யுத்தம் நிறைவடைந்து இன்று ஏழு வருடங்களாகியுள்ளன. எனினும் சமாதானம் தோல்வியடைந்துள்ளது. ஏழு வருடங்களாக சமாதானம் தோல்வியடைந்துள்ளதன் வரைவிலக்கணம், எந்த சந்தர்ப்பத்திலும் மீண்டும் யுத்தம் ஆரம்பமாகலாம் என்பதாகும். நல்லாட்சி அரசாங்கம் தொடர்பில் தற்போது பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். குற்றச்சாட்டுகள் அதிகரிக்கும் நேரத்தில் இ்ன்னுமொரு தரப்பினர் தாம் இழந்தவற்றை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என பிரஜைகள் சக்தி அமைப்பின் அழைப்பாளரும் எழுத்தாளருமான காமினி வெயங்கொட தெரிவித்தார்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மகளிர் அரசியல்துறைத் தலைவி தமிழினி எழுதி சாமிநாதன் விமல் சிங்களத்தில் மொழி பெயர்த்துள்ள ‘தியுனு அசிபதக செவன யட’ (ஒரு கூர்வாளின் நிழலில்) எனும் நூலின் வெளியீட்டு விழா நேற்றுமுன்தினம் மாலை கொழும்பிலுள்ள மன்றக் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கையில் நடைபெற்ற யுத்தமானது இரு சமூகங்களுக்கிடையில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. எனினும் அது இரு சமூகங்களுக்கிடையில் நடைபெறவில்லை. அரசாங்கத்திற்கும் பயங்கரவாதிகளுக்குமிடையில் நடைபெற்ற யுத்தமாகும். இருந்தபோதிலும் யுத்தம் நடைபெற்றபோது தெற்கிலுள்ள மக்கள் அதனை சிங்களவர்கள் தமது இனத்தை பாதுகாப்பதற்காக மேற்கொள்ளும் யுத்தமாகவே நோக்கினர். அதேபோல் வடக்கிலுள்ளவர்கள் தமிழ் மக்கள் சார்பாக செய்யும் யுத்தமாகவே கருதினர். எவ்வாறாயினும் யுத்த நடவடிக்கைகள் அனைவருக்கும் அழிவுகளையே ஏற்படுத்தியன.
யுத்தத்தின் பின்னர் நாம் சமாதானத்தை ஏற்படுத்தியாக வேண்டும். அதற்காக சகலரும் பங்களிக்க வேண்டும். எனினும் அந்த முயற்சியில் எத்னை பேர் பங்குகொண்டுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் முக்கியமான கருத்தொன்றை வெளியிட்டிருந்தார். அதாவது வடக்கிலுள்ளவர்கள் ஏன் சமஷ்டி முறையைக் கேட்கிறார்கள் என்பதை ஆராய வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
எனவே அங்குதான் முக்கிய திருப்புமுனை இருக்கிறது. சமஷ்டி வழங்குவதா இல்லையா என்பது இரண்டாவது விடயம். முதலில் வடக்கிலுள்ளவர்கள் ஏன் சமஷ்டி கேட்கிறார்கள் என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதனை ஆராயும் போது கிடைக்கும் விடைதான், யுத்தம் ஏற்பட்டதற்கான காரணமுமாகும்.
பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. யுத்த வெற்றியினால் நாடு ஒரு முகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். தமிழினி தனது சுயசரிதை நூலில் தனது அமைப்பு தொடர்பில் விமர்சன ரீதியாக நோக்கியிருக்கும்போது, நாமும் அதேபோன்று விமர்சன ரீதியாக நோக்குவது தீர்வுக்கு சிறந்த வழியமைக்கும் என எதிர்பார்க்கிறேன். மீண்டுமொரு யுத்தம் உருவெடுப்பதை தவிர்ப்பதற்கான ஒரே வழி அதுதான்.
இதனை சிங்களவர்கள் என்ற ரீதியில் நாம் பொறுப்பேற்க வேண்டும். ஏனெனில் இந்த நாட்டில் நாம்தான் பெரும்பான்மைச் சமூகம் என பெருமையுடன் கூறிக்கொள்கிறோம். எமக்கு 2500 ஆண்டு கால சரித்திரம் இருப்பதாகவும் மார் தட்டிக்கொள்கிறோம். இது எமது நாடு என்று சந்தோஷமடைகிறோம். அவ்வாறெனில் பிரச்சினைகள் ஏற்படாது எமது நாட்டைப் பாதுகாப்பதற்கு அறிந்திருக்க வேண்டும். எனவே எங்கு பிழை நிகழ்ந்திருக்கிறது என்பதை அறிந்து அதனை நிவர்த்திசெய்துகொண்டு முன்செல்ல வேண்டும்.
நல்லாட்சி அரசாங்கம் தொடர்பில் தற்போது பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். நாளுக்கு நாள் அந்தக் குற்றச்சாட்டுகள் அதிகரிதுக்கொண்டே செல்கின்றன. குற்றச்சாட்டுகள் அதிகரிக்கும் நேரத்தில் இன்னுமொரு தரப்பினர் தாம் இழந்தவற்றை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். யுத்தம் நிறைவடைந்து இன்று ஏழு வருடங்களாகியுள்ளன. எனினும் யுத்தத்தை நிறைவுசெய்வதற்கான இலக்காக இருந்த சமாதானத்தை வெற்றிகொள்ள முடியாமல் போயுள்ளது.
ஏழு வருடங்களாக சமாதானம் தோல்வியடைந்ததுள்ளதன் வரைவிலக்கணம், எந்த சந்தர்ப்பத்திலும் மீண்டும் யுத்தம் ஆரம்பமாகலாம் என்பதாகும்.