
வில்பத்து வனப்பகுதியை அழித்து, சட்டவிரோதமாக முஸ்லிம் மக்களை குடியேற்றி வருவதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீது ஏற்கனவே பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், அப்பகுதியில் கிராமம் ஒன்றை அமைக்கும் பணியில் அவர் மீண்டும் ஈடுபட்டுள்ளதாக சிங்கள ராவய அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. பொதுபல சேனா அமைப்பின் ஏற்பாட்டில், கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதத்த தேரர் இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். வட மாகாணத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட போகஸ்வெல கிராமத்தின் பல பகுதிகள், பிரதேச செயலாளர் பிரிவுகள் பலவற்றிற்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், முல்லைத்தீவு மாவட்டத்திலும் இவ்வாறானதொரு நிலைமை காணப்படுவதாக இதன்போது குறிப்பிட்டார். வில்பத்து வனப்பகுதியில் வன ஜீவராசிகள் வசிக்கும் பிரதேசத்தை ஆக்கிரமித்து அமைச்சர் ரிஷாட் குடியேற்றங்களை அமைப்பதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு, நீதிமன்றில் விசாரணையில் உள்ளது. இவ்விடயம் தொடர்பாக ஆராய்ந்து, ஜனாதிபதியிடம் அறிக்கையொன்றும் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.