சிறீலங்கா இராணுவத்துக்கும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்குமிடையில் இடம்பெற்றுவரும் பேச்சுவார்த்தை தொடர்பாக தற்போது பாதுகாப்புக் கருதி எந்தவொரு தகவலையும் வெளியிடமுடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் கடற்கரையை அண்டிய மக்களின் வாழ்வாதாரம் நிறைந்த பிரதேசத்தினை இதுவரை இராணுவத்தினர் விடுவிக்கவில்லை. இதனையடுத்து மாவை சேனாதிராஜாவுக்கும் இராணுவத்தினருக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையையடுத்து அப்பிரதேசத்திற்குள் அடங்கும் வீட்டின் உரிமையாளர்களுக்கு மாதாந்த வாடகை செலுத்தப்படும் எனவும் அதற்கான விபரங்களை இராணுவத்தினர் திரட்டும் நடவடிக்கையிலும் ஈடுபட்டனர். ஆனால் அத்திட்டம் தற்போது கைவிடப்பட்டது.
இந்நிலையில், தாம் இராணுவத்தினருடன் பேசி பல விடயங்களை நிறைவேற்றியுள்ளோம் எனவும், முரணான வகையில் உருவாக்கப்பட்ட பல வேலைத்திட்டங்களை நிறுத்தியுள்ளோம் எனவும் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
அத்துடன், மயிலிட்டித் துறைமுகம், பலாலி விமானப்படைத்தளம் ஆகியவற்றை அண்டியுள்ள பிரதேசங்கள் தொடர்பாக பிரதமரிடமும், இந்திய அரசாங்கத்திடமும் பேசியுள்ளோம். காணி தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனும், ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவுடனும் ஜனவரி மாதத்தில் பேசவுள்ளோம். அதில் சாதகமான தீர்வு வருமென எதிர்பார்க்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.