உண்மையான அக்கறையை வெளிக்காட்டுங்கள்

625.117.560.350.160.300.053.800.210.160.90 (4)

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலர் நிஷா பிஷ்வால் மற்றும் ஜனநாயக மனித உரிமைகள் தொடர்பான உதவிச் செயலர் டொம் மலிநவ்ஸ்கி ஆகியோர் அரசாங்கத்தரப்பின் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விடயத்தில் அமெரிக்கா பாரிய அக்கறை எடுத்து வருவதாகக் கூறியுள்ள நிஷா பிஷ்வால் மற்றும் டொம் மலிநவ்ஸ்கி ஆகியோர் நல்லிணக்கத்தையும் பொறுப்புக்கூறலையும் நிறைவேற்றுவதற்கு முழுமையான ஆதரவுகள் வழங்கப்படுமெனத் தெரிவித்துள்ளனர்.
ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் கடந்த வருடம் இலங்கையின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை அமெரிக்காவே கொண்டுவந்திருந்தது.
அந்தவகையில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்டு ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமைவாக இலங்கை அரசாங்கம் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை முன்னெடுக்கின்றதா என்பதில் அமெரிக்கா அக்கறையுடன் இருப்பதாகக் கூறப்படுகின்றது.
ஆனால், இலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் மற்றும் பொறுப்புக்கூறும் செயற்பாட்டில் சர்வதேச சமூகம் இதயசுத்தியுடனான அக்கறையையும் ஆர்வத்தையும் செலுத்துகின்றதா என்பது குறித்து பாதிக்கப்பட்ட மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
அதாவது, தமிழ் மக்களின் பிரச்சினைகள் மற்றும் போர்க்குற்ற விவகாரங்களைக் கொண்டு சர்வதேச சமூகம் தமது தேவையை நிறைவேற்றும் சுயநல அரசியலில் ஈடுபடுகின்றது என்ற குற்றச்சாட்டுக்களும் அவ்வப்போது முன்வைக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட நிஷா பிஷ்வால் மற்றும் டொம் மலிநவ்ஸ்கி ஆகியோர் நேற்று முன்தினம் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான பிரதிநிதிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.
இந்த சந்திப்பின்போது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ளதாகக் கூறப்படும் உள்ளக விசாரணைப் பொறிமுறையில் சர்வதேச பங்களிப்பு இடம்பெறுமா? என்பது தொடர்பாகவே விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்கப் பிரதிநிதிகள் அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் பொறிமுறை அமைக்கப்படும்போது சர்வதேச பங்களிப்பு குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடு அறிவிக்கப்படுமென தமிழ்த் தேசியக்கூட்டமைப்பிடம் உறுதியளித்துள்ளனர்.
எவ்வாறெனினும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான பொறுப்புக்கூறல் பொறிமுறையானது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் அமையவேண்டும்.
இது தொடர்பில் அமெரிக்காவின் பங்களிப்பும் தொடரும் என்றும் நிஷா பிஷ்வால் மற்றும் டொம் மலிநவ்ஸ்கி ஆகியோர் கூட்டமைப்பிடம் தெரிவித்துள்ளனர்.
இந்த சந்திப்பு தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணையை அமுல்படுத்துவது தொடர்பாக நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஜெனிவா தீர்மானத்திற்கு அமைவான பொறுப்புக்கூறல் விடயத்தில் அரசாங்கத் தரப்பிலிருந்து மாறுபட்ட கருத்துக்கள் வெளிவருவதை அமெரிக்கா அவதானித்துள்ளது.
பொறுப்புக்கூறல் தொடர்பான பொறிமுறை உருவாக்கப்படும் தருணத்தில் நாங்கள் அது தொடர்பில் பேசுவோம் என்றும் அமெரிக்கப் பிரதிநிதிகள் கூட்டமைப்பிடம் தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குறிப்பிட்டிருக்கிறார்.
அரசியல் கைதிகள் விடுதலை விவகாரம் , பொதுமக்களுக்கு சொந்தமான காணிகள் விடுவிக்கப்படுவதில் மந்தகதி உள்ளிட்ட மக்களின் உடனடிப் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குவதில் காணப்படும் தாமதம் என்பன குறித்தும் நாம் அமெரிக்க அதிகாரிகளிடத் தில் எடுத்துரைத்திருக்கின்றோம்.
இந்த நிலைமைகள் குறித்து தாம் அறிந்துள்ளதாகவும், இது குறித்து அரசாங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும், அமெரிக்க உதவிச் செயலாளர்கள் எம்மிடம் குறிப்பிட்டனர் என்றும் சுமந்திரன் தெரிவித்திருக்கிறார்.
அதுமட்டுமன்றி, வடக்கில் இராணுவப் பிரசன்னம் தொடர்ந்து காணப்படுகின்றமை மற்றும் இராணுவத்தின் தேவைக்காக தொடர்ந்தும் காணிகள் அடையாளம் காணப்பட்டு திட்டமிட்டவகையில் அவை சுவீகரிக்கப்படுகின்றமை நீடித்தல் போன்றன தொடர்பாகவும் அமெரிக்கப் பிரதிநிதிகளுக்கு எடுத்துக்கூறினோம் என்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
இந்நிலையில் தமிழ் மக்களின் பிரதான அரசியல் கட்சியான தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் வடக்கு, கிழக்கின் தற்போதைய நிலைமை குறித்தும் அமெரிக்கப் பிரதிநிதிகளிடம் மிகவும் தெளிவாக எடுத்துரைத்திருக்கின்றது.
