காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை எதுவும் நடத்த முடியாது என வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே தெரிவித்துள்ளார்.
காணாமல்போனவர்களின் உறவினர்கள் நடத்திவரும் தொடர் போராட்டம் நேற்று முன்தினம் 100ஆவது நாளை நிறைவு செய்தது.
இந்நிலையில் காணாமல்போனவர்களின் உறவினர்களும் பொதுமக்களும் இணைந்து கிளிநொச்சியில் பிரமாண்டமான மறியல் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
ஏ9 வீதியை மறிப்புச் செய்து நடத்தப்பட்ட போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், இரண்டு வாரங்களுக்குள் காணாமல்போனவர்களின் உறவினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்வதாக ஆளுநர் கூரே உறுதிமொழி வழங்கினார். இவ் உறுதிமொழியை அடுத்து வீதி மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
காணாமல்போனவர்களின் உறவினர்கள் நடத்திய மறியல் போராட்டத்தை முடிவுறுத்தும் வகையில் ஜனாதிபதியைச் சந்திப்பதற்கான ஏற்பாட்டைச் செய்வதாக, ஆளுநர் கூரே வழங்கிய வாக்குறுதி ஏற்புடையது.
ஒரு மாகாணத்தின் ஆளுநர் என்ற வகையில் றெஜினோல்ட் கூரேயின் இவ் உறுதிமொழி மிகவும் சரியானது என்று நினைக்கையில்,
ஆளுநர் கூரே அவர்கள் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பொன்றில்; காணாமல்போனவர்கள் தொடர்பில் விசாரணை எதுவும் நடத்த முடியாது. யாரைச் சந்தித்தாலும் இதுதான் முடிவு எனக் கருத்துரைத்துள்ளார்.
இங்குதான் ஆளுநர் கூரே தான் வடக்கின் ஆளுநர் என்பதை மறந்து தன்னை ஒரு சிங்கள இனத்தவராக - பேரினவாத சிந்தனையுடையவராகக் காட்டிக் கொள்கிறார்.
வன்னிப் போர்க்காலத்திலும் வன்னிப் போரின் இறுதி நாட்களிலும் காணாமல்போனவர்கள் பலர்.
அவர்களைத் தேடி இன்று வரை அவர்களின் உறவினர்கள் கண்ணீரும் கம்பலையுமாக அலைந்து திரிகின்றனர்.
படையினரிடம் ஒப்படைத்த என் பிள்ளை எங்கே என்று கேட்கின்ற ஒரு தாயின் பரிதவிப்பை புரிந்து கொள்வதென்பது இந்த நாட் டின் ஜனாதிபதி முதல் சமானியர்கள் வரை கட்டாயமானதாகும்.
என் பிள்ளை வருவான் என்ற நம்பிக்கை யோடு எட்டு ஆண்டுகளுக்கு மேலாகக் காத்திருக்கும் பெற்றோர்களின் - உறவினர்களின் மனங்களை பாதிக்காமல் கருத்துரைப்பது மனித பண்பாகும்.
இதைவிடுத்து காணாமல்போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்த முடியாது என்றால்,
நடத்திய விசாரணைகளுக்கு நடந்தது என்ன? அந்த விசாரணைகள் ஏன் நடத்தப்பட்டன என்ற கேள்விகள் எழும்.
எதுவாயினும் காணாமல்போனவர்கள் என்ற பிரச்சினை இந்த நாட்டில் இன்று வரை கண்ணீர் சிந்த வைக்கிறது.
எனவே இந்தப் பிரச்சினையை மனிதாபிமானத்துடன், கழிவிரக்கத்துடன் பார்க்க வேண்டும்.
மருந்துக்கேனும் கண்டபாட்டில் கதைத்து நொந்து போயுள்ள மக்களின் மனங்களை மேலும் நோகடித்து விடாதீர்கள் என்பது நம் தாழ்மையான கோரிக்கை.