வெறுப்புணர்வைத் தூண்டும் சட்ட ரீதியற்ற ஒன்றுகூட லைத் தடுக்கும் நீதிமன்ற தடை உத்தரவு மட்டக்களப்பு மாவட்டத்தில் பிறப்பிக்கப்பட்டிருக்கின்ற வேளையில், மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்டம் நடத்த அங்குள்ள சுமணரத்னதேரர் நேற்று சனிக்கிழமை பிற்பகல் முயற்சி மேற்கொண்டதால் மட்டக்களப்பு நகரில் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது.
இவ்வேளை மட்டக்களப்பிலுள்ள மங்களராம விஹாரைக்கு செல்ல பொது பல சேனா அமைப்பின் ஞானசார தேரர் தலைமையிலான குழுவினர் மேற்கொள்ள முயற்சித்த வேளையில் அவர்களது பயணம் மட்டக்களப்பு - பொலநறுவை மாவட்டங்களின் எல்லையிலேயே பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டுவிட்டது.
பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசாரதேரர் உள்ளிட்ட குழுவினர் நேற்றைய தினம் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரை சந்திப்பதற்காக மட்டக்களப்பிற்கு பேரணியாக புறப்பட்டுச் சென்றனர்.
இந்த நிலையில், பொது பல சேனா அமைப்பின் விஜயத்தால் குழப்பங்கள் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்பு நேற்று அதிகாலை முதற்கொண்டு மட்டக்களப்பு நகரின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் பலப்படுத்தப்பட்டிருந்தது.
இதனையடுத்து மங்களராம விஹாரையை சூழவிருந்த தெருவோரக் கடைகள் பூட்டப்பட்டன. பயணிகள் பதற்றமடைந்தனர். போக்குவரத்து சேவையும் சற்று நேரம் பாதிக்கப்பட்டது.
ஞானசாரர் தலைமையிலான குழுவினர் தமது பயணத்தில் மட்டக்களப்பின் ஏறாவூர் நகரம், புன்னைக்குடா மற்றும் ஏறாவூர்ப்பற்றுப் பிரதேசத்தை அண்டிய பதுளை வீதியில் அரச மரம் உள்ள தனியார் காணியொன்றுக்குள் செல்வதாகவும் நிகழ்ச்சி நிரல் இடப்பட்டிருந்தது.
இதனைக் கருத்திற் கொண்டு பிரதேசத்தில் ஆர்ப்பாட்டங்களும் இனவெறுப்புணர்வுகளைத் தூண்டும் சம்பவங்களும் இடம்பெறலாம் என்பதால் கரடியனாறு பொலிஸார், அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்தி வெறுப்புணர்வைத் தூண்டும் ஒன்றுகூடலுக்குத் தடை விதிக்குமாறு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தை வேண்டியிருந்தனர்.
மனுவை ஆராய்ந்த மாவட்ட பதில் நீதிபதி ஆதம்லெப்பை முஹம்மத் முனாஸ் வெறுப்புணர்வைத் தூண்டும் சட்ட ரீதியற்ற ஒன்று கூடலைத் தடுக்கும் தடை உத்தரவைப் பிறப்பித்தார்.
இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசாரதேரர் உள்ளிட்ட குழுவினரை மட்டக்களப்பிற்கு செல்ல விடாது பொலநறுவை-வெலிக்கந்தை பொலிஸார் அவர்களது பயணத்தை தடுத்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த ஞானசாரதேரர் உள்ளிட்ட குழுவினர் பொலிஸாருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதுடன், பொலிஸாரின் எதிர்ப்பையும் மீறி, வாகனங்களை நிறுத்திவிட்டு மட்டக்களப்பிற்கு நடந்து செல்லப்போவதாக தெரிவித்தனர்.
இந்த நிலையில், மட்டக்களப்பு நகரில் பொலிஸாரினால் போடப்பட்ட பாதுகாப்பு அரண்கள் மீது ஏறி நின்ற அம்பிட்டிய சுமணரத்ன தேரர் கூச்சலிட்டவாறு இனவாத கருத்துக்களை கூறியுள்ளதுடன் ஞானசார தேரர் உள்ளிட்ட குழுவினரை மட்டக்களப்பு நகரினுள் அனுமதிக்க வேண்டும் எனவும் கோஷம் எழுப் பியிருந்தார்.
அதேசமயம் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் இருக்கும் விகாரையில் மாலை வேளை வழிபாடுகள் இடம்பெறவுள்ளதாகவும், அதில் சிங்கள மக்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறும் குறித்த விகாரையின் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறு குழப்பநிலை தொடர்ந்த நிலையில், சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன், சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் ஆகியோர் சென்றதுடன், பொலிஸாருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
மறுபுறம், பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசாரதேரர் உள்ளிட்ட குழுவினரை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு செல்லவிடாது தடுத்தால் தாம் தீக்குளிக்கப் போவதாக மட்டக்களப்பு மாவட்ட சிங்கள மக்கள் சிலர் பொலிஸாருக்கு எச்சரிக்கையும் விடுத்திருந்தனர்.
