ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பாராளுமன்றத்தில் இல்லாத நிலையில் ஏனைய தரப்பினர் ஒருவருக்கு ஒருவர் திருடர் பட்டம் சூட்டிக்கொண்டு பாராளுமன்றத்தில் சண்டை போடும் நிலைமை இன்று உருவாகியுள்ளது. இரண்டு தரப்பிலும் யார் கள்வர்கள் என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
|
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று பிற்பகல் அனுராதபுரம் சல்காது விளையாட்டரங்கில் இடம்பெற்றது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக்கட்சிகள் அனைத்தும் பங்குபற்றிய இந்த கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றுகையில்-
இந்த நாடு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையின் கீழேயே கட்டியெழுப்பபட்டுள்ளது. எமது கலாசாரம், எமது பாரம்பரியம், எமக்கான கொள்கைகளின் மூலமாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நாட்டினை கட்டியெழுப்பியுள்ளது. இந்த வரலாற்றை யாராலும் நிராகரிக்க முடியாது. எஸ். டபிள்யூ. ஆர். டி பண்டாரநாயக்க எமது தலைவர் அன்று எடுத்த தீர்மானங்கள் கொள்கைகள் மூலமாக அவரை கட்சியின் சில முதலாளித்துவவாதிகளே கொலை செய்தனர். எனினும் அவர் கொள்ளப்பட்டாலும் அவர் எமக்கு வழங்கிய வழிகாட்டலே இன்றுவரையில் எம் மத்தியில் உள்ளது.
அவ்வாறான நிலையில் கடந்த காலம் இலங்கையின் வரலாற்றில் மிகவும் கசப்பான வரலாறாகும். இந்த நாடு ஊழல், குற்றம், சர்வாதிகார பாதையில் பயணிதத் நிலையில் நாம் முன்வந்து நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளோம். இன்று நாட்டுக்கு நேர்மையான, உறுதியான உண்மையான அரசியல் கட்சியொன்று தேவைப்படுகின்றது. மக்களின் உண்மையான பிரச்சினைகளை இனங்கண்டு நாட்டினை கட்டியெழுப்பும் அரசாங்கம் ஒன்று தேவைப்படுகின்றது. அதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பலப்படுத்த வேண்டும். நாட்டினை நேசிக்கும் மக்கள் அனைவரும் ஸ்ரீலங்கா சுதந்தர கட்சியுடன் இணைந்து செயற்பட வேண்டும்.
இந்த நாட்டின் விவசாய மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் தேவைப்பட்ட நிலையில் மொரகஹாகந்த நீர்த்தேக்கத்தை உருவாக்கி அதை அனுராதபுரம் மக்களுக்கு ஒப்படைத்துவிட்டேன். என்னால் செய்யப்பட்ட அதி உயரிய கடமையாக இதனை கருதுகின்றேன். அன்று பலர் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தனர். எனினும் அவற்றை நாங்கள் கருத்தில் கொள்ளவில்லை. இன்று எமது ஆட்சியில் நாம் உருவாக்கிய மொரகஹாகந்த திட்டத்திற்கு உரிமை கொண்டாட சிலர் முயற்சித்து வருகின்றனர். அன்று நாம் மிகவும் கடினமான சூழலில் இதனை இனங்கண்டு மக்களுக்கான தியாகமாக கருதிய வேளையில் அதனை தடுக்கவும் வியாபாரம் செய்யவும் அப்போதே சிலர் முயற்சித்தனர்.
