எதிரணியின் அரசியல் விபரீத விளையாட்டு!

கடந்த வருடத்தில் ஆட்சி மாற்றத்துக்குக் காரணமாக அமைந்த ஜனாதிபதித் தேர்தலிலும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தலிலும் மஹிந்த ராஜபக்ச தோல்வியடைந்த போதிலும், அவர் இன்னுமே ஓய்ந்து போய் விடவில்லை.
இன்றைய ஆட்சியைக் கவிழ்ப்பதையோ அல்லது தன்னையோ தனது வாரிசுகளையோ ஆட்சித் தலைமைக்குக் கொண்டு வருவதையோ குறிக்கோளாகக் கொண்டு அவர் இன்னும் இயங்கிக் கொண்டேயிருக்கிறார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற கூட்டத்தையும் இதற்கொரு உதாரணமாகக் கூறலாம்.
மஹிந்த ராஜபக்சவைத் தலைமையாகக் கொண்ட ‘கூட்டு எதிரணி’ என்று தங்களைக் கூறிக் கொள்வோர் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டம் கொழும்பில் நேற்று அமர்க்களமாக நடந்தது.
கொழும்பில் நேற்றுப் பிற்பகல் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் படியாக, தூர இடங்களில் இருந்தெல்லாம் ஏராளமானோர் வாகனங்களில் ஏற்றி வரப்பட்டு பொதுக்கூட்டத்தில் குவிக்கப்பட்டனர்.
மஹிந்த தரப்பினரின் வழமையான பாணி இது. ஐ.நாவுக்கு எதிரான போராட்டமாகட்டும், மேதின விழாவாகட்டும்.... நாடெங்குமிருந்து ஆயிரமாயிரம் ஆதாரவாளர்களை பஸ்களில் கொழும்புக்குக் கொண்டு வந்து சேர்ப்பது அன்றைய ஆட்சியாளர்களுக்குக் கைவந்த கலை.
நாட்டின் அதிகளவான மக்கள் மத்தியில் தங்களுக்கே ஆதரவு இருப்பதாக காண்பித்துக் கொள்வதற்கே அவர்கள் விரும்புகின்றனர். நேற்று நடைபெற்ற கூட்டமும் அவ்வாறுதான் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காகவே தாங்கள் இக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்ததாக மஹிந்த ஆதரவு அணியினர் கூறியிருந்தனர்.
அரசுக்கு எதிராகவும், தங்களுக்கு ஆதரவாகவும் மக்கள் மத்தியில் ஆதரவைத் திரட்டுவதில் மஹிந்த தரப்பினர் தீவிரமாக செயற்படுகின்றனரென்பது நன்றாகவே தெரிகிறது.
நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதிப் பதவியில் இரு தடவை அமர்ந்திருந்த போதிலும் கூட, அதிகார ஆசையென்பது இன்னும் அவரை விட்டு சற்றேனும் நீங்காதிருப்பது விசித்திரமாகவே உள்ளது.
எமது நாட்டின் அரசியலில் தற்போது நடந்து கொண்டிருக்கின்ற காட்சிகளைப் பார்க்கின்ற போது சிறுபான்மையின மக்களிடம் தவிர்க்க முடியாதபடி அச்சமொன்று தோன்றவே செய்கிறது.
மஹிந்த அணியினர் காண்பிக்கின்ற காட்சிகள், அவர்கள் வெளியிடுகின்ற எச்சரிக்கைகளெல்லாம் தமிழ், முஸ்லிம் மக்களைப் பயமுறுத்துகின்றன.
இனவாதத்தை படிப்படியாக உச்ச நிலைக்குத் தூண்டி, இன்னும் ஐந்து வருடங்களில் நடைபெறப் போகின்ற தேர்தலில் மஹிந்த தரப்பினர் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி விடுவார்களோ என்பதுதான் அந்த அச்சம்!
அவ்வாறு மஹிந்த தரப்பினர் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிக் கொள்ளும் நிலைமை ஏற்படுமானால் இந்நாட்டில் சிறுபான்மையினரின் இருப்பு என்னவாகுமென்ற அச்சம் தமிழ், முஸ்லிம் மக்களை விட்டு இன்னுமே நீங்கிய பாடாக இல்லை.
சிறுபான்மையினரின் அச்சத்துக்கு ஏதுவானதாகவே தென்னிலங்கையின் அரசியல் களநிலைவரமும் அமைந்திருக்கின்றது.
தென்னிலங்கையின் பெரும்பான்மை அரசியல்வாதிகளில் ஒரு தரப்பினர் நாட்டின் இன ஐக்கியத்தை கொஞ்சமும் கூட விரும்புபவர்களாக இல்லை.
இன ஐக்கியம் நாட்டில் ஏற்படாதவரை எக்காலத்திலுமே நாட்டின் முன்னேற்றம் சாத்தியமாகப் போவதில்லையென்ற யதார்த்தத்தையும் அவர்கள் புரிந்து கொள்ள மறுக்கின்றனர்.
இன ஐக்கியத்தையும், நாட்டின் எதிர்கால முன்னேற்றத்தையும் பார்க்கிலும் தங்களது அரசியல் நலனே முக்கியமானதென்றுதான் அவர்கள் கருதுகின்றனர்.
மஹிந்த அணியினரின் பாதை அன்று முதல் இன்று வரை இவ்வாறுதான் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
பெரும்பான்மையின மக்களின் உள்ளங்களில் அவர்கள் மறைமுகமாக நச்சு விதையை விதைத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நாட்டில் சிங்கள மக்களே அனைத்து உரிமைகளுக்கும் உரித்தானவர்களென்றும், சிறுபான்மையின மக்கள் இந்நாட்டில் உரிமைகளுக்கு தகுதியற்றவர்களெனவும் மஹிந்த அணியினர் தென்னிலங்கையில் நச்சு விதையைத் தூவி வருகின்றனர்.
இது ஆபத்தான அரசியல் செயற்பாடாகும். பெரும்பான்மை மக்கள் மத்தியில் இவ்வாறு சிறுபான்மையினருக்கு விரோதமான சிந்தனையை வளர்ப்பதானது எதிர்காலத்தில் எத்தகைய விபரீதத்தை ஏற்படுத்துமென்பதை நினைத்துப் பார்த்தால் அது பயங்கரமாகவே தெரியும்.
இனங்களுக்கிடையிலான குரோதம் எக்காலமும் தீர்க்க முடியாதபடி தொடருவதற்கே வழியேற்படுமென்பது ஒருபுறமிருக்க, சிறுபான்மையினருக்கான அரசியல் உரிமைகள் கிடைப்பதற்கும் முட்டுக்கட்டை ஏற்படவே செய்யும்.
அதாவது உலகில் எங்குமே காணாதபடி இனவாதமும் மதவாதமும் நிறைந்த நாடாகவே எக்காலமும் இலங்கை நோக்கப்படுவதற்கான ஆபத்தும் இருக்கிறது.
எதிரணியினரின் இன்றைய அரசியல் செயற்பாடுகளெல்லாம் ஆபத்தான விபரீத விளையாட்டுகளாகவே தென்படுகின்றன.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila