சிறப்பு
இந்தத் திருநாளில் விநாயகப்பெருமான் அடியவர்கள் அதிகாலையிலேயே எழுந்து நீராடி, வீட்டைக் கழுவி சுத்தம் செய்வர். வாசலிலே கோலமிடுவர். மாவிலை, தோரணம், தென்னங்குருத்து வாழை கொண்டு ஆலயத்தையும், வீடுகளையும் அலங்கரிப்பர்.
களிமண்ணால் செய்த புதுப் பிள்ளையாரை பூஜை அறையில் உள்ள மரப் பீடத்தில வைத்து மலர் மாலைகள், நகைகள் அணிவித்து அலங்காரம் செய்து வழிபாடு இயற்றுவர். இந்த மரபு இந்து மக்களிடையே தொடர்புற்று இன்றும் நிலவி வருகிறது.
அவதாரம்
விநாயகப் பெருமானின் அவதாரம் குறித்துப் பல கதைகள் பேசப்படுகின்றன. அவற்றுள் யானைமுகம் பெற்ற கதை அற்புதமானது. அருள் விற்பன்னமானது.
கஜமுகாசுரன் என்ற ஒரு கொடிய அரக்கன் இருந்தான். அவன் மாகத முனிவருக்கும்,வீபூதி பெற்ற அசுர மாதுக்கும் பிறந்தவன். சிவபெருமானை நோக்கிப் பல்லாண்டு காலம் தவம் புரிந்தான்.
அதன் பயன் கொண்டு சிவப் பரம்பொருளின் அருட்காட்சியை கண்டு கொண்டான். அந்த சந்தர்ப்பத்திலே சிவபெருமான் கஜமுகாசுரனை நோக்கி, “உனக்கு என்ன வரம் வேண்டும்..?” என்று கேட்டார்.
இறையருள் வரம்
கஜமுகாசுரன் பதிலுரைத்தான், “எனையாளும் பரம்பொருளே….! தேவரும்,மூவரும் எனக்கு அடங்கியிருக்க வேண்டும். எல்லோரையும் வெற்றி கொள்ளும் வீரமும் வலிமையும்,சாவு இல்லாத தகைமையும் வேண்டும்.” என்று விழித்தான்.
இறைவரம் தனை தான் விரும்பிய விதமே பெற்றான்.வரத்தைப் பெற்றுக்கொண்டவன் அமைதியாக இருக்கவில்லை. மிகுந்தசெருக்குடன் தேவர்களையும், முனிவர்களையும் துன்புறுத்தினான்.
அவர்களை வன்ம எண்ணங்கொண்டு அடக்கினான். மாலயானதி வானவர்களைப் பிடித்து இழுத்துக் கொண்டு வருமாறு கட்டளையிட்டான். அவனுடைய ஏவலர்களும் கட்டளைக்குப் பணிந்தனர். திருமால், திசைமுகன், இந்திரன் முதலிய இமையோர்களை ஆர்த்து ஈர்த்து வந்தார்கள்.
துன்ப மிகுதி
மனம் பூரித்து உள மகிழ்ந்தான் கஜமுகாசுரன். அவர்களை நோக்கி, “ஏ தேவர்களே…! நீங்கள் என்முன் இரு காதுகளையும் பிடித்துக் கொண்டு அனுதினமும் காலை,உச்சி மாலை என மூ வேளையிலும் 1008 தோப்புக் கரணம் போட வேண்டும்” என்று கட்டளையிட்டான்.
தேவர்கள் அச்சம் கொண்டனர்.கட்டளைப்படியே மூ வேளையும் 1008 தோப்புக்கரணங்களைப் போட்டனர். களைப்படைந்து அயர்ந்து போயினர். மிக மனம் வருந்தி வாடினர். துயர மிகுதியால் திருக்கயிலை மலை சென்று சிவபெருமானை வணங்கினர்.
அருட்பெருங்கடலே கஜமுகாசுரனுடைய கொடுமையால் நாங்கள் அதிக துன்பங்களை அனுபவித்து விட்டோம். எங்களைக் காத்தருள வேண்டும். அதுவே தேவரீரது கடன் என்று முறையிட்டனர்.
இனியும் எம்மால் இத்தகு துயரங்களைத் தாங்க இயலாது. எமைக் காத்தருளீர் என அவன் தாழ் பணிந்து வேண்டினர். கயிலை நாதர் வேண்டுதலை ஏற்றார். கருணை புரிந்தார்.
காத்தருளல்
தனக்கு அருகாமையில் வீற்றிருந்த விநாயகப் பெருமானைக் கடைக் கண்ணால் பார்த்தருளினார். விநாயகரை யானை முகத்தோடும், மனித உடலோடும் தோற்றுவித்து கஜமுகாசுரனை அழித்து வரும்படி அனுப்பி வைத்தார்.
விநாயகப் பெருமான் மணித் தேர் மீது ஆரோகணித்தார். வில்,வாள் முதலிய படைக்கலங்களைத் தரித்தபடி பூத கணங்கள் புடைசூழப் போருக்குப் புறப்பட்டார். போர்ப் பறைகள் முழங்கின. வானவர்கள் மகிழ்ந்தனர்.
விண்ணும் மண்ணும் அதிர்ந்தன. பூத கணங்களும்,அசுர கணங்களும் போர் புரிந்தன. இறுதியில் விநாயகப் பெருமான் கஜமுகாசுரனோடு கடும்போர் புரிந்தார்.
விநாயகர் ஏவிய கணைகள் யாவும் கஜமுகன் மீது வீழ்ந்தன. பாறையில் வீழ்ந்த மழைத்துளிகள் போல கூர் மழுங்கின.
இந்த சந்தர்ப்பத்திலே “கஜமுகாசுரனை எப்படைகளாலும் அழிக்க முடியாது. அவன் அழியாத மாயாவரம் பெற்றவன்” என்ற அசரீதி எழுந்தது. மாயாவரம் பெற்ற இவனை தந்தத்தால் அழிப்பேன் என விநாயகர் திருவுளம் கொண்டார்.
தமது திருமுகத்தில் உள்ள வலக்கொம்பை முறித்தார். சிவமந்திரத்தை உச்சரித்தபடி கொம்பை ஏவினார். ஞான வடிவான தந்தம் கஜமுகாசுரனைப் பிளந்தது.
மாயாவரம் பெற்ற கஜமுகாசுரன் பெருச்சாளி வடிவம் பெற்றான். விநாயகரை எதிர்த்து மீண்டும் போர் புரிய வந்தான். விநாயகர் கருணை கூர்ந்தார். திருக்காட்சி கொடுத்தார். அவனுடைய அறியாமை அகன்றிட மெய்யுணர்வு பெற்றான். விநாயகரை வணங்கி நின்றான்.
அந்த மூஷிகத்தை விநாயகர் தனது வாகனமாகக் கொண்டருளினார். வானவர்கள் மலர் மழை பொழிந்தனர். விநாயகரைப் போற்றி வணங்கினர்.
அருள் உய்ந்து வாழ்வு தரல்
விநாயகர் மாலயனாதி வானவர்களை நோக்கினார், “உமக்கு என்ன வரம் வேண்டும். கேளுங்கள்..?” என்று கூறினார். அருள் இன்பம் அளித்தார்.
தேவர்கள் “ஆனை முகத்து அண்ணலே நாங்கள் இத்தனை காலம் கஜமுகாசுரனுக்குக் காலை,உச்சி. மாலை என மூவேளையும் ஆயிரத் தெட்டுத் தோப்புக்கரணங்கள் போட்டோம். இனித் தேவரீர் முன் அதனைச் செய்ய அருள்புரிக என்றனர்.
விநாயகப் பெருமான் புன்முறுவல் பூத்தார்.பின்பு, “மூன்று முறை தோப்புக்கரணம் இட்டால் போதும்” எனக் கூறி அருள் உவந்தார். அன்று தொட்டு அமரர்களும்,அடியார்களும் அந்தப் பெருமானுடைய திருமுகப் பொலிவின் முன்பாக நின்று தோப்புக்கரணம் இட்டு வழிபாடு செய்து வரலாயினர்.
விநாயகரது திருவுருவம் முன்பாக தோப்புக்கரணம் இடுவதனால் அறிவு வளர்ச்சியும், உடல் உள நலமும் உண்டாகும். அவருடயை பெருங்கருணைக்கு உரியவர்களாக விளங்குவர்.
ஆக,இத்தகு மகத்துவம் நிறைந்த ஆவணிச் சதுர்த்தித் திருநாளிலே அவதாரம் கொண்ட விநாயகப் பெருமானை வழிபாடு இயற்றுவோம். சகல ஐஸ்வரியச் சிறப்புக்களையும் பெற்று இன்பமாக வாழ்வோம்.