நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிப்பு:  எதிர்பார்ப்புக்களை சிதறடிக்கும் நகர்வுகள்


Maithripala-Sirisena-13-July-15-Prz-media-

எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்தால் ஏமாற்றங்கள் மிகுதியாக இருக்கும் என்பதற்கு நிறைவேற்று அதிகார ஆட்சிமுறை ஒழிப்பு தொடர்பான இலங்கை மக்களின் எதிர்பார்ப்பை  சிறந்த உதாரணமாகக்கொள்ளமுடியும்.
2015ம் ஆண்டில் நிறைவேற்று அதிகார ஒழிப்பை முக்கியமான தேர்தல் வாக்குறுதியாக கொண்டு எதிர்க்கட்சிகள் சார்பில் பொதுவேட்பாளராக களமிறங்கி எதிர்பாராத வகையில் சர்வபலம் பொருந்திய மஹிந்த ராஜபக்ஷவைத் தோற்கடித்தார் மைத்திரிபால சிறிசேன. ஆனால் ஜனாதிபதியாக அவர் தற்போது முன்னெடுத்துவரும் நகர்வுகள் 2021ம் ஆண்டு வரையேனும் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்பதில் எவ்விதமான எண்ணத்தையும் கொண்டிருக்கவில்லை என்பதை கோடிட்டுக்காட்டிநிற்கின்றன.
இந்த நாட்டில் ஜனநாயக மறுமலர்ச்சிக்கு வித்திட்டதாக நம்பப்பட்டதும் அமைச்சர் மங்கள சமரவீரவினால் வானவில் புரட்சியென அடையாளப்படுத்தப்பட்டதுமான 2015 ஆட்சிமாற்ற எதிர்பார்ப்;புக்கள் சில மாற்றங்களுடன் மாத்திரமே முடிந்துபோய்விடும் என்பதைக் கட்டியம் கூறுவதாக ஜனாதிபதியின் நகர்வுகள் அமைந்துள்ளன.
1978ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசியல்யாப்பிற்கு அமைவாக 2015ம் ஆண்டு ஜனவரி 8ம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோது ஜனாதிபதியின் பதவிக்காலம் ஆறுவருடங்கள் என இருந்தது உண்மை. ஆனால் ஜனாதிபதியாகப் பதவியேற்றபின்னர் கொண்டுவந்த 19வது திருத்தத்தின் மூலமாக ஜனாதிபதியொருவர் இருதடவைகளே பதவிக்காலத்தை வகிக்கமுடியும் என்றும் ஒரு பதவிக்காலம் 5 வருடங்களை மாத்திரமே கொண்டிருக்கும் எனவும் முக்கியமான வரையறைகள் உள்ளடக்கப்பட்டன. 
அரசியல்யாப்பின் 19வது திருத்தம் மூலம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிப் பதவியின் அதிகாரங்களை தாமாக முன்வந்து குறைத்துக்கொள்ளுகின்ற உலகின் முதலாவது ஜனாதிபதி என பல தடவைகள் கூறிக்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது அதே 19வது திருத்தமானது 2021ம் ஆண்டுவரை ஜனாதிபதி பதவியைத் தொடர்வதில் ஏதேனும் தடையாக அமையுமா ஆறுவருடங்கள் பதவிவகிக்க வாய்ப்புள்ளதா என உயர்நீதிமன்றத்திடம் கடந்த வாரத்தில் விளக்கம் கோரியமை இன்று பல்வேறு வாதப் பிரதிவாதங்களைத் தோற்றுவித்துள்ளது.
 இலங்கையிலே அரசியல்யாப்பே பிரதானமானது அதன்படியிருக்கின்ற ஜனநாயக உரிமையின் படியே ஜனாதிபதிப் பதவிக்காலம் தொடர்பாக உயர்நீதிமன்றத்திடம் விளக்கம் கோரினேன். உயர்நீதிமன்றம் கூறுகின்ற விளக்கத்தை ஏற்கத்தயார். இன்று வீடுசெல்ல நேர்ந்தாலும் அதற்குத் தயார் என ஜனாதிபதி கடந்த வாரத்திலே குறிப்பிட்டிருந்தார். 
அரசியல்யாப்பிலுள்ள விடயங்கள் தொடர்பாக சட்டவியாக்கியானங்களை முன்னெடுக்கும் தரப்பினர் தமது சட்டநிபுணத்துவத்தை காண்பித்து தம் சார்பு நியாயப்பபாடுகளை வெளிப்படுத்தினாலும் மனச்சாட்சியுள்ள குடிமக்களின் பார்வையில் ஜனாதிபதி சிறிசேனவின் செயற்பாடு மிகுந்த ஏமாற்றத்தைத்தரும் என்பதில் எள்ளவிலும் சந்தேகமில்லை.  
ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட முதல் 100 நாட்களுக்குள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாக ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பாக மைத்திரிபால சிறிசேன வாக்குறுதியளித்தார். சர்வாதிகாரப் போக்கு நிறைந்த மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சியை முடிவிற்கு கொண்டுவந்து தற்போதைய ஜனாதிபதியை பதவியில் நிறுத்துவதற்கு காரணமாக அமைந்த ஆட்சிமாற்றத்தின் பிதாமகராக கருதப்படும் மாதுளுவாவே சோபித தேரரின் பூதவுடலுக்கு முன்பாக நின்று மீண்டுமாக இதே வாக்குறுதியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியிருந்தார். 
