிபதிகளும், சிங்கள அறிஞர்களும் மகாவமிச மனப்பாங்கின் அடிப்படையிலான தமிழின எதிர்ப்பை தம் இரத்தோட்டமாகவும், வாழ்கை நெறியாகவும், சிந்தனை முறையாகவும் கொண்டவர்கள். இத்தகைய அறிவையும், மனப்பாங்கையும்தான் அவர்கள் விகாரையில் வேர்விட்டு பாலர் வகுப்பில் இருந்து பல்கலைக்கழகம் வரை பயின்று இருக்கிறார்கள். இவர்களிடம் மனப்பாங்கு ரீதியாக தமிழின எதிர்ப்பு வேரூன்றியுள்ளது.
இத்தகைய அடிப்படையில் இருந்து வந்தவர்தான் மக்கள் கருத்துக் கேட்கும் ஆணைக்குழுவின் தலைவர் வழக்கறிஞர் லால் விஜயநாயக்க ஆவார். இவர் சிங்கள இனவாத அரசின் திட்டங்களை நிறைவேற்றவல்ல ஒரு செயற்பாட்டாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒரு புறம் ‘சமஷ்டித் தீர்வு’ என்று இரகசியமாக ரணில்-சிறிசேன-சந்திரிகா போன்றோர் தமிழ்த் தலைவர்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளனர். இதனை சுருதி பிசகாத ஊதுகுழல்களாக தமிழ்த் தலைவர்கள் தேர்தல் காலங்களில் மேடை மேடையாக குழல் ஊதிவந்தனர்.
இவை மிகச் சாதூர்யமாக சிங்களத் தலைவர்களால் திட்டமிடப்பட்ட படிமுறை நடவடிக்கைகளில் முதல் இரு படிகளாய் அமைந்தன. அதாவது தமிழ்த் தலைவர்களுக்கு இரகசிய வாக்குறுதி முதற்படியாகவும், தமிழ்த் தலைவர்கள் அவர்களின் ஊதுகுழல்களாக செயற்பட்டமை இரண்டாவது படியாகவும் அமைந்தன.
மூன்றாவது படியாக புதிய அரசியல் யாப்பும் அதில் தமிழ் மக்களுக்கான தீர்வும் எனக் கூறப்பட்டு யாப்புக்கான வேலைகள் ஆரம்பமாகின.
நான்காவது படியாக சமஷ்டி என்பதற்குப் பதிலாக ஒன்றையாட்சி முறையின் கீழ் இனப்பிரச்சனைக்கு தீர்வுகாணப்படும் என்ற பகிரங்க அறிவிப்பு ஜனாதிபதி சிறிசேனாவினால் ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது.
ஐந்தாவது படியாக “ஒற்றையாட்சி||, “சமஷ்டியாட்சி” என்ற வார்த்தை பிரயோகங்கள் அல்ல முக்கியம். பிரதேச சுயாட்சி வழங்கப்பட்டால் போதும் என்பதே முக்கியம் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் கூறத் தொடங்கினர்.
இப்போது ஆறாவது படியாக கருத்துக் கேட்டறியும் ஆணைக்குழுவின் தலைவர் வழக்கறிஞர் லால் விஜயநாயக்க “உள்ளுர்ப் பிரதேச மட்டத்திலான அதிகாரப் பரவலாக்கலை மக்கள் விரும்புகிறார்கள்” என்று கூறத் தொடங்கியுள்ளார்.
இதன்படி மக்கள் சமஷ்டி முறையை விரும்பவில்லை, விக்னேஷ்வரனும் மற்றும் தமிழ் மக்கள் பேரவையும்தான் சமஷ்டிமுறையை கோருகின்றன. ஆனால் மக்கள் கோருவதன்படிதான் செயற்பட முடியும் அதுவும் அதிகாரபூர்வமாக அமைக்கப்பட்ட ஆணைக்குழுவின் முன் மக்கள் வழங்கிய கருத்துக்களின் அடிப்படையில் அக்குழுவால் தயாரித்து நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் அறிக்கையே கருத்துக்கு எடுத்துக்கொள்ளத்தக்கது என்று சொல்லி சமஷ்டி முறையை அவர்கள் கூறும் வழிமுறைக்கு ஊடாக நிராகரிக்கப் போகிறார்கள்.
இப்போது இதில் எமக்கு இரண்டு கேள்விகள் எழுகின்றன. ஒன்று ரணில்-சிறிசேன-சந்திரகா தலைமையிலான சிங்கள அரசாங்கம் இதனை ஏற்கனவே திட்டமிட்டு படிப்படியாக நடைமுறைப்படுத்தி வருகிறதா அல்லது தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் சேர்ந்து இதனை முன்கூட்டியே திட்டமிட்டு அரங்கேற்றி வருகின்றனவா என்பனவாகும்.
இதற்கான பதில் சற்று கடினமேயானாலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இதனை முன்கூட்டியே அறிந்துதான் செயற்படுகிறது என்பது முதற்கண் உண்மையாகும். இரண்டாவது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சில முன்னணித் தலைவர்கள் மேற்படி சிங்கள அரசாங்கத்துடன் சேர்ந்து முன்கூட்டியே திட்டமிட்டு செயற்படுகிறார்கள் என்று நம்ப இடமுண்டு. எது எவ்வாறாயினும் தமிழ் மக்கள் மீண்டும் ஏமாற்றப்படவும், கைவிடப்படவும் போகிறார்கள் என்பது மட்டும் உண்மை.
