
கடந்த 1996ஆம் ஆண்டு இடம்பெற்ற தெஹிவளை ரயில் நிலைய குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில், விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் இருவருக்கு இருவருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த குண்டுத்தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணை, இன்று மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சந்தேகநபர்கள் இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். இந்நிலையில், குறித்த இருவரும் ஏற்கனவே 20 வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவித்த காரணத்தால், இரண்டு வருடங்கள் தளர்த்தப்பட்ட சிறைத்தண்டனை விதித்து நீதவான் ஐராங்கனி பெரேரா தீர்ப்பளித்துள்ளார். குறித்த தண்டனைக் காலம் முடிந்ததும், வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமிற்கு ஒரு வருட காலத்திற்கு இவர்கள் அனுப்பப்பட வேண்டுமெனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். குறித்த குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைதானவர்களுள் மூவர், ஏற்கனவே குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ள நிலையில், கடந்த 2013ஆம் ஆண்டு அவர்களுக்கும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 1996ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27ஆம் திகதி தெஹிவளை ரயில் நிலையத்தின் மீது நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில், 64 பேர் கொல்லப்பட்டதோடு 400இற்கும் அதிகமானோர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.