போரில் ஈடுபட்ட எந்தவொரு படைவீரரையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த இடமளிக்கமாட்டேன் என குருநாகலில் வைத்து ஜனாதிபதி சூளுரைத்திருந்த மறுநாள் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத்தின் நிறைவேற்று அதிகாரியாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். இறுதிக்கட்ட போரின் போது 58 ஆவது படையணியின் கட்டளைத் தளபதியாக கடமையாற்றியிருந்த மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா போர் குற்றங்கள் உட்பட பாரதூரமான சர்வதேச குற்றங்களுக்கு பதில் கூற வேண்டிய ஒருவர் என்பதை ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் பகிரங்கமாக கூறியிருப்பதாக ஐ.ரி.ஜே.பி என அழைக்கப்படும் தென்னாபிரிக்காவின் ஜொஹன்னஸ்பேர்க்கை தளமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச நீதிக்கும் நியாயத்திற்குமான செயற்திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த நிலையில் இராணுவக் கட்டமைப்பை மறுசீரமைப்பதாகவும் இராணுவத்தின் உயர் பதவிகளுக்கு அதிகாரிகளை நியமிக்கும் போது அவர்களுக்கு இறுதிக்கட்ட போரின் போது இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான கொடூரங்களுடன் தொடர்பிருக்கின்றதா என்பதை விரிவாக ஆராய்ந்து பார்ப்பதாகவும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு தீர்மானங்களின் போதும் அரசாங்கம் இணங்கியிருந்ததாகவும் ஐ.ரி.ஜே.பி கூறியுள்ளது. ஆனால் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடரில் ஐ.நா தீர்மானத்தை நிறைவேற்ற காலஅவகாசம் பெற்றுக்கொண்ட அரசாங்கம் குறித்த கூட்டம் நிறைவடைந்து ஒரு சில தினங்களுக்குள் அங்கு வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் தூக்கி எறிந்து போர் குற்றச்சாட்டுக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டிய மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு இராணுவத்தின் நிருவகிக்கும் உயர் நிலை பதவியை வழங்கி அழகுபார்த்திருப்பதாகவும் இலங்கை மீது யஸ்மின் சூக்கா தலைமையிலான ஐ.ரி.ஜே.பி குற்றசாட்டியுள்ளது. இந்த நடவடிக்கை போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாத்திரமன்றி அரசாங்கத்தின் வாக்குறுதியை நம்பிய சர்வதேச சமூகத்திற்கும் இழைக்கப்பட்ட மிகவும் மோசமான அவமானம் என்றும் ஐ.ரி.ஜே.பி கடுமையாக சாடியுள்ளது. அத்துடன் குற்றச்சாட்டுகளுக்கு முகம்கொடுத்துள்ள தளபதிகளை உயர் நிலை பதவிகள் வழங்கி அழகு பார்க்கும் அரசாங்கம் வெளிநாடுகளுக்கு படையினரை அனுப்பும் போது அவர்கள் தொடர்பில் முழுமையான விசாரணையொன்றை நடத்துவதாக வழங்கியிருக்கும் வாக்குறுதியையும் நம்ப முடியாது என்று சுட்டிக்காட்டியுள்ளது. இதனால் இலங்கைப் படையினரை ஐ.நா வின் அமைதிகாக்கும் படைகளில் இணைத்துக்கொள்வதை உடனடியாக நிறுதிக்கொள்ள வேண்டும் என்றும் ஐ.நா விடம் கோரிக்கை விடுத்துள்ளது. மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் கட்டளையின் கீழ் இயங்கிய 58 ஆவது படையணியே 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவிப் பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டது உட்பட மிகவும் கொடூரமான யுத்தக் குற்றங்கள் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தில் மிக முக்கிய பாத்திரம் வகித்துள்ளதாக சுட்டிக்காட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் சவேந்திர சில்வா தொடர்புபட்ட சில சம்பவங்களையும் யஸ்மின் சூக்கா தலைமையிலான சர்வதேச அமைப்பு பட்டியலிட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு புதுமாத்தளன் வைத்தியசாலை மீது ஷெல் தாக்குதல்களை நடத்திய படையணிகளில் 58 ஆவது படையணியும் ஒன்றாக இருந்ததற்கான சாட்சிகள் ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக் குழுவிற்கு கிடைத்திருந்தது. இந்த தற்காலிக வைத்தியசாலை இயங்கிய இடம் தொடர்பான விபரங்கள் செய்மதி ஊடான ஜி.