 கடந்த காலத்தில் போன்றே நிறைவேற்றதிகாரக் குறைப்பு ஒழிப்பு தொடர்பாக மனங்கவர் வாக்குறுதிகளை அளித்து பதவிக்கு வந்த ஜனாதிபதிகள் பின்னர் பதவிச் சுகத்தை அனுபவிக்கத்தொடங்கியதும் வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்ட வரலாறுகளை மைத்திரியின் நடவடிக்கை மனக்கண்முன் கொண்டுவருகின்றது என்கின்றனர் விமர்சகர்கள்.
ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாக வாக்குறுதி மாத்திரம் வழங்கவில்லை. அவரது பதவிக்காலத்தில் நீதி மற்றும் அரசியல்சாசன விவகார அமைச்சராக இருந்தவருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை 1995ம் ஆண்டு ஜுலை 15ம் திகதி ஒழிக்கப்படும் என காலங்குறித்திருந்தார். ஆனால் அந்த வாக்குறுதி தொடர்பில் கேள்வி எழுப்பியவர்களுக்கு கண்ணீர்புகையும் குண்டாந்தடிப்பிரயோகமுமே பதில்களாக கிடைத்த கசப்பான வரலாறு காட்சிக்குவருகின்றது.  அன்றைய அமைச்சரும் இன்று எதிர்க்கட்சியொன்றின் தலைவராக இருப்பவருமான ஜி.எல். பீரிஸ் அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக் குற்றஞ்சாட்டுவது எத்தகைய இரட்டைவேசம் என்பதை மக்கள் விளங்கிக்கொள்வர்.  
ஆட்சிக்கு வந்து 100 நாட்களுக்குள் முன்னெடுக்கப்படுவதாக கூறப்பட்ட நிறைவேற்றதிகார முறைமை ஒழிப்பு தொடர்பான வாக்குறுதி மீதான எதிர்பார்ப்புக்கள் சிதறடிக்கப்பட்டு விட்டது.  முதலாவது பதவிக்காலத்தில் ஜனாதிபதி சிரிசேன நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பு நடக்கப்போவதில்லை என்பது தெளிவாகிவிட்டது.
இந்த நிலையில் 2019 ல் 2020ம் ஆண்டிற்காக அன்றேல் ஒருவருடம் கழித்து 2020ல் 2021ம் ஆண்டிற்காக இன்னுமொரு ஜனாதிபதித் தேர்தலொன்று நடைபெறுமா என்ற கேள்வி எழுகின்றது. உலகில் நிறைவேற்று அதிகாரத்தை தாமாகக் குறைக்க முன்வந்த ஜனாதிபதி தாமே என்று மட்டும் சிறிசேன கூறியிருக்கவிலலை மாறாக மீண்டும் ஜனாதிபதி பதவிக்காக போட்டியிடப் போவதில்லை எனவும் பகிரங்கமாக கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தமையையும் நினைவூட்ட விரும்புகின்றேன்.
19வது திருத்தமானது ஜனாதிபதி பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் வரையறை கொண்டதெனக் கூறுகின்றபோதிலும் தற்போதைய ஜனாதிபதி போன்று நிறைவேற்றதிகாரத்தைக் கொண்டிருக்குமா அன்றேல் 1978ம் ஆண்டிற்கு முன்பிருந்தது போன்று சம்பிராதாயபூர்வமான ஜனாதிபதி பதவியாக இருக்கும் என்றோ எதனையும் கூறவில்லை. ஆனால் தற்போதைய நிலையில் நோக்குகின்றபோது ஜனாதிபதி சிறிசேன நிறைவேற்று அதிகார பதவியைத் தொடர்வது மட்டுமன்றி நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக இரண்டாவது தவணைக்காகவும் போட்டியிடுவார் எனத் தோன்றுகின்றது. 
அரசியல்யாப்பு மற்றும்  சட்டவியாக்கினாங்கள் எவ்வாறாக இருப்பினும் ஜனாதிபதியின் நகர்வுகள் 19வது திருத்தத்தின் ஆன்மாவாக கொள்ளப்படும் அதிகாரக் குறைப்புடன் இணங்கமானதாக இல்லை என்பதை தெளிவாகக் காண்பித்து நிற்கின்றது. 
ஜனாதிபதி சிறிசேன மீண்டுமாக தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக நேரடியாக கருத்துக்களை இதுவரையில் வெளிப்படுத்தவில்லை. ஆனால் நிறைவேற்று அதிகார ஒழிப்பு தொடர்பாக பேசுவதைத் தவிர்த்துவிட்டார்.
அத்தோடு தனது அமைச்சர்கள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையைத் தொடர வேண்டிய அவசியம் குறித்து பேசுகின்ற போது எதுவிதமான முட்டுக்கட்டைகளையும் போட்டதாகக் காணவில்லை. தொடர்ந்தும் அவர்கள் இதன் தேவைப்பாட்டை நியாயப்படுத்தியே பேசிவருகின்றனர்.
தனிப்பட்ட ரீதியில் பேசுகின்ற போது தமது வாக்குறுதிகளில் இருந்து மாறவில்லை என்பதாக கருத்துரைத்தாலும் அவரது செயற்பாடுகளோ வேறுதிசையில் காய்கள் நகர்த்தப்படுகின்றன என்பதையே புலப்படுத்திநிற்கின்றன.
‘அதிகாரமானது ஒருவரை கறைப்படுத்தும் முழுமையான அதிகாரம் ஒருவரை முழுமையாக கறைப்படுத்தும’ என 19ம் நூற்றாண்டில் பிரித்தானிய அரசியல்வாதியும் வரலாற்றாசிரியரும் எழுத்தாளருமான லோர்ட் அக்டன் கூறிய வார்த்தைகள் 21ம் நூற்றண்டிற்கும் பொருந்தும் என்பதற்கு இலங்கையில் அரங்கேறும் நிகழ்வுகள் சாட்சியம் பகிர்கின்றதென்றால் மிகையல்ல.

ஆக்கம்: நிதர்சனன்
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila