மே மாதத்துக்கு முன் இலங்கை முன்னேற்றத்தை காட்ட வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்


சிறிலங்காவுக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் வழங்குவது தொடர்பான கலந்துரையாடல்களை ஆரம்பிக்க முன்னதாக, மனித உரிமைகள் தொடர்பாக உறுதியான முன்னேற்றங்கள் ஏற்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய- சிறிலங்கா கூட்டு ஆணையத்தின் கீழ் உள்ள நல்லாட்சி, சட்டத்தின் ஆட்சி, மனித உரிமைகள் தொடர்பான செயலணி்க்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையில் நடத்தப்பட்ட இரண்டு நாள் பேச்சுக்களின் போதே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மார்ச் 13, 14ஆம் நாள்களில் இந்தப் பேச்சுக்கள் இடம்பெற்றிருந்தன. இந்தப் பேச்சுக்கள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஐரோப்பிய ஒன்றிய செயலணிக் குழுவினர், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஆகியோரைச் சந்தித்துப் பேச்சு நடத்தினர். இதன் போது அவர்கள், மறுசீரமைப்புகள் தொடர்பான அரசியல் கடப்பாடுகளை முன்நோக்கி நகர்த்துவதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தனர்.

மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக அனைத்துலக கடப்பாடுகளை நிறைவேற்றுவதில் சிறிலங்கா உறுதியான முன்னேற்றத்தை வெளிப்படுத்தியுள்ளதை ஐரோப்பிய ஒன்றியம் கவனத்தில் கொண்டுள்ளது.

நல்லிணக்கம், ஐ.நா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் மேலும் முன்னேற்றங்கள் தேவை என்பதை இரண்டு தரப்புகளும் ஏற்றுக் கொண்டுள்ளன.

கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம், ஊடகம், சிவில் சமூகத்தை வலுப்படுத்தல், பெண்கள், சிறுவர்களின் உரிமைகள், சிறுபான்மையினரின் உரிமைகள், போர் நடந்த பகுதிகளில் காணிகளை துரிதமாக மீள ஒப்படைத்தல், போன்ற விவகாரங்கள் குறித்தும் பேச்சுக்கள் நடத்தப்பட்டன.

அரசியலமைப்பு உருவாக்கம், புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம், தொடர்பாகவும் ஆராயப்பட்டதுடன், மறுசீரமைப்பு செயற்பாடுகளுக்கு நிதியுதவி உள்ளிட்ட வழிகளில் தொடர்ந்து உதவத் தயார் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

சித்திரவதை, பெண்களுக்கு எதிரான வன்முறைகள், ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பன குறித்தும் ஐரோப்பிய ஒன்றியம் கரிசனைகளை வெளிப்படுத்தியுள்ளது.

ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகைக்காக சிறிலங்கா சமர்ப்பித்துள்ள விண்ணப்பம் தற்போது ஐரோப்பிய நாடாளுமன்றத்திலும், பேரவையிலும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. மே நடுப்பகுதி வரையில் இந்த நிறுவனங்கள் இதுபற்றி கலந்துரையாடும்.

மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற விடயங்களில் அனைத்துலக கடப்பாடுகளை நிறைவேற்றுவதில் சிறிலங்கா உறுதியான முன்னேற்றத்தைக் காட்ட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila