தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள்ளும், அதற்கு வெளியேயும் முரண்பாட்டு புயல் வீசிக்கொண்டே இருக்கின்றது. மேலோட்டமாகப் பார்க்கும் எவருக்கும், கூட்டமைப்பு மீது தமிழ் மக்கள் தாயகத்திலும், புலத்திலும் கடும் விமர்சனத்தை முன்வைப்பதாகவே தெரியும்.
அதற்குக் காரணமும் இல்லாமல் இல்லை. இலங்கையில் தமிழ் மக்கள் அரசியல் தீர்வுபெற்று சமத்துவத்துடன் வாழ்வதற்கு,பலமான நிலையில் இருந்துகொண்டு, அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தும் வழிமுறையையே தமிழர் தரப்பு பின்பற்ற வேண்டும் என்பதே யுத்தத்திற்குப் பின்னரான யதார்த்தமாகும்.
அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதையும், இணக்கமாகச் செயற்படுவதையும்,அடிவருடித்தனம் என்றும், துரோகம் என்றும், கூறிப்பழக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு, இன்றைய அரசியல் சூழலில்,அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணக்க இரசியல் அணுகுமுறைகள் விமர்சனத்திற்குரியதாகவே இருக்கும்.
தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கான போராட்டத்தில், அகிம்சை வழிமுறை, ஆயுத வன்முறை என இருவழிகளிலும் முயற்சி செய்து அதில் தோல்வியடைந்துவிட்டனர். வெளிநாடொன்றை பக்கபலமாக வைத்துக்கொண்டு தீர்வைப் பெறுவதற்கான தந்திரோபாயப் போராட்டத்தையும் தமிழர் தரப்பு நடத்த தவறியிருக்கின்றது.
அதாவது இந்திய அரசின் அணுசரனை, அதன் படைகள் ஆகியவற்றை சிங்கள அரசு ஆக்கிரமிப்பு செயற்பாடாக பார்த்தபோது, அதைத் தமிழ்த் தரப்பு தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். அப்படி சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியாவிட்டாலும், இந்தியாவின் தலையீட்டை தமிழ் மக்களின் எதிர்த் திசைக்குத் தள்ளிவிடாமல் வைத்துக்கொண்டு எமது அரசியல் அபிலாஷைகளை நோக்கி நகர்ந்திருக்க வேண்டும்.
தமிழ் மக்கள் சார்பாக அன்று இந்திய அரசு நெருங்கி வந்திருந்ததைப்போல், இனி எக்காலத்திலும் எந்த நாடும் வரப்போவதில்லை. ஆகவே சர்வதேசம் வந்து தமிழர்களுக்கு தீர்வைப் பெற்றுத்தரும் என்பதும் சாத்தியமாகாது.
இந்த நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்தாமல், தமிழ்மக்கள் வேறு எவ்வாறான வழிகளில் அரசியல் உரிமையைப் பெற்றுக்கொள்ளமுடியும்? என்பதுதான் இன்றைய கேள்வியாக இருக்கின்றது. அரசியல் ரீதியாக அரசாங்கத்தை வழிக்குக் கொண்டுவருவதே இன்றைய நிலையில் தமிழ் மக்கள் செய்யக்கூடிய தந்திரோபாய போராட்ட வடிவமாகும்.
அதேவேளை, அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதும், இணங்கிச் செயற்படுவதும், தமிழ் மக்களின் அரசியல் உரிமையை வென்றெடுப்பதற்கான தந்திரோபாயமாகவே இருக்கவேண்டுமே தவிர, அரசியல் சுய லாபங்களைப் பெற்றுக்கொண்டு மக்களை மறந்து அரசின் திட்டத்திற்கு இணங்கிச் செயற்படுவதில்லை.
தற்போதைய நிலையில், சம்மந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர், தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு வலுச் சேர்த்து அரசுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பவர்களாக இல்லாமல்,தமிழ் மக்களுக்கான நீதியை காலம் தாழ்த்தி வலுவிழக்கச் செய்ய நினைக்கும் இலங்கை அரசாங்கத்திற்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தில் காலஅவகாசத்தை பெற்றுக் கொடுப்பவர்களாக இருக்கின்றார்கள்.
இலங்கைக்கு வருகின்ற சர்வதேசப் பிரதிநிதிகளிடம் அரசாங்கத்திற்கு அணுசரனையான கருத்துக்களைக் கூறுகின்றவர்களாகச் செயற்படுகின்றார்கள் என்ற கருத்து தமிழ் மக்களின் பெரும்பாலான மட்டங்களில் ஊருவி தாக்கம் செலுத்துகின்றது என்பதை மறுக்க முடியாது.
