
தேசியக் கொடி என்பது சிங்கள மக்களை மாத்திரமே
பிரதிபலிக்கின்றது. அவர்களின் மத கலை கலாசாரங்களை மேலோங்கிய நிலையில் அடையாளப்படுத்துகின்றது என்பது தமிழ் மக்களின் நிலைப்பாடு. பேரினவாத சிந்தனையின் வெளிப்பாடாக அமைந்துள்ள தேசியக் கொடியை ஏற்றுவதில்லை என்ற கொள்கை பல தசாப்தங்களாகவே தமிழ் தேசிய உணர்வுமிக்க அரசியல்வாதிகளினால் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது
தேசியக் கொடியை ஏற்ற மறுத்தார் என தெரிவித்து, வடமாகாண கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரனுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. அதேநேரம், அவருடைய அந்த செயற்பாட்டை நியாயப்படுத்தும் வகையிலான கருத்துக்களும் வந்திருந்தன.
தேசிய கொடியை ஏற்ற மறுத்தார் என்பது சர்வேஸ்வரன் மீதான குற்றச்சாட்டாகும். அது தொடர்பாக வெளியிடப்பட்ட விமர்சனங்களில் அரசியல் வக்கிரத் தன்மையையும், சிங்கள பௌத்த அரசியல் போக்கின் ஆதிக்கத்தையும் தெளிவாகக் காண முடிந்தது. அது மட்டுமல்லாமல் தமிழ் அரசியல்வாதிகளின் அரசியல் குரோதப் போக்கையும் அந்த விமர்சனங்கள் வெளிப்படுத்தியிருந்தன.
வவுனியா பரக்கும் மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற அந்தச் சம்பவம் சாதாரணமான ஒன்றாகும். அதனை ஏன் இந்த அளவுக்குப் பெரிதுபடுத்தியிருக்கின்்றார்கள் என்ற ஆதங்கத்தோடு சிலர் வினவியிருந்ததையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
இன்னொரு புறத்தில் இந்தச் சம்பவம், பலரை, தேசிய கொடி மீது, கவனம் செலுத்தி அக்கறை கொள்ளச் செய்திருக்கின்றது. தமிழ் மக்களின் அபிலாஷைகளையும் உள்ளடக்கிய வகையில் தேசியக் கொடி மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்ற சிந்தனையையும், சில அரசியல் தலைவர்களிடத்திலும் மக்கள் மத்தியிலும்,ஏற்படுத்தியிருக்கின்றது.
இவ்வாறு பலரையும் பல கோணங்களில் இழுத்துச் சென்று முக்கியத்துவம் பெற்றுள்ள 'அந்த தேசிய கொடியேற்றல் சம்பவம் பற்றிய சரியான தகவல்கள் வெளியாகியதாகத் தெரியவில்லை. அதேவேளை, இந்தச் சம்பவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அதனை ஊடகங்களில் பெரிதாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சிலர் செயற்பட்டிருக்கின்றார்கள் என்று குறிப்பிட்டிருக்கின்றனர்.
என்ன நடந்தது?
வவுனியா நகருக்குத் தெற்கே சில கிலோ மீற்றர் தொலைவில், ஏ 9 வீதியில் புறநகர்க் கிராமமாக அமைந்துள்ள ஈரப்பெரியகுளம் பரக்கும் மகாவித்தியாலயத்தில் வசதியற்ற மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கும் ஒரு நிகழ்வு பாடசாலை நிர்வாகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அதில் பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் அழைக்கப்பட்டிருந்தார். வவுனியா மாவட்ட வடமாகாண சபை உறுப்பினர் ஜயதிலக்கவின் குறித்தொதுக்கப்பட்ட நிதியில் இருந்து அந்தப் பாடசாலையில் கல்வி கற்கும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் சிலருக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்குவதற்காக இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வின் ஆரம்பத்தில் பௌத்த விகாரையில் பிரார்த்தனை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டபோது ஏனையோர் காலில் சப்பாத்துக்களுடனும் செருப்புக்களுடனும் மலர்கள் வைத்து வணங்கிய போதிலும், தான் இந்து ஆலயத்தில் வணங்கும் முறைக்கமைய செருப்புக்களைக் கழட்டிவிட்டு உள்ளே சென்று வணங்கியதாக அமைச்சர் சர்வேஸ்வரன் கூறினார்.
