மட்டக்களப்பு சல்லித்தீவில் 2 கோடி நிதி ஒதுக்கீட்டில் உருவாக்கப்பட்ட அபிவிருத்தி திட்டம் எங்கே? மோசடி இடம்பெற்றதா?


மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வாகரை சல்லித்தீவில் சுற்றுலாத்துறை மையம் அமைப்பதற்கு 2016 ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டில் சுற்றுலாத்துறை அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட 2 கோடியே 50 இலட்சத்திற்கான அபிவிருத்தி திட்டம் எங்கே போனது? ஒரு வருடங்கள் ஆகியும் குறித்த அபிவிருத்தி திட்டம் நிறைவு செய்யப்படாமைக்கு காரணம் என்ன? என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
2016 ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சல்லித்தீவில் சுமார் 25 மில்லியன் அதாவது 2 கோடி 50 இலட்சங்கள் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட வேண்டிய சுற்றுலா மையம் இதுவரை உரியமுறையில் அமைக்கப்படவில்லை எனவும் அது முழுமையாக முடிவுறுத்தப்படாது இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த அபிவிருத்தி திட்டத்துடன் ஆரம்பிக்கப்பட்ட ஏறாவூர் மற்றும் கல்லடி பிரதேசங்களில் உருவாக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் நிறைவடைந்து அதனை அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தந்த சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் திறந்துவைத்திருந்தார்.

ஏறாவூர் மற்றும் கல்லடி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் நிறைவடைந்த திட்டங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில் வாகரை சல்லித்தீவில் உருவாக்கப்பட்ட திட்டம் மட்டும் நிறைவடையாதது ஏன் என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
வாகரை சல்லித்தீவு திட்டம் மக்களிடம் இதுவரை கையளிக்கப்படாமல் உள்ளது தொடர்பாக சந்தேகமேற்பட்டு ஆராய்ந்த அமைச்சர், உடனடியாக குறித்த திட்டத்தை வாகரை பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்குமாறு பணித்தும் அது குறித்து எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை
ஓட்டமாவடி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம்!

2 கோடி 50 இலட்சம் பெருமதியான குறித்த திட்டத்தினை மட்டக்களப்பு மாவவட்ட செயலகமே பொறுப்பேற்று நடத்தியுள்ளது.
வாகரை பிரதேச செயலாளருக்கு குறித்த திட்டத்தை வழங்க மறுத்த மாவட்ட செயலகம் இன்றுவரை அதனை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படைக்காமைக்கான காரணங்கள் என்ன என்பதை மாவட்ட செயலகம் இரகசியமாக வைத்துள்ளது.
மதிப்பீட்டறிக்கை தகுதிவாய்ந்த பொறியியலாளரால் மதிப்பீடு செய்யப்பட்டிருந்தும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தும் இதுவரை 2017 ஆண்டு மே மாதம் வரை இத் திட்டம் முடிவு பெறாமல் உள்ளமை மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் மதிப்பீட்டில் சொல்லப்படாத சூழலுக்கு பொருத்தமில்லாத இரு இரும்பினாலான கொள்கலன்களை மட்டும் நிறுவியதோடு குறித்த திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கான ஒப்பந்தம் ஓட்டமாவடி பிரதேசத்திலுள்ள ஆறம்சி கொன்ஸ்றக்சன் என்ற நிறுவனம் மேற்கொண்டது என தெரியவந்துள்ளது.
குறித்த நிறுவனம் உரியமுறையில் திட்டத்தை நிறைவு செய்யாமல் மக்களிடம் கையளிக்காமல் விலகியது ஏன்? 2 கோடி 50 இலட்சம்பெறுமதியான வேலைத்திட்டம் அங்கு நடைபெற்றுள்ளதா?
மதிப்பீட்டில் இல்லாத கொள்கலன்கள் இரண்டு மட்டும்தான் இந்த பணத்தின் பெறுமதியா? போன்ற பல கேள்விகள் மக்களால் முன்வைக்கப்பட்டுள்ளது.

