உடுவில் மகளிர் கல்லூரி எம் மண்ணில் இருக்கக்கூடிய ஒரு பழமை வாய்ந்த கல்லூரி. யாழ்ப்பாணத்தின் கல்விப் பாரம்பரியத்தில் அந்தக் கல்லூரியின் வகிபாகம் சாதாரணமானதல்ல.
இருந்தும் இன்றைய சூழ்நிலையில் அந்தக் கல்லூரி சின்னாபின்னப்பட்டு அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், தென்னிந்திய திருச்சபையின் தலைமை நிர்வாகம், கல்லூரியின் பணிப்பாளர் சபை என கன்னை பிரிந்து நிற்பது கண்டு மனம் வெந்து போகிறது.
வடபுலத்தின் கல்வி நிலை வீழ்ச்சி கண்டுள்ள இன்றைய யதார்த்த நிலையில், பிரபல்யமான கல்லூரிகள் உள்ளிட்ட எந்தப் பாடசாலைகளையும் குழப்புவதில் யார் ஈடுபட்டாலும் அது வன்மையாகக் கண்டிக்கத் தக்கதாகும்.
அதேவேளை இதுதான் சந்தர்ப்பம் எனக் கருதி ஒவ்வொருவரும் தத்தம்பாட்டிற்கு பக்கம் சார்ந்து தகவல்களை-அறிக்கைகளை வெளியிடுவது மிகப்பெரும் பாவச்செயல். இந்தச் செயலை நிச்சயம் இறைவன் ஒரு போதும் மன்னிக்கமாட்டான்.
உடுவில் மகளிர் கல்லூரி தென்னிந்திய திருச்சபையின் நிர்வாகத்திற்கு உட்பட்டது. எனவே இறைபோதனை செய்கின்ற ஓர் அமைப்பு இந்தளவு தூரம் உடுவில் மகளிர் கல்லூரியை பிசக்கி இருக்கக்கூடாது என்பது நம் தாழ்மையான கருத்து.
இங்கு மாணவிகள் தாக்கப்படவில்லை எனவும் அது ஒரு சிலரால் புனையப்பட்டது எனவும் பாடசாலை மீது நலன் கொண்டவர்கள் எனத் தம்மை குறிப்போர் ஊடகங்கள் மூலம் அறிக்கை விட்டுள்ளனர்.
அந்த அறிக்கை உண்மையா? அல்லது பொய்யா? என்பது குறித்தும், தம்மை ஆசிரியர்கள் சிலர் கடு மையாகத் தாக்கினர் என்றும் கல்லூரிக்குள் நுழைந்த ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் தங்களை ஓடி ஓடிப் படம் பிடித்தார் என்றும் உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகள் மகஜர் தயாரித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் சம்பவம் அடங்கிய ஆதாரங்களையும் கையளித்துள்ளதாக கூறப்படுகிறது.
அப்படியானால் மாணவிகள் கூறுவது உண்மையா? அல்லது பொய்யா? என்பது தொடர்பிலும் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். நீதி விசாரணை ஒன்றுதான் உண்மையைக் கண்டறிவதற்கு உதவும்.
ஆக, உடுவில் மகளிர் கல்லூரி மீது யாருக்கேனும் அக்கறையும் கருசனையும் இருக்குமாயின் அவர்கள் சொல்ல வேண்டியது நீதி விசாரணை நடத்துங்கள். யாருடைய அறிக்கைக்கும் எடுபடாதீர்கள் என்பதாகவே இருக்கும்.
இதுவே நெஞ்சுக்கு நீதியானது. இதைவிடுத்து அவர்கள் தாக்கவில்லை; இவர்கள் பொய் சொல் லுகிறார்கள்.
அல்லது இவர்கள் உண்மை சொல்லுகிறார்கள்; அவர்கள்தான் பொய் சொல்லுகிறார்கள் என்ற வாதம் அபத்தமானது; அநியாயமானது.
பரமபிதாவை வழிபடுகின்ற ஒரு திருச் சபையின் ஆளுகைக்கு உட்பட்ட ஒரு கல்லூரியில் இருக்கக் கூடிய ஒருவரேனும்,
ஐயா! பக்கச்சார்பற்ற நீதி விசாரணையை நட த்துங்கள். நீதி விசாரணை என்ன முடிவைத் தருகிறதோ அதை ஏற்றுக்கொள்ளுங்கள். தவறு விட்டவர்கள் பகிரங்க மன்னிப்புக் கேட்கட்டும் என்பதுதான் நெஞ்சுக்கு நீதியானது.
ஓ! யாழ்ப்பாணத்தின் மிகப்பெரிய புத்திஜீவிகளே! உடுவில் மகளிர் கல்லூரியில் நடந்தவையும் அவை கையாளப்படும் விதங்களும் இறைவன் எங்களுக்கு ஒருபோதும் பாவமன்னிப்பு தரமாட்டான் என்பதையே நிரூபிக்கின்றதல்லவா?