எனது அமைச்சு பதவியை மாற்றி வேலைத்திட்டத்தை தடுக்க அப்போதைய தலைவர்கள் தீர்மானம் எடுத்தனர். அவ்வாறு இருக்கையில் நான் சண்டையிட்டு மீண்டும் அமைச்சை பெற்றேன். எனினும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எனது அமைச்சிற்கு நிதி ஒதுக்கப்பட வில்லை. நான் சர்வதேச நிதியை பெற்று கடினமான முயற்சிகளை கையாண்டேன். அன்று எனக்கு இதற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்குமாயின் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் மொரகஹாகந்த திட்டம் நிறைவேற்றப்பட்டு வடக்கு கிழக்கு வடமேல் மாகாண மக்களுக்கு நீர் கிடைத்து மக்கள் போசாக்குடன் வாழ்ந்திருக்க முடியும். எனினும் எமது கரங்களை கட்டிப்போட்டாலும் எனது தலைமையில் மக்களுக்கு மொரகஹாகந்த திட்டத்தின் மூலமாக பாரிய சேவையினை வழங்கியுள்ளேன்.
நாம் ஊழல் மோசடிகள் இல்லாத நாட்டினை உருவாக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம். எனினும் அன்றும் நான் அதற்கான முயற்சிகளை முன்னெடுத்தேன். கட்சியின் அப்போதைய தலைவர் பாரிய தவறுகளை செய்துள்ளார். கட்சியின் கொள்கையினை அரசாங்கத்தின் கொள்கையினை சரியாக நடத்த தவறிவிட்டார். நான் பல சந்தர்ப்பங்களில் எமது அதிகாரிகளை சரியாக நடந்துகொள்ள வலியுறுத்திய போதும் கட்சியின் தலைவர் அவர்களை தவறாக வழிநடத்தினார். எனது ஆட்சியில் அது இடம்பெறக் கூடாது என்பதற்காகவே நான் தொடர்ச்சியாக எனது அமைச்சர்களுக்கு வலியுறுத்தி வருகின்றேன். பொது மக்களின் சொத்துக்களில் எவரும் கைவைக்க முடியாது. தமது பைகளை நிறைத்துகொண்டு மக்களை தண்டிக்கும் எந்த செயற்பாடுகளுக்கும் எனது கட்சியில் ஒருபோதும் இடமளிக்க மாட்டேன்.
இன்று பாராளுமன்றம் கூடிய போது மிகவும் மோசமான சம்பவம் ஒன்று இடம்பெற்றது . நாம் இன்று அனுராதபுரத்தில் கூடிய நிலையில் பாராளுமன்றத்தில் இருந்த இரண்டு தரப்பும் தம்மை திருடர்கள் என விமர்சித்துக்கொள்கின்றனர். நாம் அங்கு இல்லாத நிலையில் இரண்டு தரப்பினரும் அடித்துக்கொண்டு பாராளுமன்றத்தை அவமதிக்கும் வகையில் செயற்பட்டுள்ளனர். இருவரும் தங்களை திருடர்கள் என கூறிக்கொண்டு விமர்சித்து வருகின்றனர். இன்று அரசியலில் இதுவே இடம்பெற்று வருகின்றது. ஆகவே இவர்களில் யார் திருடர்கள் என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும். இவர்களில் எவரும் தூய்மையான அரசியலை செய்யவில்லை என்பது மக்களுக்கு தெரிந்துவிட்டது.
ஆகவே இவர்களில் யார் திருடர்கள் என்பது அவரவர் மனசாட்சிக்கு நன்றாக தெரியும். எனினும் தூய்மையான ஒரு ஆட்சி அவசியம், பாராளுமன்றம், மாகாணசபை மற்றும் பிரதேசசபை அவசியமாகின்றது. ஆகவே முதலில் நாம் நல்லதொரு கிராமத்தை உருவாக்குவோம், அதன் மூலம் நல்லதொரு நாட்டினை உருவாக்குவோம் அதற்காக நாம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் கைகோர்த்து செயற்படுவோம்.
