யாழ். மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் தொடர் மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்படக்கூடிய அபாய நிலை ஏற்பட்டுள்ளது. குடாநாட்டில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை குறைப்பதற்கு வசதியாக தொண்டமனாறு, அராலி, அரியாலை நாவற்குழி பகுதியில் உள்ளவான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
மழை வெள்ளம் சமுத்திரத்துக்கு வெளியேற்றப்படுகின்றது என தடுப்பு அணைகளுக்கு பொறுப்பான உயர் அதிகாரி அறிவித்துள்ளார். யாழ். குடாநாட்டில் கடல் நீர் ஏரியின் உவர்ப்புத்தன்மையை நீக்கி நன்னீர் ஏரியாக மாற்றுவதற்கும் ஏரியுடன் சேர்ந்த கரையோரப்பகுதியை மேய்ச்சல் நிலங்களாகவும் பயிர்ச்செய்கைக்கு ஏற்ற நிலங்களாகவும் மாற்றுவதற்கு வசதியாகவும் சமுத்திரத்தின் உப்புநீர் குடாக்கடல் நீர் ஏரியில் உட்புகாமல் தடுப்பதற்கும் வசதியாக தடுப்பு அணைகள் அமைக்கப்பட்டு தடுப்பு அணையில் குடாநாட்டின் மேலதிகமான மழைவெள்ளத்தை சமுத்திரத்துக்கு வெளியேற்றுவதற்கு வான் கதவுகள் போடப்பட்டுள்ளன.
தொண்டைமானாறு 34 வான் கதவுகளும் அராலி 10 வான் கதவுகளும் அரியாலை 42 வான் கதவுகளும் நாவற்குழியில் 42 வான் கதவுகளும் இணைப்புச் செய்யப்பட்டிருப்பதோடு நீண்டகால நோக்கோடும் கூடிய வேலைத்திட்டமாக குடாக்கடல் நீரேரி வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்தத் தடுப்பு அணையில் தொண்டைமானாறு தடுப்பணையோடு தொடர்பான அபிவிருத்தி வேலைகள் தற்போது 600 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மழை தொடர்ந்து பெய்து வருவதால் வலி.கிழக்கு கோப்பாய் பிரதேச செயலகப் பிரிவு மற்றும் நல்லூர் பிரதேச செயலகப் பிரிவு அரியாலைப்பகுதி அராலிப்பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்படக்கூடிய அபாயநிலை இருப்பதாக அச்சம் தெரிவிக்கப்பட்டது. குடாக்கடல் நீரேரி தடுப்பணை வேலைதிட்டம் மற்றும் பராமரிப்பு வேலைகள் வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தடுப்பு அணை மற்றும் அதனால் ஏற்படக்கூடிய வெள்ளப்பெருக்கு தொடர்பாக தடுப்பணைக்குப் பொறுப்பான உயர் அதிகாரி தகவல் தெரிவிக்கையில்,
”தடுப்பணைகளுக்கு மழை வெள்ள நீர் மட்டம் தொடர்பாக நிர்ணயிக்கப்பட்ட அளவுத்திட்டங்கள் உள்ளன. இந்த அளவுத்திட்டத்தை கருத்தில் கொண்டும் யாழ். மாவட்டத்தின் தொடர்மழை மற்றும் காலநிலையை கருத்தில் கொண்டும் கடந்த எட்டு தினங்களுக்கு முன்னரே நான்கு தடுப்பணைகளில் இருந்தும் மழை வெ ள்ள நீரை சமுத்திரத்திற்கு வெளியேற்றுவதற்கு வசதியாக வான் கதவுகள் திறந்து விடப்-பட்டுள்ளன. எதிர்பார்த்தளவு மழை வெள்ளம் சமுத்திரத்துக்கு வெளியேறிக்கொண்டிருக்கிறது. குடாநாட்டில் நீரேரி கரையோரக் கிராமங்களுக்கு வெள்ளம் ஏற்படலாம் என எதிர்வுகூறப்பட்ட வெள்ளப்பெருக்கு அபாயம் தவிர்க்கப்பட்டுள்ளது” எனத் தெரி-வித்-தார்.