புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் சந்தேகநபர்களின் வாக்குமூலப் பிரதிகளை குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் கையளிக்க முடியாது என நீதவான் தெரிவித்துள்ளார்.
புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கு விசாரணை இன்று ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.எம்.றியாழ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது வழக்கில் சம்பந்தப்பட்ட 12 சந்தேக நபர்களும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.
இதன்போது குற்றத்தடுப்பு பிரிவினர் தாம் இதுவரை மேற்கொண்ட விசாரணைகள் குறித்த அறிக்கையினை சட்டமன்ற திணைக்களத்திடம் பரப்படுத்தி உள்ளதாகவும், தங்களது விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் சந்தேகநபர்கள் நீதிமன்றில் வழங்கிய வாக்குமூல பிரதிகளை தங்களிடம் ஒப்படைக்குமாறு மன்றில் கோரியிருந்தனர்.
ஆனால் சந்தேகநபர்களின் வாக்குமூலங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த நீதவான் அவற்றின் பிரதிகளை குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் வழங்க முடியாது. வாக்குமூலப் பிரதிகள் மேல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் மேல் நீதிமன்ற அனுமதியுடன் அவற்றை பெற்றுக் கொள்ளுமாறும் தெரிவித்தார்.
இந்நிலையில், தங்களது மரபனு அறிக்கை தொடர்பிலான முடிவுகளை தெரிவிக்குமாறு சந்தேகநபர்கள் மன்றில் கோரினார்கள். மரபணு அறிக்கை முடிவு தெரிவிக்க வேண்டிய நேரத்தில் தெரிவிக்கப்படும் என நீதவான் தெரிவித்தார்.
மேலும், குறித்த கொலை இடம்பெறுவதற்கு முன்னர் புங்குடுதீவு கிராமத்தில் வசித்த குடும்பங்களின் விபரம், சம்பவத்தின் பின்னர் குறித்த கிராமத்திலிருந்து வெளியேறியவர்கள் மற்றும் புதிதாக குடியேறியுள்ளவர்களின் விபரங்களை மன்றில் சமர்ப்பிக்குமாறு கிராம சேவையாளருக்கு நீதவான் கடந்த தவணையின் போது உத்தரவிட்டிருந்தார்.
அதற்கமைய இன்றைய தினம் மாணவி வசித்த கிராம சேவையாளர் பிரிவான J / 24 பிரிவின் கிராம சேவையாளர் செல்லதுரை சிவா இன்று மன்றில் முன்னிலையாகி கொலைக்கு முன்னர் 30 குடும்பங்கள் வசித்ததாகவும் தற்போது 31 குடும்பங்கள் வசிப்பதாகவும் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் 26ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.அதுவரையில் 12 சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு இட்டார்.