இன்று புதிய அரசியல் கட்சிகள் உருவாக்கி வருகின்றன. எமக்கு இது பெரிய விடயம் அல்ல. இந்த நாட்டில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளும் பாரிய கட்சிகள். இப்போது உருவாகி வரும் கட்சிகள் பிரதான கட்சிகளை வீழ்த்த முடியாது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை வீழ்த்தவே இவர்கள் முயற்சிக்கின்றனர். இது மீண்டும் ஒருமுறை பண்டாரநாயகாவை கொலை செய்வதற்கு சமமானது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆட்சியை வீழ்த்தினால் என்ன நடக்கும் என்பது மக்களுக்கு தெரியும். அது நாட்டினையும் எமது மக்களையும் தண்டிக்கும் செயட்பாடாகும். புதிய கட்சிகளுக்கு கொள்கை, தன்மைகள் எவையும் இல்லை. ஆட்சியை கையில் எடுக்க முடியாது, வேலைத்திட்டம் ஒன்று இல்லை, ஆகவே அவர்களை மக்கள் ஆதரிக்க முடியாது. மக்களின் உரிமைகள், பாதுகாப்பு, நாட்டினை கட்டியெழுப்ப ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியால் மட்டுமே முடியும்.
அதேபோல் எமது இராணுவத்தை தண்டிக்க போவதாக சிலர் கூறுகின்றனர். இதனை யார் செய்தது. இராணுவத்தை வழிநடத்தி புலிகளை முழுமையாக அழித்த இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை சிறையில் அடைத்தது யார். பொன்சேகாவை தண்டித்த நபர்கள் இன்று எம்மை விமர்சித்து வருகின்றனர். சர்வதேச அழுத்தம் எழுந்தபோது நான் சர்வதேச தலைவர்களை சந்தித்து எமக்கு எதிரான அனைவரையும் எனது பக்கம் இணைத்துக்கொண்டேன். மின்சாரக் கதிரைக்கு கொண்டுசெல்ல இருந்த எமது இராணுவத்தை , சர்வதேச நீதிமன்றுக்கு கொண்டுசெல்ல விருந்த எமது நாட்டினை காப்பாற்றியது நான் என்பதை மறந்துவிட வேண்டாம். எமது நாட்டுக்கு எதிராக பொருளாதார தடைகள், மீன் ஏற்றுமதி, ஆடை ஏற்றுமதி தடைகள் விதித்து நாட்டினை நிராகரித்தனர். ஜனவரி மாதம் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் இடம்பெறவில்லை என்றால் இந்த நாடு பிச்சைக்கார நாடாக மாற்றம் பெற்றிருக்கும். அவ்வாறு இருக்கையில் நாம் தலைமை ஏற்றே இவை அனைத்தையும் மாற்றி சர்வதேசத்தை எமது நண்பர்களாக மாற்றியமைத்தோம்.
நாங்கள் மிகவும் சரியாக புதிய பயணத்தை ஆரம்பித்துள்ளோம் இதில் மக்களை சமூகத்தை நாட்டினை கட்டி எழுப்பும் பயணமாக முன்னெடுத்து செல்கின்றோம். இதில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வெற்றி சின்னத்தில் முன்னோக்கி செல்லும் என்பதை தெரிவிக்கின்றேன். இன்று எமது கூட்டத்தில் வேறு மாவட்ட மக்கள் வரவில்லை. இந்த பிரதேச மக்களே முழுமையாக உள்ளனர். எமது மக்கள் பலம் என்ன என்பதை தேர்தலின் பின்னர் நாம் வெளிபடுத்துவோம். இந்த நாட்டினை விரும்பும், நாட்டினை ஆதரிக்கும் மக்கள் இன்றும் எம்முடன் உள்ளனர் என்பதை வெளிப்படுத்திக் காட்டுகின்றோம். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வரலாற்றில் முதல் தடவையாக சகல பகுதிகளிலும் போட்டியிடுகின்றோம். இதில் எமக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும், மக்கள் எம்முடன் கைகோருங்கள் என்றார்.
|
யார் கள்வர் என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும்! - ஜனாதிபதி
Related Post:
Add Comments