அரசியல் யாப்பு திருத்தம் தொடர்பாக கூட்டமைப்பிற்குள் முரண்பாடு : மகிந்த ஆட்சியில் என்ன செய்திருப்போம்?

அரசியல் யாப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களிடையே முரண்பாடான கருத்துக்களுக்கு இடமிருக்கக் கூடாது.
இதே திருத்தத்தை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் முன்வைத்திருந்தால் என்ன நிலைப்பாட்டை நாம் எடுத்திருப்போமோ அதே நிலைப்பாட்டைத் தான் இப்போதைக்கும் எடுக்க வேண்டும் என்று கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு - கறுப்பன்கேணி நாகதம்பிரான் ஆலயத்தில் புனரமைப்பு செய்யப்பட்ட பிரதான வாயிலை கையளிக்கும் நிகழ்வின் பின் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர்,
அரசியல் யாப்பு 20ஆவது திருத்தம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களிடையே முரண்பாடான கருத்துக்களுக்கு இடமிருக்கக் கூடாது.
நாடாளுமன்றத்திலும் சரி, மாகாண சபைகளிலும் சரி அதனை நிராகரிக்க வேண்டும். இது தான் என்னுடைய நிலைப்பாடு ஆகும். இதனைத் தான் தமிழ் மக்களும் எதிர்ப்பார்க்கின்றார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
அரசியல் யாப்பு 20ஆவது திருத்தத்திற்கு எதிராக கடந்த மாகாண சபை அமர்வின் போது தனி நபர் பிரேரணை ஒன்றை முன் வைத்தமைக்காக பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டேன்.
அன்று மாலை சபை கூடிய போது நேரமின்மையால் அந்த பிரேரணை சபையில் விவாதிக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 8ஆம் திகதியுடன் கிழக்கு மாகாண சபைக்கு மக்கள் வழங்கிய ஆணை முடிவடைகின்றது. அதற்கு முதல் நாள் 7ஆம் திகதி கிழக்கு மாகாண சபையில் முதலமைச்சரால் அரசியல் யாப்பு 20ஆவது திருத்தம் மாகாண சபையின் அங்கீகாரத்திற்காக முன்வைக்கப்படவிருக்கின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனை நிராகரிக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன்.
குறிப்பாக மாகாண சபைகளுக்கு அதிகாரம் வேண்டும் என குரல் எழுப்புகின்ற நாம் ஒரு போதும் இருக்கின்ற அதிகாரத்தை இழக்க முடியாது.
இதே திருத்தத்தை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் முன் வைத்திருந்தால் என்ன நிலைப்பாட்டை நாம் எடுத்திருப்போமோ அதே நிலைப்பாட்டை தான் இப்போதைக்கும் எடுக்க வேண்டும் அதனை தான் தமிழ் மக்களும் எதிர்பார்க்கின்றார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளது. அந்த அடிப்படையில் ஜனநாயகத்திற்கு விரோதமாகவோ மக்கள் வழங்கிய ஆணைக்கு மாறாகவோ செயல்பட மாட்டாது.
தமிழ் இளைஞர்களின் ஆயுத போராட்டம் காரணமாகவே வட-கிழக்கு இணைப்பு உள்ளிட்ட மாகாண சபை முறையிலான அதிகார பகிர்வு முறை அரசியல் யாப்பு 13வது திருத்தம் மூலம் கொண்டு வரப்பட்டது.
ஆரம்பத்தில் பல அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தன. ஜே.ஆர் முதல் மகிந்த வரையில் அதிகாரத்திலிருந்த ஆட்சியாளர்களினால் கட்டம் கட்டமாக அதிகாரங்கள் குறைக்கப்பட்டன.
கொஞ்சம் எஞ்சியிருப்பதையும் பறிக்க தற்போது முற்படுகின்றார்கள். கிழக்கு மாகாண சபையை பொறுத்த வரை எந்த கட்சியும் அறுதி பெருன்பான்மையுடன் இல்லை. கூட்டு ஆட்சி தான் நடைபெறுகின்றது.
அரசியலமைப்பு 20வது திருத்தம் தொடர்பாக ஆட்சியிலுள்ள கட்சிகளுக்கிடையில் முரண்பாடுகள் உள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவிர்ந்த ஏனைய கட்சிகள் கொண்டுள்ள நிலைப்பாடுகள் பற்றி நாம் பேச முடியாது. அது அவர்களது கட்சியுடன் தொடர்புடைய விடயமாகும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொறுத்த வரை இந்த விடயத்தில் பாரிய பொறுப்புள்ளது. முதலாவது மாகாண சபைக்குரிய அதிகாரத்தை பறிப்பதற்கு இடமளிக்க முடியாது.
அடுத்தது வட மாகாண சபை அதனை நிராகரிக்க தயாராகியுள்ளது. இதே நிலைப்பாட்டை தான் கிழக்கு மாகாண சபையிலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களும் எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்திலும் அது ஒலிக்க வேண்டும். அரசியல் யாப்பு 20ஆவது திருத்த சட்ட வரைபுக்கு முன்பு மாகாண சபைகளின் கருத்துக்களை பெற்றிருக்க வேண்டும்.
அப்படி நடக்கவில்லை. மாகாண சபைகளின் அங்கீகாரத்துடன் தான் அரசியல் யாப்பு 20ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டதாக சர்வதேச சமூகத்திற்கு காட்ட அரசு முற்படுகின்றது.
அதற்காகத் தற்போது மாகாண சபைகளின் அங்கீகாரத்தை கோருகின்றது. இரு மகாண சபைகள் ஏற்கனவே நிராகரித்துள்ளன.
ஒரு மாகாண சபை மட்டும் ஆதரவு வழங்கியுள்ளது. ஏனைய சபைகளில் தடுமாற்றம் காணப்படுகின்றது. அதனை மாகாண சபைகளிடம் திணிக்க அரசு முற்படுகின்றது.
ஒரே நாளில் தேர்தல் நடைபெற வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தாலும் மக்கள் வழங்கிய ஆணைக்கு புறம்பாக மாகாண சபையொன்றின் ஆட்சி நீடிப்பதோ அல்லது சபையை கலைக்கும் அதிகாரம் நாடாளுமன்றிற்கு வழங்கப்படுவதோ ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல.
அரசாங்கத்திலுள்ள சில அமைச்சர்களும், பிரதி அமைச்சர்களும் கூறுகின்றார்கள் அரசியலமைப்பு 20ஆவது திருத்தத்திற்கு மாகாண சபைகளின் அங்கீகாரம் தேவையில்லை என்று.
இதேவேளை, மாகாண சபைகள் நிராகரித்தாலும் சரி ஏற்றுக் கொண்டாலும் சரி 2 / 3 பெரும்பான்மையுடன் நாடாளுமன்றில் நிறைவேற்றப்படும் என மாகாண சபைகளுக்கு சவால் விடும் வகையில் கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றார்கள்.
இது அவர்களுடைய கருத்துக்களாக இருந்தாலும் மாகாண சபைகளின் அதிகாரத்தை தங்களால் பறிக்க முடியும் என்ற அதிகார தோரணையில் விடுக்கப்படுகின்ற எச்சரிக்கையாகும் எனவும் கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila