வட மாகாண சபையின் அங்கீகாரத்துக்காக , முதலமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட முதலமைச்சர் நிதி நியதி சட்டத்தில் ‘போரினால் பாதிக்கப்பட்ட மக்கள்’ என்று குறிப்பிடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்த தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் ஆதரவு அணி அதற்குப்பதிலாக ‘பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட மக்கள்’ எனப் பாவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியது.
வடமாகாண சபையின் 54ஆவது அமர்வு, கைதடியில் அமைந்துள்ள வட மாகாண சபை அலுவலகத்தில், அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் நேற்று (14-6-2016) காலை 9 மணிக்கு ஆரம்பமாகியது.
இதன்போது முதலமைச்சரினால் குறித்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது. குழுநிலை விவாதத்தின் பின்னர், சிறு திருத்தங்களுடன் குறித்த பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
முதலமைச்சரால் முன்மொழியப்பட்ட குறித்த சட்ட வரைபை, வடமாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் எஸ்.தவராசா வழிமொழிந்தார். எதிர்ப்புகளுமின்றி குறித்த பிரேரணை அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்த நியதிச் சட்ட விவாதத்தின் போது,
வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற மக்கள் எனும் சொல்லுடன் , போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் எனும் சொல்லும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வலியுறுத்தினார்.
மத்திய அரசாங்கம் போரினால் பாதிக்கப்பட்ட மக்களை கைவிட்டு உள்ளது. அதேபோன்று நாமும் கைவிட முடியாது. தென்னிலங்கையில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கியது இன்றும் வழங்கி வருகின்றது. அதேபோன்று சாலவ இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடி விபத்தை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கி வருகின்றது. வீடிழந்தவர்களுக்கு வீடுகளை வழங்கு கின்றது ஆனால் இங்கு போரினால் பாதிக்கப்பட்டு பல குடும்பங்கள் 30 வருட காலமாக வீடு இழந்து வீதியில்நிற்கின்றனர் என மேலும் தெரிவித்த சிவாஜிலிங்கம் முப்படைகள் மற்றும் பொலிஸ் கையகப்படுத்தி வைத்துள்ள தனியார் வீடுகள் கட்டடங்களுக்கு பணம் கொடுப்பதில்லை எனவே போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் என்பதனை இணைந்துக் கொள்ள வேண்டும் என கேட்டுகொண்டார்.
சிவாஜிலிங்கத்தின் கோரிக்கைக்கு தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் ஆதரவு அணியின் இரு உறுப்பினர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டு ‘போரினால் பாதிக்கப்பட்ட மக்கள்’ என்ற சொற்பதம் பாவிப்பதற்கு தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசம் என எதனையும் தனித்து அடையாளம் காட்ட முடியாது. போரினால் இலங்கை முழுவதும் பாதிப்பு ஏற்பட்டது. எனவே போரினால் பாதிக்கப்பட்ட என்ற சொல்லுக்கு பதிலாக வேறு பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட என்ற சொல்லை பாவிப்போம் என வடமாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன் தெரிவித்தார்.
இன்னமும் 20 வருடங்களுக்கு பின்னர் போரினால் பாதிக்கப்பட்டவர்கள் என எவரும் இருக்க போவதில்லை எனவே போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் என்பதனை இணைத்துக் கொள்ள தேவையில்லை என மாகாண சபை உறுப்பினர் அரியக்குட்டி பரஞ்சோதி கூறினார்.
இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என வலியுறுத்தியே புலம் பெயர் தேசத்தில் உள்ள பலர் உதவ முன் வருகின்றார்கள். எனவே அந்த சொல்லினை சேர்ப்பதில் பிரச்சனை இல்லை. 20 வருடங்களின் பின்னர் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் என்று எவரும் இல்லாது போய் விடின் அப்போது உள்ளவர்கள் அதில் திருத்தத்தைக் கொண்டு வரட்டும், என்றார்.
இறுதியில் போரினால் பாதிக்கப்பட்ட அல்லது வேறு அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என மாற்றம் செய்யப்பட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது