விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவத்தினர் பெற்றுக்கொண்ட யுத்த வெற்றியினை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் கொண்டாடுவதற்கு கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் உடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “குறித்த நிகழ்வினை எதிர்வரும் 18ம் திகதி குருநாகலில் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளோம்.
விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதற்கு இராணுவத்தினர் மேற்கொண்ட அர்ப்பணிப்புகளை நல்லாட்சி அரசாங்கம் மறந்து செயற்படுகின்றது. எனவே, யுத்த வெற்றியினை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் கொண்டாடுவதற்கு தீர்மானித்துள்ளளோம். குறித்த நிகழ்வின் போது யுத்தத்தில் உயிர் நீத்த படையினர்களை கௌரவிக்கும் வகையிலான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி முள்ளிவாய்கால் இறுதி யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் உயிரிழந்திருந்தனர். இதனையொட்டி, வடக்கு, கிழக்கு உள்ளிட்ட புலம்பெயர் தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளுக்கான நினைவு நாளை மே மாதம் 18ம் திகதி உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.