உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13 வது பன்னாட்டு மாநாட்டிற்கு எதிர்வரும் 5ம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும்போது வடக்கு முதலமைச்சரினை சந்திப்பதாக எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தனால் வழங்கப்பட்ட உறுதி மொழி தமிழரசுக்கட்சியினரது அழுத்தங்களையடுத்து கைவிடப்பட்டுள்ளது.தனது யாழ்ப்பாண விஜயத்தின் போது புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தனை சந்திக்கவுள்ளதாக இரா.சம்பந்தன் தெரிவித்திருந்த போதும் அந்த சந்திப்பினில் தற்போது சித்தார்த்தன் ஆர்வம் காட்டியிருக்கவில்லையென தெரியவருகின்றது.
வடமாகாணசபையின் சுழற்சி முறையிலான உறுப்பினர் பதவி தனது கட்சிக்கு வழங்கப்படவேண்டுமென த.சித்தார்த்தன் இரா.சம்பந்தனிற்கு கடிதம் எழுதியிருந்தார்.இக்கடிதம் தொடர்பினில் தனது 5ம் திகதிய விஜயத்தின் போது பேசலாமென இரா.சம்பந்தர் தெரிவித்திருந்தார்.
எனினும் தன்னிச்சையாக தமிழரசுக்கட்சியால் உறுப்பினராக நியமிக்கப்பட்ட ஜெயசேகரன் தனது பதவியினை நேற்று ஏற்றுக்கொண்டுவிட்ட நிலையினில் இனிமேல் அவ்விடயம் தொடர்பினில் இரா.சம்பந்தனுடன் பேச சித்தார்த்தன் விருப்பம் கொண்டிருக்கவில்லையெனவும் சொல்லப்படுகின்றது.
வுடமாகாணசபையினில் முதலமைச்சரிற்கு எதிராக கொண்டுவரப்படவிருந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தையடுத்து ஏற்பட்ட குழப்பங்களையடுத்து முதலமைச்சரினை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து சுமூக நிலையினை தோற்றுவிக்குமாறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டது.
இதனையடுத்து கொழும்பினில் இரா.சம்பந்தன் -சி.வி.விக்கினேஸ்வரன் சந்திப்பு இடம்பெற்றிருந்தது.
இச்சந்திப்பின் போது வடமாகாண அமைச்சர்களான சத்தியலிங்கம்,பா.டெனீஸ்வரன் ஆகிய இருவரையும் பதவி நீக்கம் செய்யவேண்டாமெனவும் இவ்விடயங்கள் தொடர்பினில் பங்காளிக்கட்சிகளை யாழ்ப்பாணத்தினில் வைத்து கலந்து சந்திக்கவும் சம்பந்தரால் உறுதி மொழி வழங்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனும் அமைச்சரவை மாற்ற முயற்சிகளை கைவிட்டிருந்தார்.
எனினும் யாழ்ப்பாணத்தினில் பங்காளிக்கட்சிகளுடனான சந்திப்பினை தமிழரசுக்கட்சி விரும்பியிராமையால் தற்போது அக்கூட்டம் கைவிடப்பட்டுள்ளது.
இதனிடையே இரா.சம்பந்தன் வழங்கிய உறுதி மொழிகளை அமுல்படுத்தாத நிலையினில் அமைச்சர்கள் மாற்றம் மற்றும் விசாரணை நடவடிக்கைகளினை மீள ஆரம்பிக்கவேண்டுமென முதலமைச்சர் ஆதரவு தரப்பும் பங்காளிக்கட்சிகளும் குரல் எழுப்பத்தொடங்கியுள்ளன.
Add Comments