முன்னாள் போராளிக் குடும்பங்களை வெளியேறுமாறு பொலிஸார் எச்சரிக்கை!


கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டிருந்து விடுவிக்கப்பட்ட காணிகளில் குடியேறுவதற்கு தடைவிதிக்கப் பட்டுள்ளது. ஏற்கனவே அங்கு குடியேறியிருந்த மக்களை உடனடியாக வெளியேறுமாறு பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர்.

காணியில் இருந்து வெளியேறாது விட்டால் கைதுசெய்வோம் என இன்று செவ்வாய்க்கிழமை பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளதாக பாதிக்கப்பட்ட குடும்பத் தலைவி ஒருவர் தெரிவித்தார்.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கிளிநகர் கிராம அலுவலர் பிரிவில் நீதிமன்றத்திற்கு பின்புறமாக உள்ள காணிகள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து கடந்த ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி விடுவிக்கப்பட்டன.

எனினும் அக்காணிகளில் வசித்து வந்தோர் மீண்டும் அங்கு குடியேறுவதற்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்டோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

15 குடும்பங்களுக்குச் சொந்தமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த காணிகளின் உரிமையாளர்கள் முன்னாள் போராளிகளாக காணப்படுகின்றனர்.

இவர்களில் 13 குடும்பங்கள் பெண் தலைமைத்துவக் குடும்பங்களாக காணப்படுவதுடன் 2 குடும்பங்கள் மாற்றுத் திறனாளிகளை உள்ளடக்கியுள்ளனர்.

இவ்வாறு காணியின்றி பாதிக்கப்பட்டுள்ள மக்கள் கடந்த 1995 ஆம் ஆண்டு தொடக்கம் 2008 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து செல்லும்வரை குறித்த பிரதேசத்தில் வசித்து வந்ததாகவும், ஆனால் மீள்குடியேற்றத்தின் பின்னர் தமது காணிகள் முழுமையாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் காணப்பட்டதனால் மீள்குடியேற முடியாத நிலை ஏற்பட்டது என்றும் தெரிவித்தனர்.

எனினும் குறித்த காணிகள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்டம் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள் காணி உரிமையாளர்கள் அக்காணிகளில் குடியேறுவதற்கு அனுமதி மறுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர் தமிழ்க்கவி,

“தாங்கள் அனைவரும் புனா்வாழ்வுபெற்ற முன்னாள் பேராளிகள் என்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் எனவும் தெரிவித்த அவர், குறித்த காணிகளில் தாங்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்களை மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில் கையளித்துள்ளதாகவும் தமக்கு வேறு எங்கும் மாற்றுக்காணி இல்லை என்றும் தெரிவித்தார்.


கடந்த ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி இராணுவம் காணிகளை விடுவித்த பின்னா் இன்று வரை தங்களை காணிகளுக்கு அனுமதிக்காமை கவலையளிப்பதாகவும் குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பாக வடமாகாண ஆளுநா் றெஜினோல்ட் குரேயை நேரில் சென்று சந்தித்தபோது அவரும் விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளான உங்களுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும்.

எனவே உங்களது காணிகளை மீண்டும் உங்களிடம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தான் உடனடியாக மாவட்ட அரச அதிபருக்கு அறிவிப்பதாக உறுதியளித்ததாக குறிப்பிட்டார்.

எனினும் குறித்த விடயம் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவிக்கும் போது.

“கடந்த ஏப்ரல் மாதம் கிளிநொச்சி நகரில் இராணுவம் வசம் காணப்பட்ட சில காணிகள் விடுவிக்கப்பட்டன. ஆனால் ஒரு காணிக்கு பலர் உரிமை கோரி வருகின்றாா்கள்.

அவ்வாறு உரிமை கோரும் சிலரிடம் எவ்வித ஆவணங்களும் இல்லை. பலர் குறித்த காணிகளை புதிதாக கையகப்படுத்தி குடியேறுவதற்கு முயற்சிக்கின்றார்கள்.

இவ்வாறு ஏராளமான பிரச்சினைகள் காணப்படுகின்றது. எனவேதான் நாம் ஒரு குழுவை அமைத்து இந்தக் காணிகள் தொடா்பில் தெளிவாக ஆராய்ந்த பின் உரியவர்களிடம் வழங்குவதற்கு தீா்மானித்துள்ளோம்.

கிளிநொச்சி மாவட்டத்தை பொறுத்தவரை அதிகளவு காணிகள் பிணக்குகள் உள்ள மாவட்டமாக காணப்படுகின்றது. எனவேதான் காணி விடயத்தில் அதிக கவனமெடுத்து தீர்வுகாண வேண்டியுள்ளது என தெரிவித்தார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila