வைத்திய கலாநிதி இ.தெய்வேந்திரன் அவர்கள் காலமானார் என்ற செய்தி இதயத்தை நெருட வைப்ப தாகும். அவரின் இழப்பின் துயர் அவரை அறிந்த பலரை வாட்டவே செய்யும். அந்தளவுக்கு அவரின் மனித நேயப் பண்பும் சேவையுள்ளமும் மக்கள் மனங்களில் ஆழப் பதிந்துள்ளன.
யாழ்ப்பாண மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி என்ற பதவியை அலங்கரித்த டாக்டர் தெய் வேந்திரன் அவர்கள் மக்கள் இன்னல்பட்ட வேளை மக்களோடு மக்களாக இருந்து ஆற்றிய பணியை ஒரு போதும் மறந்துவிட முடியாது.
யுத்த சூழல், போக்குவரத்து இன்மை, பொருளாதாரத்தடை என்ற நெருக்கடியான சூழலில் யாழ்.குடா நாட்டில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டபோது, சர்வதேச சுகாதார நிறுவனங்களுடன் டாக்டர் தெய்வேந்திரன் அவர்கள் தொடர்பு கொண்டு நிலைமைகளை தெளிவுபடுத்தினார்.
சர்வதேச தொண்டு நிறுவனங்களுடன் அவருக்கு இருந்த தொடர்பும் அவர் மீதான மரியாதையும் தேவை யான மருந்துப் பொருட்களை கொண்டு வந்து சேர்ப்பதில் பேருதவி புரிந்தது.
இருட்டைக் குறை சொல்லாதீர்கள் வெளிச்சத்தை ஏற்றுங்கள் என்ற வாசகத்தை அடிக்கடி உச்சரிக்கும் வைத்திய கலாநிதி இ.தெய்வேந்திரன் அவர்களிடம் இருந்த மனிதநேயம், இரக்கம், உதவி செய்யும் உயர்ந்த பண்பு, பரோபகாரம் என்பன மக்கள் சமூகத்தில் அவருக்கென தனியானதோர் உயர் மதிப்பைக் கொடுத்திரு ந்தது.
சுகாதாரக் கல்வி மூலமே எங்கள் நாட்டின் சுகநல மேம்பாட்டை உயர்த்த முடியும் என்பதில் உறுதியாக இருந்த டாக்டர் தெய்வேந்திரன் அவர்கள் அதற்காகத் தன்னை அர்ப்பணித்து சேவை செய்தார்.
தொண்டர்கள், சமூகத் தலைவர்கள், தாய்மார்கள் என்ற வகுதியினருக்கு சுகாதாரக் கல்வியை வழங்கு வதில் அவரின் பணி வெற்றி கண்டது.
எந்தப்பணியையும் நாளை பார்க்கலாம் என்றில்லாமல் இன்றே செய்தல் என்ற உறுதிப்பாடும் அவரிடமிரு ந்த தீர்க்க தரிசனமும் திட்டமிடலும் வருமுன் காத்தல் என்ற இலக்கும் அவரின் பணியை பலருக்கும் முன் உதாரணப்படுத்தியது.
எங்கள் மண்ணில் யுத்தம் நடந்த போது, இந்த நேரத்தில் தான் எங்கள் மக்களுக்கு உதவ வேண்டும். மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்ற சிந்தனையை தன்னோடு கடமை புரிந்த அனைவரிடமும் ஏற்படுத்தி அன்பு, அறிவுரை, கடமையுணர்வு என்பவற்றின் புரிதலினூடாக உத்தியோகத்தர்களிடம் இருந்து வினைத் திறன் மிக்க பணியை பெற்றவர். இதனால் அவர் மிகச் சிறந்த நிர்வாகி என்று அனைவராலும் புகழப்பட்டார்.
யாழ்ப்பாணத்தில் இயங்கிய அத்தனை சர்வதேச தொண்டு நிறுவனப் பிரதிநிதிகளும் வைத்திய கலாநிதி தெய்வேந்திரனை தேடி வருவார்கள். தங்களின் உதவிகள் எப்படி அமைய வேண்டும் என்று அவரிடம் ஆலோசனை கேட்பார்கள். அவர் வழங்கிய ஆலோசனைகள் தான் யுத்த காலத்தில் குடாநாட்டு மக்களின் சுகநலத்தை பாதுகாக்கப் பேருதவியாயிற்று.
ஏழை மக்களின் நலனில் அக்கறை கொண்டு இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், வட மாகாண புற்றுநோய் தடுப்புச் சங்கம் என்பவற்றை இயக்கி எங்கள் மக்களுக்கு சேவையாற்றிய டாக்டர் தெய்வேந்திரன் யாழ்ப் பாண மாநகர சபையின் சைவசமய விவகாரக்குழுவை ஆரம்பித்து சமயப் பணி செய்யவும் வித்திட்டவர்.
புகழை விரும்பாத ஒரு உத்தமர்; மாறி வரும் உலகிற்கேற்ப அறிவாற்றலை இற்றைப்படுத்திய ஒரு பேராசான்; மனிதநேயப் பண்பாளர்; ஒட்டு மொத்தத்தில் எங்கள் மண்ணில் நடமாடிய ஒரு பல்கலைக்கழகம். அந்தப் பல்கலைக்கழகத்தில் படித்த பயன் அவரின் இழப்பை ஜீரணிக்க மறுக்கிறது.
இதயத்தை இறுக்கிக் கொள்ளும் இந்த நேரத்தில் ஒரு மருத்துவராக மட்டு மன்றி மக்களை நேசித்து உற்ற நேரத்தில் பேருதவி புரிந்த ஒரு உத்தமனுக்காய் தமிழன்னை தன் அஞ்சலியைச் செலுத்துகின்றாள்.