கிழக்கு கல்வி அமைச்சர் ஒரு சிற்றூழியரை கூட இன்னும் நியமிக்கவில்லை - யோகேஸ்வரன்

கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எமது இனத்தை சேர்ந்த ஒரு சிற்றூழியர்களைக் கூட நியமிக்கவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
வாகரை வம்மிவட்டவான் வித்தியாலயத்தில் இன்று(04) இடம் பெற்ற பரிசளிப்பு மற்றும் சஞ்சிகை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
வாகரைப் பிரதேசமானது முன்பு இருந்த நிலையிலிருந்து ஓரளவு முன்னேற்றமடைந்துள்ளது. ஆனால் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்ந்த வண்ணம் உள்ளது. மாகாண கல்வி அமைச்சினால் ஆசியர்கள் நியமனம் தொடர்பான நிகழ்வு மட்டக்களப்பு மஹாஜன கல்லூரியில் நடைபெற்றது.


இதில் கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் அழைக்கப்படவில்லை. இந்த நிகழ்வு தொடர்பாக நாங்கள் ஆராயவுள்ளோம். கல்குடா கல்வி வலயத்தின் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டிய பாரிய பொறுப்பு மாகாண கல்வி அமைச்சுக்கும் கல்விப் பணிப்பாளருக்கும் உள்ளது.

சில தமிழ் பாடசாலைகளில் சகோதர இன ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு சில நாட்களில் தங்களது பகுதிகளுக்கு அனுப்புமாறு அதிகாரிகளுக்கு அரசியல்வாதிகள் கடிதங்கள் அனுப்புகின்றனர். இதன் தாக்கத்தை அதிகமாக கல்குடா வலயம் அனுபவித்துள்ளது. இவ்வாறான செயற்பாடுகளை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது.

ஒரு சில தமிழ் அரசியல்வாதிகள் தங்கள் உறவினர்களின் இடமாற்றம் செய்வதற்காக அரசியலைப் பயன்படுத்துகிறார்கள். எனது உறவினர்கள் அதிகஷ்ட பிரதேசங்களில் கடமையாற்றுகிறார்கள் நான் ஒரு நாள் கூட இடமாற்றம் தொடர்பாக வலயக் கல்விப் பணிப்பாளரிடம் பேசியதில்லை.
வாகரை பிரதேசத்தில் மந்த பேசனையுள்ள மாணவர்கள் அதிகம் காணப்படுகிறார்கள். மிகவும் கஷ்டத்துக்கு மத்தில் தமது கல்வியை தொடருகின்றனர். இந்தப் பிரதேசத்தின் கல்வி வளர்ச்சிக்கு என்னாலான சகல பங்களிப்புகளையும் செய்து வருகின்றேன்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா மற்றும் மேற்கு வலயத்தில் அதிகம் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. ஆனால் மட்டக்களப்பு மற்றும் மத்தி ஆகிய வலயங்களில் மேலதிகமான ஆசிரியர்கள் உள்ளனர்.
மாகாணத்திலுள்ள வலங்களில் சரியான ஆசிரிய பங்கீடு செய்யப்படவேண்டும். கிழக்கு மாகாணத்தில் தமிழினம் சார்ந்த பகுதிகளில் ஆசிரியர் நியமனத்தில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன. இதை மாகாண கல்வி அமைச்சர் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கடந்த காலங்களில் எமது பாடசாலைகளில் எமது இனத்தைச் சாராதவர்கள் சிற்றூழியர்களாகவும், காவலாளிகளாவும் நியமிக்கப்பட்டார்கள். ஆனால் தற்போதுள்ள கல்வி அமைச்சர் எமது இனத்தைச் சேர்ந்த ஒரு சிற்றூழியர்களைக் கூட நியமிக்கவில்லை.
அடுத்த வருடம் செப்டம்பர் மாதத்துடன் கிழக்கு மாகாண சபை கலைந்துவிடப் போகிறது. இதையெல்லாம் நான் கேட்டால் கிழக்கு மாகாண சபை அமைச்சர்களை குறை கூறுவதாகவும், விமர்சிப்பதாகவும் எங்கள் கட்சித் தலைவரிடம் முறையிடுகிறார்கள்.
எங்களது கட்சியின் உறுப்பினர் கிழக்கு மாகாண கல்வி அமைச்சராக இருக்கிறார். மாகாண கல்வி அமைச்சின் இவ்வாண்டுக்கான நிதியில் 3400 மில்லியன் ரூபா திரும்பும் அபாயம் உள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினரொருவர் கருத்து வெளியிட்டுள்ளார். இது மிகவும் வேதனையான விடயம்.
வாகரைப் பிரதேசத்தில் காணிகளைக் குத்தகைக்கு எடுக்க வேண்டும் என்பதில் வெளியிடத்தைச் சேர்ந்தவர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்த பிரதேசத்தைச் சேர்ந்த மக்களால் ஏன் காணிகளைக் குத்தகைக்கு எடுத்து தொழில்களை மேற்கொள்ள முடியாதுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila