துருக்கியில் முன்னெடுக்கப்பட்ட இராணுவ சதிப் புரட்சியின் போதான வன்முறையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 194 ஆக அதிகரித்துள்ளதாக பதில் இராணுவத் தளபதி உமித் டன்டர் குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்தவர்களுள் 47 பேர் பொதுமக்கள் எனவும் 104 பேர் இராணுவப் புரட்சியில் ஈடுபட்ட இராணுவ வீரர்கள், 41 பொலிஸ் அதிகாரிகள் எனவும் ஏனைய இருவரும் புரட்சியில் ஈடுபடாத இராணுவத்தினர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
துருக்கி முழுவதும் முன்னெடுக்கப்பட்ட வான்தாக்குதல்கள் மற்றும் ஆயுதப் படையினரின் சதிப் புரட்சியில் சுமார் ஆயிரத்து 500 இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். அதேவேளை, சதிப் புரட்சியில் ஈடுபட்ட ஆயிரத்து 500 இராணுவத்தினர் கைது செய்யப்பட்டும் உள்ளனர்.
இராணுவத் தலைமை தளபதி Hulusi Akar புரட்சியாளர்களால் கடத்தப்பட்டதை அடுத்து அவருக்கு பதிலாக உமித் டன்டர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பொதுமக்களின் ஆதரவுடன் துருக்கிய இராணுவ சதிப்புரட்சி முறியடிப்பு (2ஆம் இணைப்பு)
துருக்கி நாட்டின் அதிகாரத்தினை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் வகையில் இராணுவத்தின் ஒரு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட இராணுவ சதிப் புரட்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆட்சிக் கவிழ்ப்பை முன்னெடுக்கும் வகையிலான இராணுவப் புரட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசாங்கத்திற்கு ஆதரவாக வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்துமாறு துருக்கி பிரதமர் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கமைய பல்லாயிரக் கணக்கானோர் வீதியில் இறங்கி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியதை அடுத்து இராணுவம் பின்வாங்கியுள்ளது. அதேவேளை, சிறு பகுதி இராணுவத்தினரே புரட்சியில் ஈடுபட்டமை மற்றும் உயர் இராணுவ அதிகாரிகள் இப்புரட்சிக்கு கண்டனம் தெரிவித்து வந்தமையுமே இந்த இராணுவப் புரட்சி முறியடிக்கப்பட்டமைக்கான பிரதான காரணங்களாக விளங்குகின்றன.
மேலும், இராணுவத்தினர் தொடர்ந்தும் குண்டுகளை வீசி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்றம், செய்மதி ஒளிபரப்பு நிலையம் மற்றும் இஸ்தான்புல் விமான நிலையம் ஆகியவற்றிற்கு அருகே இந்த தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தாக்குதல்களில் இதுவரை சுமார் 60 பேர் கொல்லப்பட்டிருப்பதுடன், 300இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
அதேவேளை, இராணுவப் புரட்சியில் ஈடுபட்ட சுமார் 700 இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி எர்டகோன் தலைமையில் ஊழல் ஆட்சி நிலவுவதாக குறிப்பிட்டே இந்த இராணுவப் புரட்சி முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஜனநாயக ஆட்சிக்கு மதிப்பளிக்குமாறும், அரசாங்கத்திற்கு ஆதரவளிக்குமாறும் அனைத்து கட்சிகளுக்கும் நேட்டோ அமைப்புக்கள் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளும் வலியுறுத்தியுள்ளன.
அதேவேளை புரட்சிக்காரர்களால் கடத்தப்பட்டு பணையக் கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இராணுவத் தலைமை தளபதி Hulusi Akar விடுதலை செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.துருக்கியில் இராணுவ சதிப்புரட்சி வன்முறையில் 42 பேர் உயிரிழப்பு: 130 பேர் கைது
துருக்கி நாட்டின் அதிகாரத்தினை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் வகையில் இராணுவத்தின் ஒரு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட இராணுவ சதிப் புரட்சியினால் ஏற்பட்ட வன்முறைகளால் சுமார் 42 பேர் உயிரிழந்துள்ளனர். அதேவேளை, சதிப் புரட்சியில் ஈடுபட்ட சுமார் 130 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
துருக்கி நாட்டின் அதிகாரத்தினை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதாக அந்நாட்டு இராணுவத்தின் ஒரு பகுதியினர் அறிவித்தனர்.
எனினும் இது ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கை இல்லை என்றும், இது இராணுவக் குழு ஒன்றின் சட்டவிரோத நடவடிக்கை எனவும் தெரிவித்த துருக்கிய பிரதமர் Binali Yildirim, அரசு மீண்டும் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரும் என்றும் குறிப்பிட்டார்.
அதேவேளை, இது தேசத்துரோக செயல் எனத் தெரிவித்த துருக்கி ஜனாதிபதி எர்டகோன், இக்குற்றச் செயலை செய்ய முனைந்தவர்கள் தண்டிக்கப்படுவர் எனவும் குறிப்பிட்டார். அத்துடன், தற்போது இராணுவ சதிப் புரட்சி முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
எனினும் துருக்கியின் கட்டுப்பாடு தற்போது யார் கையிலுள்ளது என்பது தொடர்பில் தொடர்ந்தும் முரண்பாடு நிலவி வருவதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