அதன் பின்னர் ஆரம்பமாகிய மண்டப நிகழ்வுக்கு முன்னதாக கொடியேற்றும் நிகழ்வில், தேசியக் கொடியை ஏற்றி வைக்குமாறு அமைச்சர் சர்வேஸ்வரன் அழைக்கப்பட்டார். அதன்போது நீங்கள் செய்யுங்கள் - 'யு கெரி ஒன் ' என்று சர்வேஸ்வரன் கூறியுள்ளார். அதனையடுத்து இந்த நிகழ்வில் முக்கிய விருந்தினராகக் கலந்து கொண்டிருந்த வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் மு.இராதாகிருஷ்ணன் தேசியக் கொடியை ஏற்றி வைக்க நிகழ்வுகள் தொடர்ந்து இடம்பெற்றன.
வடமாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் தேசிய கொடியை ஏற்றுவதற்குப் பின்னடித்த போதிலும், அல்லது தேசியக் கொடியை ஏற்றுவதற்கு மறுப்பு தெரிவித்த போதிலும் அவ்விடத்தில் தர்க்கம் எதுவும் இடம்பெறவில்லை. நிகழ்வுகள் தொடர்ந்து அமைதியாகவும் சுமுகமாகவும் நடைபெற்று முடிந்தன.
ஆனால், தேசியக் கொடியை ஏற்றி வைக்குமாறு அவருக்கு அழைப்பு விடுத்தது, அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தது எல்லாவற்றினதும் வீடியோ படப்பதிவுகள் உடனடியாக பெரும்பான்மை இன தொலைக்காட்சிச் சேவைகளில் தமிழ் மற்றும் முக்கிய செய்தியாக ஒளிபரப்பப்பட்டதையடுத்து, நாட்டின் தென்பகுதியில் அது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. தொடர்ந்து அந்தச் செய்தி தமிழ் ஊடகங்களிலும் வெளியாகியது. விமர்சனங்களும் எழுந்தன.
விமர்சனங்கள்
அரசியலமைப்பை ஏற்று அதற்கு அமைவாக நடப்பதாகவும், அதனைப் பாதுகாப்பதாகவும் சத்தியப்பிரமாணம் செய்த வடமாகாண அமைச்சர் சர்வேஸ்வரன், தேசியக் கொடியை ஏற்ற மறுத்துள்ளதன் மூலம் அந்த சத்தியப்பிரமாணத்தை மீறியுள்ளார் என்று விமர்சிக்கப்பட்டுள்ளது. கல்வி இராஜாங்க அமைச்சர் இராதா கிருஷ்ணனே சர்வேஸ்வரனின் செய்கையை விமர்சித்திருந்தார். கண்டிக்கத்தக்க வகையில் அவருடைய கருத்து அமைந்திருந்தது. தொடர்ந்து பாராளுமன்றத்தில் இந்த விடயம் விவகாரமாக்கப்பட்டிருந்தது.
தேசியக் கொடியை ஏற்ற மறுத்ததன் மூலம், வடக்கில் இனவாத மனோநிலை வெளிப்பட்டிருக்கின்றது என்ற புதிய கண்டுபிடிப்பை ஜே.வி.பி. வெளியிட்டிருந்தது. அமைச்சர் மஹிந்த சமரசிங்க இன்னும் ஒரு படி மேலே சென்று வடக்கில் சர்வேஸ்வரன் தேசிய கொடியை ஏற்ற மறுத்துள்ள அதேவேளை வடமாகாண முதலமைச்சர் இனவாத கருத்துக்களை வெளியிட்டு வருகின்ற சூழலில் எவ்வாறு மத்தியில் உள்ள அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க முடியும் என வினவியிருக்கின்றார்.
அதேவேளை, இந்தச் சம்பவம் நடந்திருக்கக் கூடாது என்ற வகையில் கருத்து வெளியிட்டுள்ள வடமாகாண முதலமைச்சர், தனது எதிர்ப்பை வேறுவழிகளில் சர்வேஸ்வரன் வெளிப்படுத்தியிருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார். தேசியக் கொடியை ஏற்றுக்கொள்ளாத காரணத்தினாலேயே தேசிய சுதந்திர தின வைபவங்களைத் தவிர்த்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
முதலமைச்சருடைய கருத்தின்படி, வேறு வழிகளில் சர்வேஸ்வரன் தேசியக் கொடியேற்றுவதைத் தவிர்த்திருக்கலாம் - தாமதமாக அந்த நிகழ்வுக்குச் செல்வதன் மூலம் அதனைத் தவிர்த்திருக்கலாம். அல்லது அந்த நிகழ்வையே தவிர்த்திருக்கலாம் என ஆலோசனை கூறுவோரும் இல்லாமல் இல்லை. எது எப்படியானாலும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த வடமாகாண அமைச்சர் ஒருவர் தேசியக் கொடியை ஏற்ற முடியாது என மறுத்துவிட்டார் என்பது பாராளுமன்றம் வரையில் சென்று பல்வேறு தரப்புக்களைச் சேர்ந்தவர்களும் தமக்குத் தெரிந்த அளவில் அதுபற்றிய கருத்துக்களை வெளியிடச் செய்துவிட்டது.
விமர்சனங்களுக்கு அப்பால்....
பலதரப்பட்ட விமர்சனங்களுக்கு அப்பால், தேசியக் கொடியை ஏற்ற மறுத்த சம்பவமானது வெளிப்படுத்தியுள்ள அரசியல் மற்றும் அடிப்படை உரிமை நிலைமைகள் என்ன என்பது முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது.
நாட்டின் அரசியலமைப்புக்கு அமைவாக சத்தியப் பிரமாணம் செய்துள்ள அமைச்சர் ஒருவர் தேசியக் கொடியை ஏற்ற மறுத்திருப்பது, அரசியலமைப்பு விதிகளை மீறியதாகக் கூறப்படுகின்றது. இங்கு அரசியலமைப்பிற்கு அமைவாக சத்தியப்பிரமாணம் செய்வது என்பது, தேசியக் கொடியை மறுப்பு தெரிவிக்காமல் ஏற்றுவேன் என அவர் சத்தியப்பிரமாணம் செய்தாரா என்பது கேள்வியாகின்றது. அவர் செய்த சத்தியப்பிரமாணம் அல்லது, அமைச்சர்களோ பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடக்கம் மாகாண சபைகள், பிரதேச சபைகள் உள்ளிட்ட உள்ளுராட்சி சபைகளின் உறுப்பினர்கள் தமது பதவியேற்பின்போது, செய்கின்ற சத்தியப்பிரமாணம் என்ன என்பது முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது.
ஆறாவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களே முக்கியத்துவம் மிக்கவையாக நோக்கப்படுகின்றன. ஆறாவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் கீழான சத்தியப்பிரமாணம் சொல்வதென்ன?
ஏதாவது அரசியல் கட்சி அல்லது ஏதாவது ஓர் அமைப்பு இலங்கைக்குள் ஒரு தனிநாட்டை உருவாக்குவதற்கான இலக்கை அடிப்படையாகக் கொண்டிருப்பதை ஆறாவது திருத்தச் சட்டம் தடைசெய்துள்ளது. அது மட்டுமல்லாமல் யாராவது தனி நபர் ஒருவர் இலங்கைக்குள்ளேயோ அல்லது இலங்கைக்கு வெளியிலோ, இலங்கைக்குள் தனிநாடு ஒன்றை உருவாக்குவதற்கான நிதியுதவியை வழங்கி ஊக்குவிக்கவோ, அதற்கு ஆதரவாகப் பிரசாரம் செய்யவோ அல்லது சாதாரணமான நிலையில் அத்தகைய செயற்பாட்டிற்கு ஊக்கமளிப்பதையோ, உதவுவதையோ அந்தச் சட்டம் தடைசெய்துள்ளது. நேரடியாக அல்லது மறைமுகமாக இத்தகைய செயற்பாடுகளில் எவரும் ஈடுபடக் கூடாது என்பதையும் அது தடை செய்கின்றது.
அடிப்படை உரிமை மறுப்பு
ஆறாவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமானது தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை அப்பட்டமாக மீறுகின்ற ஒரு சட்டமாக மனித உரிமை செயற்பாட்டாளர்களினாலும், துறைதோய்ந்த அரசியல் நிபுணர்களினாலும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.
மாறி மாறி ஆட்சிக்கு வந்த பேரினவாத அரசாங்கங்களின் செயற்பாடுகளினால், இந்த நாட்டின் தேசிய சிறுபான்மை இனத்தவராகிய தமிழ் மக்கள் தங்களுடைய அரசியல் நிலைப்பாட்டைத் தீர்மானிக்கின்ற சுயநிர்ணய உரிமையை, ஜனநாயகத்திற்கு முரணான தன்மைகளைக் கொண்டுள்ள இந்தச் சட்டம் தடுத்துள்ளது. இதனால் அந்த மக்கள் எண்ணிலடங்காத வகையில் கஷ்டங்களையும் துயரங்களையும் அனுபவித்துள்ளார்கள். இன்னும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சாசனத்தை நிறைவேற்றுவதாகவும், அதனைக் கடைப்பிடிப்பதாகவும் இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டிருக்கின்றது. எல்லா மக்களுக்கும் சுயநிர்ணய உரிமை உண்டு என்பதை அந்த சாசனம் வலியுறுத்துகின்றது. தமது சமூக, பொருளாதார, கலை, கலாசார செயற்பாடுகளை முன்னெடுப்பதற்குரிய தங்களுடைய அரசியல் நிலைமையத் தீர்மானிக்கின்ற உரிமை அவர்களுக்கு இருக்கின்றது என்பதையும் அது சுட்டிக்காட்டுகின்றது.