பி.எஸ் தகவல்கள் இராணுவத்திற்கு வழங்கப்பட்டிருந்தன. அத்துடன் களப்பிற்கு மறுமுனையில் முகாமிட்டிருந்த 58 ஆவது படையணிக்கு வைத்தியசாலையில் இடம்பெறும் நிகழ்வுகளை கண்கூடாக பார்க்கவும் முடிந்திருந்தது. எனினும் போரினால் காயமடைந்த பலர் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் குறித்த வைத்தியசாலை மீது ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. எனினும் பொது மக்கள் அந்த வைத்தியசாலையில் இருக்கவில்லை என தெரிவித்திருந்த சவேந்திர சில்வா அங்க தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரே இருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். எவ்வாறாயினும் காயமடைந்த நிலையில் தாக்குதல்களில் ஈடுபட முடியாத போராளிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவதும் சர்வதுக மனித உரிமை சட்டங்களின் கீழ் யுத்தக் குற்றமே என ஐ.ரி.ஜே.பி கூறுகின்றது. 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் புதுமாத்தளன் பிரதேசத்தை மீளக் கைப்பற்றிக்கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைக்கு தானே தலைமை தாங்கியதாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஏற்றுக்கொண்டிருந்தார். புதுமாத்தளன் பகுதியிலேயே அதிகளவானோர் கொல்லப்பட்டதாக உயிர்தப்பிய மக்கள் தெரிவித்திருந்தனர். ஆளில்லா உளவு விமானங்களின் காணொளிகளையும் தாம் பார்த்துக்கொண்டிருந்ததாகவும் சவேந்திர சில்வா கூறியிருந்தார். இதற்கமைய பெரும் எண்ணிக்கையிலான அப்பாவிப் பொது மக்கள் குறுகிய ஒரு இடத்திற்குள் இருந்ததையும் அவ்வாறான நிலையில் அங்கு தாக்குதல் நடத்தினால் பொது மக்கள் பெருமளவில் உயிரிழக்கலாம் என்பதையும் காயமடையலாம் என்பதையும் முன்கூட்டியே அறிந்துகொள்ள முடிந்திருந்தது என்றும் ஐ.ரி.ஜே.பி சுட்டிக்காட்டுகின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் தகவல்களுக்கு அமைய தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ மற்றும் அரசியல்துறை தளபதிகள் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி சரணடைந்த போது மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அந்த இடத்தில் இருந்துள்ளார். இராணுவத்திடம் சரணடைந்த நூற்றுக்கணக்கான விடுதலைப் புலிகளின் தளபதிகள் உட்பட போராளிகள் கண்மூடித்தனமாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர் அல்லது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இராணுவத்தினரிடம் விடுதலைப் புலிகளின் தளபதிகள் உட்பட போராளிகள் சரணடைந்ததை நேரில் கண்டவர்களின் சாட்சிகளை அடிப்படையாகக் கொண்டு ஐ.ரி.ஜே.பி 2014 ஆம் ஆண்டு தயாரித்திருந்த அறிக்கையில் பெண்களும் குழந்தைகளும் இராணுவத்தினரால் பஸ்களில் ஏற்றிச்செல்லப்பட்டுள்ளனர். வெள்ளைக்கொடி விவகாரம் என அனைவராலும் அறியப்பட்ட கொடூரம் நிகழ்ந்த 2009 மே 18 ஆம் திகதி அதிகாலை குறித்த இடத்தில் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவும் இருந்துள்ளார். இதனை வெள்ளைக்கொடி கொடூரம் நிகழ்ந்த பிரதேசம் அப்போது தனது கட்டுப்பாட்டில் இருந்ததாக சவேந்திர சில்வாவே கூறியதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஐ.ரி.ஜே.பி கூறுகின்றது. யுத்தத்தின் பின்னர் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு தண்டனை கிடைப்பதைத் தடுக்கும் வகையில் தண்டனைகளிலிருந்து விலக்குப்பெறும் ராஜதந்திர பதவியொன்றை வழங்கிய அப்போதைய மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் அவரை ஐ.நா விற்கான பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாகவும் நியமித்திருந்ததையும் ஐ.ரி.ஜே.பி சுட்டிக்காட்டியுள்ளது. |
போர்க்குற்றவாளிக்கு முக்கிய இராணுவப் பதவி - நீதியை எதிர்பார்க்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி!
Related Post:
Add Comments