ஏற்கெனவே தமிழ் மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்ற பிரதான பிரச்சினைகளான காணாமல் போனோர் பிரச்சினை, தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, குடியிருந்த காணிகளை மீளப் பெற்றுக் கொள்ளும் பிரச்சினை, போர்க் குற்றவிசாரணை, மனித உரிமை மீறல்களுக்கு எதிரான விசாரணைகள் போன்றவற்றுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்வு எதனையும் பெற்றுத் தரவில்லை என்ற விமர்சனங்களும் இருக்கவே செய்கின்றது.
இந்த நிலையில் இலங்கைக்கு கால அவகாசம் தேவை என்ற நிலைப்பாட்டை நியாயப்படுத்திய கூட்டமைப்பின் தலைமைகளின் நிலைப்பாட்டை விமர்சித்தும், எதிர்த்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருக்கும் தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகள் தமது எதிர்ப்பை வெளிப்படையாகவே முன்வைத்திருந்தன.
அவ்வாறு அதிருப்தியையும், விமர்சனங்களையும் முன்வைத்திருந்த கூட்டமைப்பின் கட்சிகளை சமரசம் செய்யும் கலந்துரையாடல் ஒன்று கடந்த வாரம் வவுனியாவில் நடைபெற்றிருந்தது. அந்தக் கூட்டத்தில் தமது நிலைப்பாடு தொடர்பில் எவ்விதமான நியாயங்கள் இருக்கினறன என்பதை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெளிவுபடுத்த முயற்சித்திருக்கின்றார்.
ஆனாலும் சுமந்திரனின் நியாயங்களை ஏற்க முடியாது என்றும், கூட்டமைப்பாக இருக்கும்போது, அரசியல் நிலைப்பாடு மற்றும் பொதத் தீர்மானங்கள் என்பவற்றை அனைத்துக் கட்சிகளுடனும் கலந்துரையாடியே மேற்கொள்ள வேண்டுமே தவிர, ஓரிருவர் தீர்மானத்தை எடுத்துவிட்டு, அது குறித்து கேள்வி எழும்போது அதற்கு நியாயம் கற்பிப்பதை ஏற்க முடியாது என்று கூறி அந்தக் கூட்டத்திலிருந்து ஈ.பி.ஆர்.எல்.எப்பினர் வெளிநடப்புச் செய்திருந்தனர்.
அதைத் தொடர்ந்து கூட்டமைப்பிலுள்ள, புளொட், ரெலோ கட்சியினரும் கடுமையான தொனியில் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தனர். இவ்விதமான குழப்பங்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை துண்டாடி விடுமோ என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமல்லாது, அதற்கு வெளியில் மாற்றுக் கருத்துக்களோடு இருக்கும் தமிழ்க் கட்சிகளும் தமது முரண்பாடுகளை கடந்து தமிழ் மக்களுக்காக ஒன்றுபட வேண்டும் என்றும், மற்றவர்களை ஒன்றுபடுத்தும் முயற்சியை பிரதான கூட்டமைப்பு என்றவகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகளும், அதற்கான அவசியமும் அதிகரித்து வருகின்ற நிலையில்,கூட்டமைப்பு உடைந்துபோவது தமிழர்களின் அரசியல் முயற்சிகளை பின் தள்ளிவிடும்.
எனவே தவறுகள், குறைபாடுகளை இனங் கண்டு அவற்றைத் தீர்ப்பதற்கும், பல் கட்சி ஜனநாயகத்தை மதித்து நடப்பதையும் ஒவ்வொருவரும் உறுதிசெய்வதற்கும் முயற்சிக்க வேண்டும்.
தமிழரசுக் கட்சிக்கு அதன் வளர்ச்சி, எதிர்காலம் என்பவை தொடர்பில் அக்கறையும், தமிழரசுக் கட்சியினர் என்றவகையில், நாடாளுமன்ற உறுப்பினர்களான சம்மந்தன், சுமந்திரன், மாவை சேனாதிராசா, சரவணபவான் போன்றவர்களுக்கு இருக்கலாம்.
அதுபோல் கூட்டமைப்பின் ஏனைய கட்சியினருக்கும் அவர்களுக்கான தனித்துவம், எதிர்காலம் குறித்த அக்கறைக்குரிய முயற்சிகள் இருக்கும் என்பதை உணர்ந்துகொண்டு செயற்படுவதும் அவசியமாகும். இல்லாவிட்டால் இந்த முரண்பாடுகளும், அதிருப்திகளும் மெல்ல கூட்டமைப்பை அரித்து உதிர்ந்து போகச் செய்துவிடும்.
அவ்வாறான நிலை இன்றைய அரசியல் சூழலில் தமிழ் மக்களுக்கு ஆரோக்கியமானதாக இருக்காது.
- ஈழத்துக் கதிரவன்.