பிரித்தானிய பிரஜை மீது யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் தாக்குதல்

attack

சாவகச்சேரி நீதிமன்ற உத்தரவிற்கு அமைய யாழ் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, பிரித்தானிய பிராஜாவுரிமைபெற்ற இலங்கையர் மீது, சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் கம்பியாலும் தடியாலும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
பிராஜாவுரிமைபெற்ற இலங்கையர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக, மனித உரிமைகள் ஆணையகத்தின் யாழ்ப்பாண கிளை அலுவலக இணைப்பாளர் ரி.கனகராஜ், இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்தார். இந்த தாக்குதல் சம்பவத்தினால் காயமடைந்த நபர், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை இரவு, யாழ். சிறைச்சாலையில் இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் லண்டனில் வசித்து வந்தவரும், குடமியன் வரணிப் பகுதியினைச் சேர்ந்தவருமான 35 வயதான வேலாயுதம்பிள்ளை ரேணுகாரூபன் என்பவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் குடமியன் பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட நிலையில் ஏற்கெனவே நால்வர் கொடிகாமம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், ஐந்தாவது சந்தேகநபராக இவர் தேடப்பட்டு வந்திருந்தார்.
இந்நிலையில் வெளிநாட்டுக்குச் சென்று மீண்டும் நாடு திரும்பிய நிலையில், கடந்த 01ஆம் திகதி, பொலிஸார் இவரைக் கைது செய்து, சாவகச்சேரி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி நீதிமன்ற உத்திரவிற்கு அமைய விளக்கமறியலில் வைத்திருந்தனர்.
இவ்வாறான ஒரு நிலையில், சிறைச்சாலை அதிகாரிகளுடன் குறித்த சந்தேக நபர், வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டிருந்ததுடன், அநாவசியமான சொற்களைப் பாவித்துள்ளமையினால், சிறைச்சாலை அதிகாரிகள் இவர் மீது தாக்குதல் மேற்கொண்டதாக சிறைச்சாலை வட்டாரத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட நபரின் உறவினர்கள் யாழ்.மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila