
மறைந்த ஊடகப் பேரொளியான தர்மரத்தினம் சிவராமின் 11ஆவது ஞாபகார்த்த தினம் இன்று (வெள்ளிக்கிழமை) நாடளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகிறது. பிரதான நிகழ்வு யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த ஊடகவியலாளர்களுக்கான தூபிக்கு முன்னால் நடைபெறவுள்ளது. இன்று பிற்பகல் 3 மணிக்கு யாழ்ப்பாணம் முற்றவெளி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த ஊடகவியலாளர்களுக்கான நினைவுத் தூபியில் மலரஞ்சலியும், விளக்கேற்றல் நிகழ்வும் இடம்பெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் நினைவுப் பேருரைகள் இடம்பெறவுள்ளன. இந்த நிகழ்வுகளை யாழ் ஊடக அமையம், கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் உள்ளிட்ட ஊடக சுதந்திரத்துக்கான அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. அதேவேளை, இன்று முற்பகல் 11 மணிக்கு முன்னணி ஊடக அமைப்புக்கள் இணைந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்னால் கவன ஈர்ப்பு போராட்டமொன்றை நடத்தவுள்ளன. அத்துடன், அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினதும் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தினதும் ஏற்பாட்டில் நாளை பிற்பகல் மூன்று மணிக்கு அக்கரைப்பற்று விபுலானந்தா சிறுவர் இல்ல மண்டபத்தில் நினைவு நிகழ்வு நடைபெறவுள்ளது. குறித்த நிகழ்வில் ‘சிவராமின் பார்வையில் எமது ஊடகமும் அரசியலும் நிரப்பப்பட வேண்டிய இடைவெளி’ என்ற தலைப்பில் மட்டக்களப்பு ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர் கல்வியியலாளர் கலாநிதி எம்.பி.ரவிச்சந்திரா உரையாற்றவுள்ளார். ஊடகவியலாளர் சிவராம் கடந்த 2005ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டியில் வைத்து கடத்திச் செல்லப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்துக்கு அருகில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். சிவராமின் 11ஆவது ஞாபகார்த்த தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில், இவருடைய கொலை தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.