இம்முறை தமிழ்மக்கள் வெறுமனே கைவிடப்படவில்லை அதற்கும் அப்பால் அவர்களுக்கு ஆசைவார்;த்தை காட்டி அவர்களின் உதவியைப் பெற்று தமக்கான அதிகாரத்தையும், பதவி சுகத்தையும் அடைந்ததுடன் அந்த தமிழ் மக்களின் உதவியின் வாயிலாகவே அவர்களின் வாயில் மண்போடும் செயலும் சர்வதேச பரிமாணத்துடன் நிறைவேறியும் உள்ளது.
இப்போது “சமஷ்டி” பற்றிய வடமாகாண முதலமைச்சரின் கோரிக்கைக்கு எதிராக உள்ளுர் மட்டத்திலான அதிகார பரவலாக்கல் அல்லது பிரதேச மட்டத்திலான அதிகார பரவலாக்கல் என்ற தீர்வை மக்களின் பேரால் அரசாங்கம் தன் அதிகாரியின் மூலம் முன்வைத்திருக்கிறது. சிங்கள இராஜதந்திரத்தின் மிக கூர்மையானதும், நுணுக்கமானதுமான ஒரு செயற்பாடு இது.
லால் விஜயநாயக்க தலைமையிலான குழுவினர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 31ஆம் தேதிக்கு முன் தமது விசாரணை அறிக்கையை நாடாளுமன்றத்திடம் சர்ப்பிக்க வேண்டும் என காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் உத்தியோகப்பூர்வமான அறிக்கையில் பின்வரும் விடயங்கள் எழுதப்படும் என்பதில் சந்தேகமில்லை.
முதலாவதாக மேற்படி கூற்றுக்கு அமைய உள்ளுர் மட்டத்தில் அதிகார பரவலாக்கல்.
இரண்டாவதாக கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லிம் மக்களும் சிங்கள மக்களும் வடக்கு-கிழக்கு இணைக்கப்படுவதை விரும்பவில்லை.
மூன்றாவதாக மக்கள் தமக்கு உள்ளுர் மட்டத்தில் அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று கோருகிறார்கள்.
எனவே அதற்கேற்ப உள்ளுர் மட்டத்திலான பிரதேச சபைகளை அமைத்து வடக்கு-கிழக்கு இணைப்பற்ற பலவாறான பிரதேச சபைகளை அமைப்பது நல்லது என்று அந்த ஆணைக்குழு தன் அறிக்கையை வழங்கும்.
மக்களின் கருத்துக்களை கேட்டறியும் இந்த ஆணைக்குழுவின் அறிக்கையை அதிகாரபூர்வமானதாக நாடாளுமன்றம் ஏற்றுக் கொண்டு அதன் அடிப்படையில் இனப்பிரச்சனைக்கு உள்ளுர் பிரதேச மட்டத்திலான தீர்வே சாத்தியமானது என்று அரசாங்கம் சர்வதேச மட்டத்தில் நிறுவி தனது இன அழிப்பை வெற்றிகரமாக நிறைவேற்றப் போகிறது. சிலவேளைகளில் இது 13ஆவது திருத்தச் சட்டத்தில் இருந்தும் பின்வாங்குவதாகவே அமையும்;.
அதாவது கிழக்கு மாகாணம் மூன்று துண்டுகளாக பங்குபோடப்பட வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன. வடமாகாணத்தை மேலும் துண்டாட முடியாதாயினும் வடமாகாணத்தில் சிங்கள குடியேற்றத்தால் கபளீகரம் செய்யப்பட்டிருக்கும் மணலாற்றுப் பகுதியை (அரசு இதனை சிங்களத்தில் வெலிஓயா என அழைக்கிறது) வெலிஓயா என்ற பெயரில் சிங்களப்பகுதியுடன் இணைக்கவோ அல்லது புதிய ஒரு சிறு பிரதேச சபையை அதற்கேன உருவாக்கவோ முயலலாம்.
சிங்களத் தலைவர்கள் மிக சாதூர்யமாக திட்டமிட்டு தமிழ்த் தலைவர்களின் துணையுடன் தாம் மேற்கொண்டிருந்து இனப்படுகொலைக் கறையை கழுவியதுடன் அதே தமிழ்த் தலைவர்களின் துணையுடன் தமிழ் மக்களின் வாயில் மண்ணைப் போடும் வகையில் அரசியல் தீர்வு ரீதியாகவும் மேற்படி கேட்டினைச் செய்யப் போகின்றனர்.
1936ஆம் ஆண்டு தனிச்சிங்கள மந்திரி சபையை உருவாக்குவதற்கான புத்திமதியை தமிழ்த் தலைவரான சி.சுந்தரலிங்கத்திடம் சிங்களத் தலைவர்கள் பெற்றுக் கொண்டு அவ்வாறு தனிச் சிங்கள மந்திரி சபையை அமைப்பதில் வெற்றி பெற்றது போல தற்போது தமிழ்த் தலைவர்களின் ஆதரவுடனும், ஒத்துழைப்புடனும் தமிழ் மக்களின் வாயில் மண்போடும் படலம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.