அதாவது தமக்கான விடிவுகாலம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் எமது மக்கள் இன்றைய அரசினை தெரிவு செய்தனர். ஆனால் தற்போதைய நடைமுறையில் தமது கனவு இலவு காத்த கிளி போல சென்று கொண்டிருப்பதனை நடைமுறையில் அவதானிக்க முடிகின்றது..
அதாவது, இந்த அரசினை ஆட்சி பீடம் ஏற்றிய பெருமையானது தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கே உரித்தாகும். அவ்வாறு இருந்தும் இன்று நான்கு பக்கங்களிலும் தாக்கப்படுகின்ற ஒரு சமூகமாக தமிழ் பேசும் மக்கள் காணப்படுகின்றனர்.
இனவாதப் போக்கினை மாத்திரம் வைத்து அரசியல் செய்கின்ற சக்திகளை இன்று அரசு கண்டும் காணாமலும் இருப்பது எமது மக்களின் எண்ணங்களினை பொய்ப்பிக்கச் செய்கின்றது.
மஹிந்த அரசானது எவ்வாறு இனவாதிகளுக்கு எண்ணெய் ஊற்றி வளர்த்ததோ, அந்த நிலையினையொத்த சம்பவங்கள் நாளாந்தம் வளர்ந்துகொண்டு வருவதனையும், இலங்கையின் சகல பாகங்களிலும் நடைபெற்றுக்கொண்டிருப்பதனையும் நாம் அவதானிக்கலாம். கோயில்கள், பள்ளிவாசல்கள் நாளாந்தம் தாக்குதலுக்கு உள்ளாகின்றது.
பயங்கரவாத தடைச்சட்டம் இருக்கும் நிலையிலேயே இன்றைய அரசினை அச்சுறுத்தும் சக்தியாக சிங்கள பௌத்த குழுக்கள், வளர்ந்துகொண்டே வருகின்றது. ஒரு நாட்டின் இறையாண்மை பொருந்திய நீதிமன்றத்தினை அவமதித்து நடக்கின்ற நிலைமையானது தொடர்கின்றது. சிறுபான்மைக்கு ஒரு நீதி, சிங்கள பேரினவாதிகளுக்கு ஒரு நீதி என இன்று நீதித்துறை வலுவிழந்து கொண்டிருக்கின்றது.
மக்களின் பணத்தினை விழுங்கி வாழ்ந்த, வெள்ளை வான் கடத்தல்காரர்களான கடந்த ஆட்சியாளர்களுக்கு தண்டனை கிடைக்கும் என்று மக்கள் கண்ட கனவு பொய்யாகிக்கொண்டிருக்கின்றது. சிரித்துக்கொண்டே சிறைகூடம் செல்கின்ற மஹிந்தவின் சகோதரர்களும், பிள்ளைகளும் செல்பி எடுத்துக்கொண்டு பேட்டியளிக்கின்றனர்.
சிறைகூடம் இன்று ஆடம்பர ஹோட்டல்களாக மாற்றப்பட்டு வீட்டிலிருந்தே உணவு வரவழைக்கப்பட்டு உணவு பரிமாறப்படுகின்றது. ஏழைகளுக்கொரு நீதி, அரசியல் சூதாட்டக்காரர்களுக்கொரு நீதியென நீதித்துறை பிளவுபட்டுள்ளது.
குற்றம் செய்தவர்கள் இந்த நல்லாட்சியில் தண்டிக்கப்படுவார்கள் என்ற மக்களின் எண்ணம் பொய்யாகிப்போனது.
பத்து ரூபாய் களவாடியவனுக்கு பத்து நாள் சிறை தண்டனை ஆனால் மக்களின் பணத்தை வரியாக பெறுபவர்களுக்கு பல்லாக்கு மெத்தை, தான் செய்த தவறு எதுவாக இருப்பினும் ஆட்சிபீடமேறிய அரசுடன் ஒட்டிக்கொண்டால் தான் பிளைத்துக்கொள்ளலாம் என்ற எண்ணமே இன்றைய ஆட்சியாளர்களின் அலட்சியப்போக்கிற்கு காரணமாகும். அதுவேதான் நிஜமும்.
தமது இருப்பினை பலப்படுத்துவதற்கு யாராக இருப்பினும் தன்னுடன் இணைந்துகொண்டால் போதும் என்ற போக்கில் இந்த அரசின் செயற்பாடுகள் சென்று கொண்டிருக்கின்றது.
ஒன்றிணைந்த கூட்டு எதிர்கட்சி என்ற ஒரு கட்சி பலம் பொருந்திய எதிர் சக்தியாக மாறிக்கொண்டிருக்கின்றது. இதன் பாதிப்பு இறுதியில் சிறுபான்மை இனத்தினைதான் வந்து தொடரும். இது சிறுபான்மை மக்களின் தூக்கத்தினை கலைத்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு புதிய புதிய பெயரில் சிறுபான்மைக்கு எதிரான சக்திகள் உதயமாகிக்கொண்டிருக்கின்றது.
காலத்திற்கு காலம் உயர்மட்ட பிரதிநிதிகள் இலங்கைக்கு வந்து சென்று கொண்டிருக்கின்றர்கள். ஆனால், இது வரையும் பாதிக்கப்பட்ட மக்கள் மட்டும் அதே இடத்தில் காத்துக்கொண்டிருக்கின்றார்கள் விடிவு கிடைக்குமா என்று.
இதனிடையே நல்லாட்சி எனும் நாமம் சூட்டிய அரசானது தமிழ் பேசும் மக்களின் தேவைகளை நிறைவேற்றுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.... காலம் பதில் சொல்லட்டும்..!