ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் யாழ்ப்பாணத்திற்கான இன்றைய விஜயம் திடீரென இடை நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கான காரணம் எதுவும் உடனடியாக அறிவிக்கப்படவில்லை. ஜனாதிபதி இன்றைய தினம் வருகை தந்து முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் அந் நிகழ்வுகளை தற்போது பிற்போடவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்படி காலை 10.30 மணிக்கு பலாலி வடக்கில் இடம்பெறும் நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் இதன்போது ஜனாதிபதியுடன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியராச்சி, முப்படைகளின் தளபதிகள், வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே, மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கள், யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாய கன், தெல்லிப்பழை பிரதேச செயலகர் ஆகியோரும் கலந்துகொள்ளவிருந்ததாகவும் அறிவிக்கப்பட்டது.
மேலும் வலி.வடக்கு இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் மீள்குடி யேற்றப்பட்ட நிலையில் அவர்களுக்காக அமைக்கப்பட்ட வீட்டுத்திட்டத்தினையும் ஜனாதிபதி பயனாளிகளிடம் கையளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அந்தவகையில் மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்ட பகுதிகளில் தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் 136 வீடுகளும், கோப்பாய் பிரதேச செயலர் பிரிவு -வளலாயில் 101 வீடுகளும் பயனாளிகளிடம் கையளிக்கப்படவுள்ளது எனவும் தொடர்ந்து பலாலி இராணுவ தலைமையகத்தில் இடம்பெறும் யாழ். மாவட்டத்தை சேர்ந்த இளைப்பாறிய இராணுவ வீரர்களை கௌரவிக்கும் நிகழ்விலும் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.
இந்நிகழ்வை தொடர்ந்து பிற்பகல் 2.30 மணிக்கு நாட்டில் முதன்முதலாக தன்னுடைய நேரடிக் கண்காணிப்பில் வடமாகாணத்திற்கானதான குறைகேள் மையத்தினை யாழ்ப்பாணம் பழைய பூங்கா வளாகத்திற்குள் அமைந்துள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் ஜனாதிபதி திறந்து வைக்கவு ள்ளதுடன் அதனை தொடர்ந்து அங்கு இடம் பெறும் நிகழ்விலும் கலந்துகொண்டு பொது மக்களுக்கு உரையாற்றவுள்ளார் எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வுகளை தொடர்ந்து இறுதி நிகழ்வாக மாலை 4.15 மணிக்கு யாழ்ப்பாணம் கோட்டையில் மரநடுகை நிகழ்விலும் கலந்து கொண்டு மரங்களை நாட்டி வைக்கவுள்ளார் எனவும் அத்துடன் யாழ்ப்பாணத்திற்கான நிகழ்வுகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் மாலை 4.45மணிக்கு பலாலியில் இருந்து ஜனாதிபதி கொழும்பு நோக்கி புறப்படுவார் எனவும் நிகழ்ச்சி நிரல் இடப்பட்டிருந்தது.
அத்தோடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பலாலி வடக்கு அல்லது வட மாகாண ஆளுநர் அலுவலகம் ஆகிய இரு இடங்களில் இடம்பெறும் ஏதோவொரு நிகழ்வின் போது வலிவடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தினுள் மக்களிடம் கையளிக்கப்படாதுள்ள காணிகளது மேலதிக விடுவிப்பு தொடர்பாக அறி விக்கவுள்ளார் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே ஜனாதிபதியின் யாழ்ப்பாணத்திற்கான விஜயம் திடீரென இடை நிறுத்தப்பட்டுள்ளது என ஜனாதி பதி செயலக ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இதேவேளை யாழ்.வருகின்ற ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட வேண்டும் என வடக்கு மாகாண உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் அண்மையில் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.