ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில், 14 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக ஓட்டு போட்டும், அமெரிக்கா தனது மறுப்புரிமை வாக்கை பயன்படுத்தி, அதை நிராகரித்து விட்டது.
இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேம் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தன்னிச்சையாக முடிவு எடுத்து கடந்த 6-ந் தேதி வெளியிட்ட அறிவிப்பு, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த அறிவிப்பின் காரணமாக இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையேயான பதற்றம் மேலும் அதிகரித்து உள்ளது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து உலக நாடுகள் பலவும் அமெரிக்காவுக்கு எதிராக கருத்து தெரிவித்தன. முஸ்லிம் நாடுகள் ஓரணியில் திரண்டு, இந்த முடிவை டிரம்ப் திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றின.
இந்த நிலையில், ஜெருசலேம் விவகாரத்தில் டிரம்ப் தனது முடிவை திரும்பப்பெற வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக அமெரிக்காவின் நெருங்கிய ஆதரவு நாடுகளும் நேற்று வாக்களித்தன.
15 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில், 14 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக ஓட்டு போட்டும், அமெரிக்கா தனது மறுப்புரிமை வாக்கை பயன்படுத்தி, அதை நிராகரித்து விட்டது. கடந்த 6 ஆண்டுகளில் அமெரிக்கா தனது மறுப்புரிமை வாக்கை பயன்படுத்தி இருப்பது இதுவே முதல் முறை ஆகும்.
அமெரிக்காவின் முடிவை நியாயப்படுத்தி பேசிய அந்த நாட்டுக்கான ஐ.நா. சபை தூதர் நிக்கி ஹாலி, “அமெரிக்காவின் இறையாண்மையை காப்பதின் நிமித்தமாக இந்த மறுப்புரிமை ஓட்டை பயன்படுத்துகிறோம். இந்த விவகாரத்தில் ஐ.நா. செய்திருப்பது அவமதிப்பு ஆகும். இஸ்ரேலிய-பாலஸ்தீன மோதலில், நல்லது செய்வதற்கு பதிலாக கூடுதலான தீங்கை ஐ.நா. சபை செய்கிறது என்பதற்கு இந்த தீர்மானம் மேலும் ஒரு உதாரணமாக அமைகிறது” என்று குறிப்பிட்டார்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை அமெரிக்கா மறுப்புரிமை ஓட்டை பயன்படுத்தி நிராகரித்திருப்பதற்கு துருக்கி வருத்தம் தெரிவித்துள்ளது. .
Add Comments