நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வு செயலணியின் இறுதி அறிக்கையின் பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் குப்பையில் வீசக்கூடும் என அச்செயலணியின் உறுப்பினர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
சிறிலங்கா அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்கச் செயலணியின் 11 உறுப்பினர்களும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை ஆய்வு செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் இன்னமும் செயல்முறைகளை அறிவிக்கவில்லை. இந்த நிலையானது, முன்னைய அரசாங்கங்களினால் மனித உரிமைகள் விவகாரங்கள் குறித்து அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்கள், குழுக்களினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளுக்கு ஏற்பட்ட கதியே, கலந்தாய்வு செயலணியின் அறிக்கைக்கும் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் தான் ஏற்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
சாந்தா அபிமன்னசிங்கம், விசாகா தர்மதாச, கலாநிதி பர்சானா ஹனீபா, ஜனரஞ்ஜன, பேராசிரியர் சித்ரலேகா மௌனகுரு, மனோரி முத்தெட்டுவேகம, மிராக் ரகீம், பேராசிரியர் கமீலா சமரசிங்க, கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து, பேராசிரியர் தயா சோமசுந்தரம், காமினி வியாங்கொட ஆகியோர் இந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.