யாழ்ப்பாணத்தின் மூத்த ஊடகவியலாளர்களுள் ஒருவரான ந.பரமேஸ்வரன் மறைந்த கூட்டணி தலைவர் அமிர்தலிங்கத்தின் மகன் பகீரதன் மற்றும் கௌரிகாந்தன் ஆகிய இருவராலும் தாக்கப்பட்டுள்ளார்.சுமார் 32வருட ஊடக வரலாற்றினில் சிறீலங்கா படை அதிகாரிகள் முதல் விடுதலைப்புலிகளது தலைமை வரை கேள்விக்குள்ளாக்கியிருந்த போதும் தனக்கு எந்தவித அச்சுறுத்தலும் இருந்ததில்லை.அதே போன்று தமிழ் ஆயுதக்குழுக்களாலும் இருந்ததில்லை. ஆனால் பகிரங்கமாக தமக்கு வன்முறை தெரியாதென சொல்லிவந்த கூட்டணியினரால் தான் தாக்கப்பட்டமை வேதனையினை தந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இன்று அமிர்தலிங்கத்தின் 90 வது நினைவு தின நிகழ்வுகள் யாழ்.பொதுநூலகத்தினில் நடைபெற்றிருந்தது.இந்நிலையினில் இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக எதிர்க்கட்சித்தலைவராக பதவி வகித்த தமிழன் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்துக்கு சிலை கட்டப்படுவது தொடர்பாக பரமேஸ்வரன் கேள்வி எழுப்பியிருந்தார்.
பயங்கரவாத தடைச்சட்டம் நாடாளுமன்றில் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது தமிழர்களின் தலைவர் என வர்ணிக்கப்பட்ட தளபதி எதிர்க்கட்சித்தலைவர் அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக்கூட்டணி உறுப்பினர்களெவரும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. முன்னாள் இந்நாள் எதிர்க்கட்சித்தலைவர் மற்றும் தமிழர் விடுதலைக்கூட்டணி செயலாளர் நாயகம் வீரசிங்கம் ஆனந்தசங்கரி உட்பட.பயங்கரவாத தடைச்சட்டம் நாடாளுமன்றில் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது, பயங்கரவாத தடைச்சட்டம் ஜனநாயகத்தை குழி தோண்டிப்புதைப்பதற்கான ஒரு சட்டம் அத்துடன் இது தமிழர்களுக்கு எதிரான ஒரு சட்டம் என்று தெரிந்திருந்தும் அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக்கூட்டணி பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிர்ப்புத்தெரிவிக்காமல் விட்டதன் மூலம் தனது வரலாற்றுக்கடமையிலிருந்து தவறி விட்டார்.
கடந்த இருபத்தெட்டு வருடங்களாக வடகிழக்கில் தமிழ் இளைஞர் யுவதிகள் காணாமலாக்கப்பட்டதற்கும், கொல்லப்பட்டதற்கும், சித்திரவதை செய்யப்பட்டதற்கும் தமிழ் மக்கள் சொல்லொணா துன்பங்களை அனுபவித்தமைக்கும் அமிர்தலிங்கமும் தமிழர் விடுதலைக்கூட்டணியும் ஒரு காரணம் என்பதை தமிழ் மக்கள் மறந்து விடக்கூடாதென தெரிவிக்கும் கையடக்க துண்டுபிரசுரத்தை பரமேஸ்வரன் நிகழ்வினில் பங்கெடுத்தவர்களிடையே தனது பெயருடன் விநியோகித்திருந்தார்.
இந்நிலையினில் பரமேஸ்வரனை மண்டபத்திற்கு வெளியே அழைத்துச்சென்று அமிர்தலிங்கத்தின் மகன் பகீரதன் மற்றும் மானிப்பாய் பிரதேசசபையின் முன்னாள் பிரதி தவிசாளர் கௌரிகாந்தன் ஆகிய இருவரும் இணைந்து கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்.
தன் மீதான தாக்குதல் தொடர்பினில் ந.பரமேஸ்வரன் யாழ்.காவல்துறையினில் முறைப்பாடு செய்துள்ளார்.