சிவன் - குருக்கள் விசாரணை இயேசு - அருட்தந்தை தடுத்து வைப்பு புத்தர் - தேரருக்கு முழுச் சுதந்திரம்


நீதி என்றால் என்ன? இந்தக் கேள்விக்கு மனுநீதி கண்ட சோழன், பொற்கைப் பாண்டியன் போன்றவர்கள்தான் பதிலாகுவர்.

கன்றிழந்த பசுவுக்கு நீதி கிடைக்க மனுநீதிச் சோழ மன்னன் தன் மகன் வீதிவிடங்கனை தானே தேர்க்காலில் வைத்துக் கொன்றான்.

பொற்கைப் பாண்டியனோ தன் கையை வெட்டி நீதியை நிலை நாட்டினான்.

நீதி என்பது சகலருக்குமானது. நீதிக்கு முன் சகலரும் சமன் என்பதுதான் நீதியின் தத்துவம். அதனால்தான் நீதி தேவதையின் கண்கள் கறுத்தத் துணியால் கட்டப்பட்டுள்ளது.

அவ்வாறு கண்கள் கட்டப்பட்டது ஏன்? நீதியை  வழங்குபவர் இவர் நமர்; அவர் பிறர் என்று பார்க்கக்கூடாது.
எதிரில் நிற்பது நம் பிள்ளையாயினும் தீர்ப்பு ஒன்றுதான் என்பதாக நீதியின் தீர்ப்பு அமைய வேண்டும்.

ஆனால் இலங்கையில் நீதி என்ற விடயம் இன்னமும் கேள்விக்குரியதாகவே இருக்கிறது.

வித்தியாவின் கொலை வழக்கை கொழும்புக்கு மாற்றினால் நீதி கிடைக்காமல் போகும் என்று மக்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர் எனில் நீதியான தீர்ப்பு இல்லாமல் போய்விடும் என்பதுதான் பொருள்.

ஆக, இந்த நாட்டில் சமாதானம், அமைதி என்பன ஏற்பட வேண்டுமாயின் முதலில் நீதிபரி பாலனம் சமனாக அமைய வேண்டும். 

நீதி பரிபாலனம் அனைவருக்கும் சமமாக அமையுமாக இருந்தால், அரசியல் அமைப்பு, இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சுவார்த்தை என எதுவும் தேவையற்றதாகிவிடும்.

வடக்கு கிழக்கை உயர் நீதிமன்றம் பிரிக்க முடியுமென்றால், அதை இணைக்கவும் அந்த நீதிமன்றால் முடியும்.

தமிழ் அரசியல் கைதிகளை தடுத்து வைப்பதற்கு இடமுண்டாயின் தமிழ் மக்களின் வாழ் விடங்களில் இருக்கக்கூடிய படையினரை உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிடவும் முடியும்.

ஆனால் நீதி ஒரு பக்கமாக நிற்கிறது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச­வை சுனாமி கணக்கு விவகாரத்தில் காப்பாற்றியது நான் விட்ட பெரும் தவறு என்கிறார் ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் சரத் என். சில்வா.

மின்சார நாற்காலியில் இருந்து போர்க் குற்றவாளிகளைக் காப்பாற்றி விட்டேன் என்பதுதான் ஜனாதிபதி மைத்திரியின் கர்ச்சிப்பு.

ஆக, போர்க்குற்றவாளிகள் இப்போது சுதந்திரமாக நடமாடுகின்றனர் என்பது இதன் பொருள்.

நிலைமை இதுவாக இருக்க, கடந்த சில நாட்களுக்குள் மும்மதம் சார்ந்த மதகுருமார்களுக்கு நடந்தது என்ன?

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் அருட்தந்தை எழில்ராஜன் பொலிஸாரால் தடுத்து வைத்து விசாரணை; திருநெல்வேலி காளி கோவில் குருக்கள் அலங்கார வளைவின் வடிவம் காரணமாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணை.

இனவாதம், மதவாதம் பேசி இந்த நாட்டின் ஒட்டுமொத்த அமைதிக்கும் குந்தகம் செய்யும் ஞானசார தேரருக்கு முழுச் சுதந்திரம், முழுப் பாதுகாப்பு.

இதுதான் நீதி என்றால் நாடு உருப்படுவது எங்ஙனம்?
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila