20 ஆவது திருத்தச் சட்டமூலம்; தமிழரசுக்கட்சிக்கு ஈ.பி.ஆர்.எல்.எவ் கண்டனம்!

sureshp

20 வது திருத்தச் சட்டத்தில் உத்தியோகபூர்வமாக திருத்தங்கள் செய்யப்படாத நிலையில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக கூறிக்கொண்டு 20 வது திருத்தச் சட்டத்தை ஆதரிக்க தமிழரசு கட்சியினர் எடுத்திருக்கும் நிலைப்பாட்டை ஈ.பி.ஆர்.எல்.எவ் வன்மையாக கண்டிக்கின்றது. அதேவேளை தமிழரசு கட்சியின் இத்தகைய தீர்மானம் தமிழ் மக்களை நிச்சயமாக படுகுழிக்குள் தள்ளுவதாகவே அமையும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.
சமகால அரசியல் நிலமைகள் தொடர்பாக இன்று சுரேஷ் பிரேமச்சந்திரனின் இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கிறார்.
சந்திப்பில் மேலும் அவர் கூறுகையில்,
நேற்றய தினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் 20 வது திருத்தச் சட்டத்தை தாம் ஆதரிக்கப் போவதாக கூறியிருக்கின்றார். அதற்கு அவர் கூறியிருந்த முக்கியமான காரணம் 20 வது திருத்தச் சட்டத்தில் தாங்கள் கூறியிருந்த சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன என்பதேயாகும்.
அதாவது 20 வது திருத்தச் சட்டத்திற்கு எதிராக உயர் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டிருக்கும் நிலையில் மேற்படி 20 வது திருத்தச் சட்டத்தில் அரசாங்கம் செய்யவுள்ளதாக கூறப்படும் சில திருத்தங்களை சட்டமா அதிபர் நீதிமன்றில் கூறியுள்ளார். அந்த திருத்தங்களின் அடிப்படையிலேயே தங்கள் ஆதரவை வழங்கப் போவதாக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறியதாக ஊடகங்கள் வாயிலாக அறிய கிடைக்கின்றது.
அதன்படி இலங்கையில் ஏதாவது ஒரு மாகாணசபை உரிய காலத்திற்கு முன்னர் கலைக்கப்பட்டால் மிகுதி காலம் 18 மாதங்களுக்கு அதிகமாக இருந்தால் இடைத்தேர்தலை நடத்துவதென்பது ஒரு திருத்தமாம். நாங்கள் கேட்கிறோம் மிகுதி சொற்ப காலத்திற்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு யார் வருவார்கள்? எவரும் வரமாட்டார்கள் காரணம் பெருமளவு பணம் தேவைப்படும்.
இது ஒரு புறமிருக்க 18 மாதங்களுக்கு குறைவாக மாகாணசபையின் மிகுதி காலம் இருந்தால் அந்த காலப்பகுதிக்கான ஆட்சி ஆளுநரிடம் கையளிக்கப்படும். நாங்கள் கேட்கிறோம் இந்த 18 மாதங்களின் ஆட்சியை ஆளுநரிடம் வழங்கினால் குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் கொண்டுவரப்படும்.
பௌத்த மயமாக்கல் சுதந்திரமாக நடக்கும், அரச திணைக்களங்களில் அரசாங்கத்திற்கு சார்பானவர்கள் களமிறக்கப்படுவார்கள். இவ்வாறு தமிழ் மக்களுக்கு பாதகமான பல செயற்பாடுகளை அரசாங்கம் செய்யும். எனவே இவ்வாறான நிலையில் 20வது திருத்தச்சட்டத்தை ஆதரிப்பதை ஈ.பி.ஆர்.எல்.எவ் வன்மையாக கண்டிக்கின்றது.
மேலும் 18 மாதங்களுக்கு அதிகமான காலம் உள்ள நிலையில் மாகாணசபை கலைக்கப்பட்டால் இடைத்தேர்தல் நடத்துவதென்ற தீர்மானம் சிறீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசிய கட்சி, தமிழரசு கட்சி போன்ற பெரிய கட்சிகளுக்கு மட்டுமே பொருத்தமா னதாக அமையும். அவ்வாறான நிலையில் பெரிய கட்சிகளின் இருப்பை நிலை நிறுத்தவே இவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
எனவே 20 வது திருத்தச் சட்டத்தை ஆதரிக்கிறோம் என கூறும் சம்பந்தன், சுமந்திரன் போன்றவர்கள் இந்த விடயத்தை கவனத்தில் கொண்டிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் கவனத்தில் கொண்டிருப்பதாக தெரியவில்லை. அவ்வாறு கவனத்தில் கொள்ளாமல் தீர்மானம் எடுத்திருப்பது ஜனநாயகம், அதிகாரபகடிர்வு பற்றி பேசகூடியவர்களுக்கு அழகானது அல்ல.
இவ்வாறான நிலையில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது ஆதரிக்கிறோம் என கூறுவது மிக வன்மையாக கண்டிக்க வேண்டிய ஒரு விடயமாக உள்ளது. எனவே திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டாலும், படாவிட்டாலும் 20 வது திருத்தச் சட்டத்தை தமிழ் மக்கள் எதிர்க்க வேண்டும், நிராகரிக்க வேண்டும் என அவர் மேலும் கூறியுள்ளார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila