வடக்கு அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பத்தின் பின்னணி என்ன? வடக்கு முதல்வர் விளக்கம்


கடந்த சில தினங்களாக வடக்கு அரசியலில் ஏற்பட்ட குழப்ப நிலைக்கான காரணம் என்ன என்பதை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் விளக்கம் அளித்துள்ளார்.
நல்லூரில் அமைந்துள்ள முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தின் முன்னிலையில் ஒன்றுகூடிய பல்லாயிரக்கணக்கான மக்கள் தமது ஆதரவினை தெரிவித்தனர்.
இதன்போது கருத்து வெளியிட்ட முதலமைச்சர்,
தெற்கு அரசின் சதித்திட்டம் ஒன்றுக்கு அமைவாகவே வடக்கு மாகாண சபையில் குழப்பங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு அங்கமாகவே என் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.
இங்கு திரண்டிருக்கின்ற மக்கள் கூட்டத்தை பார்க்கும் போது, இது வரை காலமும் நாங்கள் செய்ததற்கு ஒரு அர்த்தம் இருக்கின்றது என்பதை உணரக் கூடியதாக இருக்கின்றது. இந்தச் சேவையைத் தொடர்ந்தும் செய்து கொண்டே வருவேன்.எங்களுடைய கடமைகளைச் செய்து கொண்டு வரும் போது பலருக்கு பல பிரச்சினைகள் ஏற்படுகின்றது.
அதனால் தான் பழைய தளபதி சரத் பொன்சேகா இங்கு வந்து சென்ற போது “விரைவில் விக்னேஸ்வரன் தன்னுடைய பதவியைப் பறிகொடுத்து விடுவார்” என்று கூறியிருந்தார். அவர் அவ்வாறு கூறும் போது நான் நினைத்தேன் எனக்கும் அவருக்கும் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை, அவர் ஏன் இவ்வாறு கூறுகின்றார் என்று. இந்த வேளையில் தான் தான் இதன் பின்னணியில் எனக்கு எதிராக சதித்திட்டம் ஒன்று தீட்டப்பட்டிருப்பதை உணர முடிந்தது.

அதில் ஈடுபட்டவர்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை. அமைச்சர்களுக்கெதிரான குற்றச்சாட்டுகள் குறித்து அறிக்கைகள் வெளிவரவிருக்கின்றது. அது தொடர்பில் முதலமைச்சர் இரண்டு வழிகளில் முடிவெடுத்தாக வேண்டும்.அமைச்சர்களைக் காப்பாற்றுவதற்காக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அதில் எது நடந்தாலும் அதைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது என்று அவர்கள் நினைத்திருந்தார்கள்.
அதாவது அவர்களைக் காப்பாற்றினால் குற்றம் செய்தவர்களை இவர் காப்பாற்றி விட்டார் என்று அதை ஒரு காரணமாகக் காட்டி முன்னோக்கியிருப்பார்கள். இப்போது அவர்களைத் தண்டிக்கப் போய், அவர்களைத் தண்டித்தது ஒரு பிழை என்ற முறையிலே இப்பொழுது ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
ஆகவே என்னை வெளியேற்றிவிட வேண்டும் என்ற எண்ணத்திலே தான் அவர்களுடைய நடவடிக்கைகள் அமைந்திருந்தன. அவர்களுடைய உண்ணத்துக்கான பதிலை நீங்கள் கூறிவிட்டீர்கள்.
மக்களுடைய பிரச்சினைகள் பல இருக்கின்றன. அவற்றை நாங்கள் தீர்க்க முனைகின்ற போது தேவையில்லாத விடயங்களைப் பேசிப் பேசிக் காலத்தை வீணடித்து விட்டோம். அந்த அடிப்படையிலே தான் என் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்திருக்கிறார்கள். அது என்ன நடக்கிறது – எவ்வாறு போகப் போகிறது என்பதைப் பற்றி எனக்குக் கவலையில்லை.
ஒன்றே ஒன்றை மட்டும் நான் உங்களுக்குக் கூறுவேன். நாங்கள் தொடர்ந்தும் எங்களுடைய கடமைகளைக் கட்டாயம் செய்வோம். கடமையைச் செய்யும் ஒருவனுக்குத் தோல்வியும் இல்லை : வெற்றியும் இல்லை. அந்த நிலையில் இருந்து நாங்கள் எங்களுடைய கடமைகளைச் செய்ய வேண்டும் என்று தான் விரும்புகிறோம்.
ஒரு சில விடயங்களை நான் இந்த இடத்திலே குறிப்பிட விரும்புகிறேன். இவ்வாறான விசாரணைகள் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை விடுத்ததும் எங்களுடைய உறுப்பினர்கள் தான். தவறுகள் நடைபெறுவதாக எனக்கு சொல்லியிருந்தால் கட்டாயம் நடவடிக்கை எடுத்திருப்பேன்.
அதைவிட்டுத் தங்கள் பேர் பத்திரிகைகளில் வரவேண்டும் என்பதற்காக இயங்கியதனால் தான் நாங்கள் இந்த விசாரணைக்குழுவை அமைத்தோம். விசாரணைக்குழு இரண்டு பேரைக் குற்றவாளிகள் என்று தீர்த்தது. மற்றைய இரண்டு பேர் மீதான குற்றச்சாட்டுகளும் நிருபிக்க முடியாமல் போய் விட்டது. அவர்கள் மீதான முறைப்பாட்டாளர்கள் விசாரணைகளுக்கு வரவில்லை. அதனால் அவர்கள் விடுவிக்கப்பட்டதால், அவர்கள் குற்றவாளிகள் இல்லை என்று அர்த்தம் இல்லை. அதைவிட அவர்கள் சம்பந்தமாக வேறு வேறு குற்றங்களும் அவர்கள் மீது இப்போது கிடைத்திருக்கிறது. இது சம்பந்தமாக மேலும் ஒரு விசாரணை நடைபெறும்.


இது வட மாகாணத்தின் முதலாவது மாகாண சபை. இந்த சபையிலே ஊழல் சம்பந்தமாக நாங்கள் நடவடிக்கை எடுக்காமல் விட்டால் தொடர்ந்தும் இதைத்தான் நாங்கள் சந்திக்க வேண்டி வரும்.இதற்குரிய நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துக் கொண்டு வருகிறோம்.
இவ்வாறான சனக்கூட்டம் எங்களுக்குச் சார்பாக நடக்கும் போது, எங்களுடைய பாதை சரியானது என்பதாக தோன்றுவதாக அவர் மேலும் மேலும் தெரிவித்துள்ளார்.



Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila