ரெலோவின் உறுதியற்ற முடிவினால் கட்சியிலிருந்து வெளியேறுவதாக பொன்.காந்தன் அறிவித்துள்ளார். ரெலோ கட்சியின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளராக செயற்பட்டுவந்த பொன்.காந்தன் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்வதற்கான முனைப்பில் ஈடுபட்டிருந்ததாக தெரியவருகிறது.
இந்த நிலையில் வீட்டுச் சின்னத்தில் தேர்தலை எதிர்கொள்வதில்லை என்ற முடிவில் மாற்றமில்லை எனத் தெரிவித்து தன்னுடைய முகநூல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இருப்பினும் எந்த சின்னத்தில் போட்டுயிடுவது என்ற முடிவினை அவர் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் பிரத்தியேக செயலாளராக இருந்த காலப்பகுதியில படையினரால் கைது செய்யப்பட்டு நான்காம் மாடியில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட அவர் பின்னர் நிரபராதி என நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
அதன் பின்னரே அவர் ரெலோ கட்சியுடன் இணைந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது, இந்த நிலையில் ரெலோவில் இருந்து வெளியேறும் அவர் உயசூரியன் சின்னத்தில் தேர்தலை சந்திக்கவுள்ளதாக நம்பகரமான தகவல்கள் தெரிவித்தன.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வீட்டுச்சின்னத்தில் நான் தேர்தலில் களம் இறங்கப்போவதில்லை
எதிர்வரும் உள்ளுராட்சி சபை தேர்தலில் இதுவரை தமிழர்களின் அபிலாசைகளின் சின்னமாக கருதப்பட்டதும் தற்பொழுது தமிழர்களின் அவமானத்தின் சின்னமாக கருதப்படும் வீட்டுச்சின்னத்தில் போட்டியிடுவதில்லை என முடிவுக்கு வந்துள்ளேன்.
நான் சார்ந்த தமிழீழ விடுதலை இயக்கம் என்னை வீட்டுச்சின்னத்தில் தேர்தலில் போட்டியிட வைப்பதற்கான முயற்சிகளில் வாதாட்டங்களில் ஈடுபட்டதற்கு அவர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமை மற்றும் அக்கட்சியின் உறுப்பினர்களுடனான நட்புக்கு எந்தப்பங்கமும் இல்லை.ஆனால் தமிழர்கள் தற்பொழுது ஒரு மாற்று அணிக்கான ஏக்கத்திலும் எஞ்சியுள்ள தமது உரிமைகளையாவது பறிபோகாது காப்பாற்ற ஒரு தலைமைத்துவத்தை எதிர்பார்த்திருந்த சூழலில் அதற்கான காலமாக இக்காலம் கனிந்த வேளையிலும் தமிழீழ விடுதலை இயக்கம் தமிழரசுக்கட்சியின் கூட்டு அணியில் இருந்து வெளியேறி சிறந்ததொரு தலைமைத்துவத்துக்கான பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்த்தேன்.
ஆனால் அதை அவர்கள் செய்ய தவறிவிட்டதுடன் தடுமாறியும் விட்டனர் எனவேதான் நான் இந்த முடிவை எடுத்துள்ளேன்.
இது கிளிநொச்சி மக்கள் உள்ளிட்ட எமது மக்களின் நலன் கருதிய காலம் தருகின்ற தீர்மானம். அதை அலட்சியும் செய்ய முடியவில்லை.
கிளிநொச்சி மக்களுக்கு நல்லதொரு பிரதேசசபைகளின் நிர்வாகத்தையும் அபிவிருத்திக்கான வாய்ப்பையும் தமிழர்களின் தேசிய பிரச்சனைக்கான தீர்வுக்கான தன்மானதுடனான தமிழர் என்ற அடையாளத்துடன் பலம்மிக்க தமிழர் தரப்பாக நின்று எனது பங்களிப்பை வழங்க முடிவெடுத்துள்ளேன்.
இந்த முடிவை எனது கிளிநொச்சி மக்களும் எனது நண்பர்களும் ஏற்றுக்கொண்டு என பயணத்திற்கு துணை புரிவார்கள் என நம்புகின்றேன்.
நன்றி.