இம் மோசடி தொடர்பாக போதிய தகவல்களை தகவலறியும் உரிமைச்சட்டம் ஊடாக பெறுவதற்கு வாகரை சிவில் சமூக அமைப்பு ஒன்று முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
வாகரை சல்லித்தீவு திட்டம் தொடர்பான கோப்புக்கள் கணக்காய்வாளர் நாயகத் திணைக்களத்திற்கு இதுவரை அனுப்பப்படாமல் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதில் கணக்காய்வாளர் நாயகத் திணைக்கள அதிகாரி இது தொடர்பாக இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படும் நிலையில் குறித்த திட்டம் குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சும் நல்லாட்சி அரசாங்கமும் கவனம் செலுத்தவேண்டுமென பொதுமக்கள் கோரியுள்ளனர்.
வாகரை பிரதேச செயலகத்திற்கு தெரியாது செய்யப்பட்ட திட்டம்!
குறித்த திட்டம் சம்பந்தமாக வாகரை பிரதேச செயலக அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது தங்களுக்கும் இத்திட்டத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
இது எமது பிரதேசத்தில் இடம்பெற்றாலும் இதனை நேரடியாக மாவட்ட செயலகமே செய்து வருகின்றது. இதில் எங்களது கண்காணிப்போ அல்லது வேறு எந்த பணியும் எமக்கு வழங்கப்படவில்லை.
குறித்த திட்டம் நிறைவு பெறாத நிலையில் அண்மையில் குறித்த திட்டத்தை எமது பிரதேச செயலகத்தை பொறுப்பேற்று செய்யுமாறு பணிக்கப்பட்டது. ஆனால் அதில் பல குழறுபடிகள் இருப்பதால் அதை பொறுப்பேற்க நாம் முன்வரவில்லை என தெரிவித்தனர்.
மீதிப் பணம் எங்கே?
குறித்த திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 2 கோடியே 50 இலட்சம் நிதியில் சொற்ப அளவு பணமே செலவு செய்யப்பட்டுள்ளது என்பதை திட்டம் நடைபெற்ற இடத்தை நேரடியாக சென்று பார்ப்பவர்கள் அறிந்துகொள்ள கூடியதாக உள்ளது.
அவ்வாறாயின் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட மீதி தொகைக்கு என்ன நடந்தது? ஒருவருட காலமாக குறித்த திட்டம் நிறைவு செய்யப்படாமல் உள்ளதற்கான காரணம் என்ன?
குறித்த திட்டத்தில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதா போன்ற பல்வேறு கேள்விகள் பொதுமக்களினால் எழுப்பப்பட்டுள்ளது. இதற்கு நல்லாட்சி அரசாங்கம் வெகு விரைவில் பதில் வழங்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.
கண்ணை முடிக்கொண்டு இருக்கும் மக்கள் பிரதிநிதிகள்!
மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுபோன்ற அபிவிருத்தி திட்டங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்படுகின்றதா? திட்டத்திற்கான நிதி முறையாக செலவிடப்படுகின்றதா? மாவட்டத்தில் எத்தனை அபிவிருத்தி திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகிறது?
அது எங்கு எங்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது? போன்ற விடயங்களை ஆராய்ந்து அதுகுறித்து கவனம் செலுத்தவேண்டிய மக்கள் பிரதிநிதிகள் திறப்பு விழாக்களிளும் அடிக்கல் நாட்டுவதிலும் நேரத்தை செலவுசெய்து கொண்டு மக்கள் பணம் வீணடிக்கப்படுவதை கண்டும் காணாதது போல் கண்ணை முடிக்கொண்டு திரிவதுதான் இது போன்ற மோசடிகள் இடம்பெற காரணம் என மக்கள் மேலும் கவலை தெரிவித்துள்ளனர்.

Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila