இந்தியாவில் தலைமறைவாக முற்பட்டவேளை கைது செய்யப்பட்ட, யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளின் முக்கிய சூத்திரதாரிகளை விரைவில் இலங்கைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத குழுக்களை இயக்கி வருபவர்கள் என பொலிஸாரால் தேடப்பட்டு வந்த தேவா, பிரகாஸ் உட்பட மூன்று முக்கிய நபர்கள் கடந்த 30ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு இந்தியா திருச்சியில் வைத்து இந்திய உளவுத்துறை பொலிஸாரால் (கியூ பிரிவு) கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவர்களுக்கு எதிராக கொலை, கப்பம், சட்டவிரோத குழுக்களை உருவாக்குதல், வாள்வெட்டு சம்பவங்கள், பெற்றோல் குண்டு தாக்குதல் போன்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் யாழ்ப்பாணம், சுன்னாகம், மானி ப்பாய் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் பதிவுகள் காணப்படுவதாகவும் இவர்கள் உடனடியாக இலங்கையில் தேடப்படும் குற்றவாளிகள் என இலங்கை பொலிஸாரால் இந்திய பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இவர்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான சட்டரீதியான ஏற்பாடுகளை இலங்கை குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவர்களுடன் தொடர்புடைய ஏனைய நபர்களை சமூக வலயத்தளங்கள் ஊடாக கண்காணித்து விரைவில் கைது செய்வதற்கான விசேட நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.