அந்த வகையில் சுயநிர்ணய உரிமை என்பது எல்லா மக்களினதும் அடிப்படை உரிமையாகும். ஆனால், ஐ.நா. சாசனத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள இந்த அடிப்படை உரிமையை மீறும் வகையில் அந்த உரிமையை மறுக்கும் வகையிலேயே இலங்கையின் ஆறாவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
அந்தச் சட்டத்தின் கீழ் தனிநாடு உருவாக்கத்திற்கு துணைபோக மாட்டேன் என சத்தியப்பிரமாணம் செய்த அமைச்சர் ஒருவரே, தேசிய கொடியை ஏற்ற மறுத்ததன் மூலம் அரசியலமைப்பை மீறியிருக்கின்றார் என்று குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றார்.
தனிநாடு குறித்த சந்தேகம்
இலங்கையைப் பொறுத்த மட்டில் கடந்த ஆறு தசாப்தங்களாக இனப்பிரச்சினை தீர்க்கப்படாமல் புரையோடியுள்ள அரசியல் பின்னணியில் இந்தச் சத்தியப்பிரமாணமே முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. அதாவது அரசியல் உரிமைக்காக ஏங்கும் நிலையில் அதற்கான போராட்டங்களை முன்னெடுத்துள்ள தமிழ் மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் தங்களுக்கான தனிநாடு ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சிகளில் எந்த வேளையிலும் ஈடுபடலாம் - முயற்சிக்கலாம் என்ற சந்தேகம் சிங்கள அரசியல்வாதிகளிடம் வலுவாக நிலவுகின்றது.
இந்த சந்தேகத்தின் அடிப்படையிலேயே தேசிய கொடியை ஏற்ற மறுத்த சம்பவம் சிங்களத் தரப்பு அரசியல்வாதிகளினால் நோக்கப்படுகின்றது. சிங்கள அரசியல்வாதிகள் மட்டுமல்லாமல், வடமாகாண ஆளுநர் போன்ற அரச தரப்பின அரசியல் சார்ந்த உயர்நிலை அதிகாரிகளும் இந்த மாயைக்குள் சிக்குண்டு கிடக்கின்றார்கள்.
தேசிய கொடி என்பது சிங்கள மக்களை மாத்திரமே பிரதிபலிக்கின்றது. அவர்களின் மத கலை கலாசாரங்களை மேலோங்கிய நிலையில் அடையாளப்படுத்துகின்றது என்பது தமிழ் மக்களின் நிலைப்பாடு. பேரினவாத சிந்தனையின் வெளிப்பாடாக அமைந்துள்ள தேசியக் கொடியை ஏற்றுவதில்லை என்ற கொள்கை பல தசாப்தங்களாகவே தமிழ் தேசிய உணர்வுமிக்க அரசியல்வாதிகளினால் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. அஹிம்சை ரீதியில், அரசியல் உரிமைகளுக்கான போராட்டங்களை முன்னெடுத்திருந்த மிதவாதத் தலைவர்களும் அதேபோன்று அஹிம்சை போராட்டங்களில் நம்பிக்கை இழந்து, ஆயுதமேந்தி போராடிய இளம் தலைமுறையைச் சேர்ந்தவர்களும் இந்தக் கொள்கையைக் கடைப்பிடித்து வந்துள்ளார்கள். இன்னும் கடைப்பிடித்து வருகின்றார்கள்.
இத்தகைய ஒரு பின்னணியில்தான் சர்வேஸ்வரன் தேசிய கொடியை ஏற்றாமல் அந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த ஏனையவர்களில் யாராவது ஒருவரை தேசிய கொடியை ஏற்றுமாறு கூறிவிட்டு ஒதுங்கியிருந்தார். இவ்வாறு ஒதுங்கியிருந்ததையே அவர் அரசியலமைப்பை மீறிவிட்டார். தேசிய கொடியை அவமதித்துவிட்டார் என்று பலரும் வியாக்கியானம் செய்துள்ளார்கள்.
புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் தேசிய கொடி விவகாரம் இடம்பெறுமா?
