
நல்லாட்சி என்று கூறும் இந்த அரசாங்கத்திலும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், கடந்த ஒரு மாத காலத்தில் மாத்திரம் 23பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் சட்டத்தரணிகள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்களில் அதிகமானோர் வடக்கு, கிழக்கைச் சேர்ந்தவர்கள் எனக் குறிப்பிடும் சட்டத்தரணிகள், யாழ்.சாவகச்சேரியில் தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்டமை தொடர்பிலும், ஏனைய குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலுமே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்களில் மூவரைத் தவிர மிகுதி அனைவரும் பூஸா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினர். சாவகச்சேரியில் தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவத்தில், எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற எண்ணிக்கையைப் பொலிஸார் உத்தியோகபூர்வமாக வெளிப்படுத்தாத நிலையிலும், அந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மட்டும் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் பெண் ஒருவரும் உள்ளடங்குதாகவும், அவர் வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஏனைய 10 பேரில் இருவர், கொழும்பு 4ம் மாடியிலுள்ள பயங்கரவாத விசாரணை பிரிவினரிடமும், ஏனையவர்கள் பூஸா தடுப்பு முகாமிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதனைவிட, ஏனைய குற்றச்சாட்டுகளில் கைதானோரில் வடக்கிலிருந்து பலரும் பெரும்பான்மையினத்தவர்கள் சிலரும் உள்ளடங்குவதாகவும் கூறப்படுகின்றது. எனினும், குறித்த 23பேரும் என்னென்ன குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது வெளிப்படுத்தப்படவில்லை.