எனினும் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முற்பட்ட பொலிஸார், சுமணரத்தின தேரர் உள்ளிட்ட குழுவினரை அங்கிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டிருந்தனர். பாதுகாப்பு காரணம் கருதி வெலிகந்தை பகுதியில் வைத்து பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்ட ஞானசாரதேரர் அங்கிருந்த படியே குழப்பங்களை உண்டு பண்ணத் தொடங்கினார்.
ஒரு சந்தர்ப்பத்தில் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தடை உத்தரவினை கிழித்தெறிந்த பொதுபலசேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் பொலிஸாருடன் கடும் வாக்குவாதத்திலும் ஈடுப்பட்டிருந்தார்.
மட்டக்களப்பு பௌத்த மக்கள், நான் போதி பூஜை நடத்த வேண்டும் என ஆசைப்படுகின்றார்கள். அதற்காக நாங்கள் செல்கின்றோம். அது முடிந்ததும் நாங்கள் அங்கிருந்து வெளியேறி விடுவோம். எங்களுக்கு வழிவிடுங்கள். எங்களால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
நாங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட செல்லவில்லை. அவ்வாறு எதுவும் நடப்பின் பொலிஸ் அதிகாரிகள் அவற்றை பார்த்துக் கொள்ளுங்கள்.
ஆயுதம் ஏந்திய புலிகளை வீழ்த்தி அவர்களை நிராயுதபாணியாக மாற்றிய முப்படைகளுக்கு இதை செய்ய முடியாதா?
இது என்ன விளையாட்டு என்று எமக்கு தெரியும். இந்த அநியாயத்தினை எமக்கு செய்யவேண்டாம். மூளையுள்ள அதிகாரிகளின் பிரச்சினை அல்ல என்று எனக்கு தெரியும். மேல் இடத்தில் உள்ள கழுதைகளுக்கு இது தெரியாது.
6ஆம் திகதி (நாளை மறுதினம்) ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் ஒன்றும் உள்ளது. இதன்போது இங்குள்ள பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாட வேண்டும்.
இவ்விடத்தில் எமக்கு தடங்கல் செய்ய வேண்டாம். பொலிஸ் தடுத்தால் நாங்களும் வாகனங்களை விட்டு வீதியினை வழிமறித்து கொண்டு இவ்விடத்திலேயே இருப்போம்.
நீதிமன்ற தடை உத்தரவினை கொழும்பில் வைத்து தந்து இருக்கலாம் தானே என்று கூறியபடி நீதிமன்றம் வழங்கிய தடை உத்தரவினை கிழித்தெறிந்தார்.
நீதிமன்ற தடை உத்தரவினை கடவத்தையில் கொடுத்து இருக்கலாம் தானே, வரக்காபொல,குருநாகல், தம்புள்ளை இடங்களில் சரி, வைத்து கொடுத்து இருக்கலாம் தானே.
அங்கு பிரபாகரனின் படத்தினை கொண்டு செல்கின்றார்கள். ஆனால் படையினர் ஒன்றும் செய்யவில்லை.
சிங்களவர்களுக்கு மட்டுமே இப்படி செய்கின்றீர்கள். எங்களுடன் பிரச்சினை ஏற்படுத்தி கொள்ளவேண்டாம் என ஞானசார தேரர் கொதிப்படைந்து பேசியிருந்தார்.
இதேவேளை மட்டக்களப்புக்கும் கொழு ம்புக்கும் இடையிலான புகையிரதப் போக்குவரத்தை பொது பல சேனா அமைப்பினர் நேற்று சனிக்கிழமை முழுநாளும் தடை செய்து விட்டதனால் மட்டக்களப்பு-கொழும்பு புகையிரத போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்ததாக புகையிரத நிலைய அதிபர்கள் தெரிவித்தனர்.
கொழும்பிலிருந்து வந்த புகையிரதம் அசேலபுரவிற்கும் ரிதீதென்ன பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் பொது பல சேனா அமைப்பினரால் தடைப்படுத்தப்பட்டது.
இதனால் கொழும்பிலிருந்து மட்டக்களப்பை நோக்கிச் சென்ற புகையிரதமும் மட் டக்களப்பிலிருந்து கொழும்பை நோக்கிச் வந்த புகையிரதமும் தடைப்படுத்தப்பட்ட நிலையில் சேவையை நிறுத்திக் கொண்டன.வாழைச்சேனையிலிருந்து கொழும்பை நோக்கி காலை 11.35 இற்குப் புறப்பட்ட புகையிரதம் பாதுகாப்புக் கருதி புனானை புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.
கலகமடக்கும் படையினரும், பொலிஸாரும் வழித்துணை வழங்கும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டதன் காரணமாக பொது பல சேனா அமைப்பினரால் தடுத்து நிறுத்தப்பட்ட புகையிரதம் நேற்று மாலை விடுவித்துக் கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக புனானை புகையிரத நிலைய அதிபர் பேரின்பராஜா தெரிவித்தார்.