தேசிய கொடிக்கு இழுக்கு ஏற்படுத்தப்பட்டதாகக் கருதப்படுகின்ற ஈரப்பெரிய குளம் பரக்கும் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற சம்பவத்தில் வடமாகாண அமைச்சர் சர்வேஸ்வரன், தேசிய கொடியை உங்களில் யாராவது ஒருவர் ஏற்றுங்கள் எனக் கூறி ஒதுங்கியிருந்தாரே தவிர, தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் அவர் எந்தவிதமான செயற்பாடுகளிலும் ஈடுபடவில்லை. இதனை அந்த நிகழ்வில் நேரடியாகக் கலந்து கொண்டிருந்த அனைவரும் அறிவார்கள்.
அங்கு வீடியோவில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளும் தேசிய கொடிக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையிலோ அல்லது அதனை அவமதிக்கும் வகையிலோ அவர் செயற்படவில்லை என்பதை வெளிப்படுத்தியிருக்கின்றது. ஆயினும், அவர் அந்த இடத்தைவிட்டு அகலாமல், அமைதியாக ஏனையோருடன் பிரசன்னமாக இருந்ததன் மூலம் தேசிய கொடிக்கு கௌரவமளித்துள்ளார் என்றே கூற வேண்டும். தேசிய கொடியை அவர் மனமுவந்து ஏற்றுவதற்கு முன்வரவில்லையே ஒழிய, அதற்குரிய மரியாதையையும் கௌரவத்தையும் அவர் அளித்துள்ளார் என்பது இதில் இருந்து தெளிவாகின்றது.
தேசிய கொடி குறித்த தமிழர்களின் அரசியல் நிலைப்பாடு சிங்கள மக்கள் கொண்டுள்ள உணர்வுக்கு மாறானது. தேசிய கொடியில் இந்த நாட்டின் மற்றுமொரு தேசிய இனமாகிய தமிழ் மக்கள் அரசியல் ரீதியாகவும், கலை கலாசார ரீதியாகவும் பிரதிநிதித்துவப்படுத்தப்படவில்லை என்ற மனக்குறை நீண்ட காலமாகவே நிலவுகின்றது.
இத்தகைய உணர்வைப் பிரதிபலிக்கும் வகையில் தேசிய கொடியை ஏற்றுவதற்கு முன்வராமல் வேறு யாராவது ஒருவரை அதனைச் செய்யுமாறு சர்வேஸ்வரன் கூறியிருந்தார். இதனை விமர்சித்தவர்களில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் ஒருவர். சர்வேஸ் வரனின் நடத்தையானது, போலித் தேசியத்தின் வெளிப்பாடு என அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.
தமிழ்த்தேசியம் என்பது சாதாரணமான ஒரு விடயமல்ல. ஆயுதப் போராட்ட வழி வந்தவர்களைப் பொறுத்தமட்டில், இந்த உணர்வானது, மண்வாசனையுடன் கூடியது. வடக்கு, கிழக்குத் தாயகம் என்ற அடிப் படையில் அந்தப் பிரதேசத்தின் காடு மேடு, வயல்கள், கிராமங்கள் நகரங்கள் என பரந்த அளவில் அவற்றின் புழுதியிலும் சேற்றிலும் பற்றிப் பிணைந்தது. அத்துடன் அது தொப்புள் கொடி உறவு என கூறப்படுகின்ற தமிழ் நாட்டின் மூலை முடுக்குகளுடனும் தொடர்புபட்டு உயிர்த்திருப்பது. அதன் பின்னணியிலேயே தமிழ் மக்களின் நலன்களில் அல்லது அவர்களுடைய அடையாளங்களைக் கொண்டிராத தேசிய கொடியை ஏற்பதில்லை என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்துகின்ற ஒரு சம்பவமாக ஈரப்பெரியகுளம் பரக்கும் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற சம்பவம் நடந்தேறியிருக்கின்றது.
இந்தச்சம்பவம் ஊதிப் பெருப்பிக்கப் பட்டுள்ளதையடுத்து, இலங்கைக்கான புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்தச் சூழலில் நடைமுறையில் உள்ள தேசிய கொடியை சகல மக்களுக்கும் உரிய தாக, சகல மக்களும் உணர்வுபூர்வமாக ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் வடிவமை க்க வேண்டியது அவசியம் என்ற தேவைப் பாட்டை உணர்த்தியிருக்கின்றது. எனவே, உரியவர்கள் இது விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும். கவனம் செலுத்துவார்களா?
பி.மாணிக்கவாசகம்