கடந்த காலத்தில் கொல்லப்பட்ட மற்றும் தாக்குதலுக்கு உள்ளான தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பாக, பிரதேச பேதமின்றி சகல தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றில் ஒருமித்து குரல்கொடுக்க வேண்டுமென ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த ஊடகவியலாளர்களின் குடும்பங்கள் இன்னும் வறுமை நிலையில் தவிப்பதை காணக்கூடியதாக உள்ளதென தெரிவித்துள்ள அவர், குறைந்த பட்சம் அவர்களுக்கு இழப்பீடுகளையாவது பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் கொல்லப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க மற்றும் காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட தொடர்பாக நாடாளுமன்றில் குரல்கொடுக்கும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, தான் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் வடக்கு கிழக்கில் இடம்பெற்ற தமிழ் ஊடகவியலாளர்களின் கொலை தொடர்பில் ஒரு கண்டனத்தைக்கூட தெரிவிக்கவில்லையென சுரேஸ் பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, குறித்த கொலைகளை நிகழ்த்திய அரச படைகள் மற்றும் அவர்களுடன் இணைந்து செயற்படுபவர்கள் இன்னும் வெளியே நடமாடுவதாக தெரிவித்த சுரேஸ் பிரேமச்சந்திரன், ஊடகத்துறை மற்றும் ஜனநாயக விழுமியங்கள் தொடர்பில் அக்கறை கொண்டிருந்தால் குறித்த கொலைகள் தொடர்பில் முழுமையாக விசாரிக்கப்பட்டு சூத்திரதாரிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டுமென மேலும் தெரிவித்துள்ளார்.