அதாவது, இலங்கையில் முழுமையாக அமுல்படுத்தப்படவேண்டுமென வலியுறுத்தப்பட்டு வருகின்ற ஜெனிவா பிரேரணையை கொண்டுவந்த நாடு என்ற வகையில் அமெரிக்காவிடம் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பிரதிநிதிகள் பாரிய நம்பிக்கையுடனேயே இந்த விடயங்களை எடுத்துக்கூறியுள்ளனர்.
இந்நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச சமூகமானது இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகள் மற்றும் பொறுப்புக்கூறல், நல்லிணக்க விடயத்தில் ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்குவதற்கு முன்வரவேண்டும்.
யுத்தத்தின்போது இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்கள் என்பவற்றினால் பாதிக்கப்பட்ட மக்கள் நீதி வழங்கும் செயற்பாட்டில் சர்வதேச சமூகம் ஒரு ஆக்கபூர்வமான பங்களிப்பை செலுத்தும் என மிகப்பெரிய நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.
அந்த நம்பிக்கையை வீணடிக்காமல் மக்களுக்கு நீதி கிடைப்பதற்கு சர்வதேசம் இதயசுத்தியுடனான முறையில் பங்களிப்பு செய்யவேண்டும். அதனைவிடுத்து சர்வதேச தேவைகளின் பிரகாரம் நாடுகள் இலங்கையில் தமது சுயநல அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க முயற்சிக்கக் கூடாது.
இவ்வாறான சந்தேகத்துக்குரிய விடயங்கள் முன்வைக்கப்படுகின்றமைக்கு முக்கிய காரணங்களும் முன்வைக்கப்படாமல் இல்லை. அதாவது, கடந்த அரசாங்கம் ஆட்சியிலிருந்தபோது சர்வதேச சமூகம் இலங்கை விவகாரத்தில் கடும்போக்கைக் கொண்டிருந்தது.
அதாவது, தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும் என்றும் அரசியல்தீர்வு முன்வைக்கப்பட வேண்டுமெனவும் நல்லிணக்கமும் பொறுப்புக்கூறலும் சரியான முறையில் அடையப்பட வேண்டுமெனவும் அழுத்தங்களை சர்வதேச சமூகம் பிரயோகித்து வந்தது.
கடந்த ஆட்சிக் காலத்தில் சர்வதேச சமூகத்திற்கும் இலங்கைக்குமிடையில் தமிழ்மக்களின் பிரச்சினைகள் விடயத்தில் பாரிய முரண்பாடுகளும், உறவில் சீர்குலைந்த தன்மையும் காணப்பட்டது.
சர்வதேச சமூகம் தொடர்ச்சியாக அரசாங்கத்திற்கு எதிராக ஜெனிவா மனித உரிமைகள் பேரவையிலும் சர்வதேச மேடைகளிலும் கருத்துக்களை வெளியிட்டு வந்தது.
அந்தவகையில் பாதிக்கப்பட்ட மக்களும் சர்வதேச சமூகம் தமது பிரச்சினையை சிறந்த முறையில் அணுகுவதாக நம்பி மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர்.
ஆனால் நாட்டில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டதன் பின்னர் தமிழ் மக்கள் விடயத்தில் சர்வதேச சமூகம் கொண்டிருந்த அதே அக்கறை இருக்கின்றதா? என்ற கேள்வியை பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது எழுப்புகின்றனர்.
அதாவது தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவான போக்கை சர்வதேச சமூகம் கொண்டுள்ளதாகவும், எனவே பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரச்சினைகள் விடயத்தில் பராமுகத்துடன் செயற்படுவதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
எனவே, இந்த விமர்சனங்களை அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச சமூகம் கவனத்தில் எடுக்கவேண்டியது அவசியமாகும்.
அதாவது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் சர்வதேச சமூகம் செயற்படவேண்டியது மிகவும் முக்கியமாகும்.
தற்போது கூட முன்னெடுக்கப்படவுள்ளதாக கூறப்படும் உள்ளக விசாரணைப் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகள் உள்வாங்கப்படுமென பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சர்வதேச சமூகமானது இதில் நேர்மையான மற்றும் ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்கவேண்டும்.
இந்த விடயத்தில் அரசாங்கத்திற்கு சரியான முறையில் அழுத்தங்களை பிரயோகிப்பதன் மூலமே பாதிக்கப்பட்ட மக்கள் நீதியைப் பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்த முடியும்.
அதனைவிடுத்து, தமிழ் மக்களின் பிரச்சினைகளை பகடைக்காயாகக்கொண்டு தமது நலன்களை அடைந்து கொள்வதற்கு சர்வதேச சமூகம் ஒருபோதும் முயற்சிக்கக்கூடாது என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila