கிளிநொச்சியில் தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின
கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் முதல் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக, மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறிப்பாக முறிகண்டி ஊடாக அக்கராயன் செல்லும் வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. முறிகண்டி பிள்ளையார் ஆலயத்திற்குள் நேற்று இரவு வெள்ள நீர் புகுந்துள்ளதோடு, கோயிலை அண்மித்த முறிகண்டி, செல்வபுரம் கிராமங்களை சேர்ந்த மக்களின் குடியிருப்புக்கள் சிலவற்றிற்குள்ளும் வெள்ள நீர் சென்றுள்ளது. அத்தோடு, கிளிநொச்சி பொன்னகர், ஆனந்தபுரம் உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த மக்களின் குடியிருப்புகளுக்கும் வெள்ளம் புகுந்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். தொடர் மழை காரணமாக பாடசாலை மாணவர்களின் வருகை குறைவடைந்துள்ள அதேவேளை, கிளி.சிவபாத கலையகம் பாடசாலையில் வெள்ளம் தேங்கியுள்ளதமாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். கடும் மழை காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதோடு, மக்கள் தமது அன்றாட கடமைகளை நிறைவேற்றிக்கொள்வதில் சிரமத்திற்கு உள்ளாவதாக தெரிவிக்கப்படுகிறது. மழையினால் பாதிப்பட்ட மக்கள் நலன் கருதி, இதுவரை நலன்புரி நிலையங்கள் எதுவும் உருவாக்கப்படவில்லையென, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளதோடு, அவசியம் ஏற்படும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்துள்ளது.
Related Post:
Add Comments