முன்னதாக மஹிந்த ஆட்சிக்காலத்தில் ஈபிடிபி மற்றும் இராணுவம் சகிதம் கேபிள் தொலைக்காட்சியில் கட்டைப்பஞ்சாயத்து நடத்திய டாண் தொலைக்காட்சி நிறுவனம் தற்போது மைத்திரியின் பாதுகாப்பில் இலங்கை காவல்துறையினை பயன்படுத்தி உள்ளுர் கேபிள் இணைப்பாளர்களை மிரட்டுவதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.
அவ்வகையில் யாழ்ப்பாணத்தில் அரச அனுமதி பெறாமல் கேபிள் ரீவி இணைப்புகளை வழங்கிவரும் நிறுவனங்களுக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மஹிந்த அரசில் முறையற்ற வகையில் ஏனைய உள்ளுர் கேபிள் தொலைக்காட்சிகளை முடக்கி அனுமதி பெற்ற டாண் தொலைக்காட்சியின் கேபிள் ரீவி இணைப்புகளை வழங்கும் ஏஎஸ்கே நிறுவனத்தால் இந்த முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
அரச அனுமதி பெறாமல் கேபிள் ரீவி இணைப்புகளை வழங்க கடந்த டிசெம்பர் 31ஆம் திகதியுடன் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவால் தடை விதிக்கப்பட்டது.எனினும் தற்போதும் சட்டவிரோத கேபிள் இணைப்புகளை யாழ்ப்பாணத்திலுள்ள சில நிறுவனங்கள் முன்னெடுத்து வருவதாக குற்றஞ்சாட்டி ஏஎஸ்கே நிறுவனத்தால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டது.
இதேவேளை, ஏஎஸ்கே நிறுவனத்தின் கேபிள் இணைப்புக்கள் யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களில் கடந்த 3 வார காலத்துக்குள் மக்களால் வெட்டித் துண்டாடப்பட்டிருந்தது. அவை தொடர்பில் குடாநாட்டிலுள்ள சில பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டபோதும் அம்முறைப்பாட்டை அவர்கள் பொருட்டாக கருதவில்லை.
இந்நிலையில் டாண் தொலைக்காட்சி உரிமையாளர் தற்போது மைத்திரி கட்சியின் இணைப்பாளராகியுள்ள நிலையில் ஜனாதிபதி செயலகம் ஊடாக பொலிஸாருக்கு நெருக்குதல்களை கொடுப்பதாக சொல்லப்படுகின்றது.