இந்த கூட்டத்தில் தமிழ் தேசிய முன்னணியின் செயலாளர் எஸ்.கஜேந்திரன், ஈ.பி.ஆர்.எல்.பி.கட்சியின் பொதுச் செயலாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் உட்பட தமிழ் மக்கள் பேரவையின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர். இதன்போது தமிழ் மக்கள் பேரவையின் செயற்பாடுகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. தமிழ் மக்கள் பேரவையுடன் ஏனைய கட்சிகளையும் இணைத்து இதனை கிழக்கில் வலுவானதாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் இங்கு முன்வைக்கப்பட்டன. வடக்கில் இருந்து மாறுபட்ட பல்லின சமூக கட்டமைப்பு கிழக்கில் காணப்படுவதன் காரணமாக அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைக்க வேண்டிய அவசியம் உள்ளதாக இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட புத்திஜீவிகளினால் சுட்டிக்காட்டப்பட்டது. அத்துடன் தமிழரசுக் கட்சி உட்பட தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளையும் உள்வாங்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன. எனினும் தாம் இது தொடர்பில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும் அக் கட்சிகளின் உறுப்பினர்கள் யாரும் ஆதரவினை வழங்குவதில்லை எனவும் ஏற்பாட்டாளர்களினால் கவலை தெரிவிக்கப்பட்டது. தமிழ் மக்கள் பேரவை கட்சி சார்ந்த விடயங்களில் ஈடுபடாது எனவும் அது சிவில் சமூகம் சார்ந்த செயற்பாடுகளை மட்டுமே முன்னெடுக்கும் எனவும் இது தொடர்பில் அரசியல்வாதிகள் சிறந்த தெளினைப் பெறவேண்டும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பில் எழுக தமிழ் நிகழ்வினை நடாத்துவதற்கான தீர்மானம் இங்கு நிறைவேற்றப்பட்டதுடன் அதற்காக கிராம மட்டங்களில் பொதுமக்களை அறிவுறுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் மக்களின் அனைத்து பிரச்சினைகளையும் ஒரே இடத்தில் வெளிப்படுத்தும் வகையில் தமிழ் மக்கள் பேரவையின் எழுக தமிழ் நிகழ்வினை நடாத்துவது எனவும் அது தொடர்பில் தொடர்ச்சியான சந்திப்புகளை நடாத்துவது எனவும் தமிழ் மக்கள் பேரவையின் இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. |
மட்டக்களப்பில் எழுக தமிழ் பேரணிக்கு ஏற்பாடு! - அனைத்துக்கட்சிகளையும் உள்வாங்குமாறு கோரிக்கை
Related Post:
Add Comments