நடேஷ்வரா கல்லூரிக்கு செல்வதற்கு இராணுவம் இன்னும் தடையாகவுள்ளது!

சுமார் 25 வருடங்களுக்கு மேலாக இலங்கை இராணுவத்தினரால் கையகப்படுத்தி வைக்கப்பட்டிருந்த வலி வடக்கு நடேஷ்வரா இந்துக் கல்லூரிக்குச் செல்ல இன்னும் மக்களுக்கு தடை விதிக்கப்பட்டு வருவதாகவும், குறித்த பாடசாலைக்கு செல்ல வேண்டுமாயின் பாடசாலையின் அதிபருடன் வாருங்கள் என இராணுவத்தினர் கோருவதாகவும் வலி வடக்கு மீள்குடியேற்றத் தலைவர் குணபாலசிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொணடு உரையாற்றுகையிலேயே அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டார். கடந்த யுத்தத்தில் மக்களுடைய வீடுகள், ஆலயங்கள், பயிர் நிலங்கள், நடைபாதைகள் என்பன சிதறடிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அரசாங்கத்தால் சிறியளவான பகுதிகள் விடுவிக்கப்படுவதில் எவ்வித பிரயோசனமும் இல்லையென அவர் இதன்போது குறிப்பிட்டார். மயிலிட்டி துறைமுகம் மற்றும் காங்கேசன்துறையிலிருந்து வளலாய் வரையான 12 கிலோமீற்றர் கடற்கரையையும், எத்தனையோ ஆயிரம் ஏக்கர் மக்களது காணிகளையும் இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்துள்ளதால், மக்கள் அவ்விடங்களுக்குச் செல்ல முடியாமல், தொழில் செய்ய முடியாமல் இருப்பதாக அவர் இங்கு சுட்டிக்காட்டினார். குறித்த பிரதேசத்தில் இராணுவம் வெறுமனே புற்களை வளர்த்துக்கொண்டு மக்களை குடியேற விடாமல் தடுத்துக்கொண்டிருப்பதால், முகாம்களில் மக்கள் பல இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். மக்கள் இவ்வாறு முகாம்களில் கஷ்டப்பட்டு வாழ்ந்து வருகையில், அவர்களது விளைநிலங்களில் இராணுவத்தினர் விவசாயம் செய்து, அதனை திண்ணைவேலி மற்றும் பலாலி சந்தைகளில் விற்பனை செய்வதும், மக்கள் தமது சொந்த நிலங்களில் விளைந்த பொருட்களை இராணுவத்தினரிடம் பணம் கொடுத்து வாங்குவதும் எங்கும் நடைபெறாத துரோகம் என மீள்குடியேற்ற தலைவர் குணபாலசிங்கம் மேலும் தெரிவித்தார். மக்களது காணிகள் விடுவிக்கப்படுவதற்கு ஜனாதிபதியால் வழங்கப்பட்ட கால எல்லைக்கு இன்னும் இரண்டு மாதங்கள் காணப்படும் நிலையில், அதற்குள் மக்களது காணிகள் விடுவிக்கப்பட வேண்டுமென குறிப்பிட்ட அவர், மயிலிட்டி மற்றும் பலாலி ஆகிய பிரதேச மக்களே முகாம்களில் அதிகமாக வசித்து வருவதாகவும் குறித்த இரண்டு பிரதேசங்களும் விடுவிக்கப்படாமல் முகாம்களை மூட முடியாதெனவும் தெரிவித்தார். சம்பூர் விடுவிக்கப்பட்டதைப் போன்று, குறித்த பிரதேசங்களையும் விடுவிக்க எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றும் இல்லாவிட்டால், மக்கள் சக்தி எவ்வளவு பலமானதென காட்டுவோம் என்றும் வலி வடக்கு மீள்குடியேற்ற தலைவர் குணபாலசிங்கம் மேலும் தெரிவித்தார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila