
எமது அடிப்படை அரசியல் அபிலாசைகளும் அடக்குமுறையின் விளைவான அன்றாடப் பிரச்சினைகளும் எம் தாயக மக்கள் அனைவருக்கும் பொதுவானதே என்பதையும், அதில் வேறுபாடுகள் இல்லை என்பதையும் வடக்கிலும் கிழக்கிலும் எழுச்சியுடன் திரண்ட மக்கள் தெளிவு படுத்தியிருந்தார்கள் என தமிழ் மக்கள் பேரவை இணைத்தலைவர் இருதய வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி. பூ.லக்ஸ்மன் தெரிவித்துள்ளார்.
பிரித்தாளும் சூழ்ச்சிகள் மூலம் தம்மை துண்டாட நினைப்பவர்களுக்கு இது நல்ல பதிலாகவும் அமைந்திருந்தது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் மக்கள் பேரவையின் நிர்வாக சபைக் கூட்டம் திருகோணமலையில் நேற்று இடம்பெற்றது.
இந்த கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
நமது மக்களை நோக்கிய எமது செயற்பாடுகள் இன்னமும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்பதே தற்போதைய அவசரமான தேவையாகும் என கருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கபட எண்ணங்களால் எமது சமூகத்தில் தீர்க்கப்பட வேண்டிய பல முரண்பாடுகள் தற்போது சிலரால் தூண்டப்பட்டு, மக்களை பிரித்தாளும் செயற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றதோடு இதற்கு தமிழர்களில் சிலரும் துணை போகின்றனர்.
சூழ்ச்சிகள் மிகுந்த இந்த காலப்பகுதியில், அரசியல் ரீதியாக மக்களை விழிப்பூட்டல் செய்து ஒன்று திரட்ட வேண்டியது, மக்கள் இயக்கம் எனும் இலக்குடன் இயங்குகிற எமது பொறுப்பாகும்.
எம்மிடையேயான அனைத்துவித பேதங்களையும் களைந்து , தேர்தல் மைய அரசியலைத்தாண்டி, இனத்தின் நலன்கருதி, அனைவரும் கொள்கையின் வழி ஒன்றுபட்டு செய்ற்பட முன்வருமாறு தமிழ் மக்கள் பேரவை சார்பில் அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் பொது அமைப்புகளையும் தொழிற்சங்கங்களையும் வேண்டுகிறேன்.
கொள்கை வழிப்பட்டு ஒன்றிணைந்த, சுயலாப நோக்கற்ற, இலக்கில் தெளிவு கொண்ட மக்களின் போராட்டங்கள் ஒரு போதும் தோற்பதில்லை என்பதை அண்மைக்காலமாக எமது மக்களே நிலமீட்பு போராட்டங்களினூடாக வெளிப்படுதியிருக்கிறார்கள்.
அரசியல் தெளிவுடன் , எவரிலும் தங்கியிராது மக்களே தமக்கான குரல்களை எழுப்ப முன்வரவேண்டும் என்பதும் மக்கள் மயப்பட்ட போராட்டங்களே எமக்கு சாதகமான பலன்களை தரும் என்பதையும் தமிழ் மக்கள் பேரவை ஆரம்பம் முதலே வலியுறுத்தியுள்ளது.
தமிழ் தேசிய அரசியலை ( அரசியல் கோரிக்கைகளை ) முன்னெடுத்தல் என்பது , இன்று வெறுமனே தமிழர்களுக்கும் ஸ்ரீ லங்கா அரசுக்கும் இடையிலான அரசியல் ஊடாட்டம் என்ற நிலையை தாண்டியுள்ளது.
ஸ்ரீ லங்கா அரசு மட்டுமல்லாது பல்வேறு தரப்புகளும் இதில் பங்குதாரகளாக உள்ளார்கள் என்பது வெளிப்படையானது.
அது போலவே, நாமும் எமது நலன்களை முக்கியத்துவப்படுத்தியே எமது நிகழ்ச்சி நிரலையும் அமைத்துக் கொள்ள வேண்டும். எமது நலன்களை, எமது அரசியல் அபிலாசைகளை முக்கியத்துவப்படுத்துவது அல்லது விட்டுக்கொடுக்காதிருப்பது என்பது, எவரினதும் நலன்களுக்கும் எந்தவகையிலும் எதிரானது அல்ல என்பதையும் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.